தமிழில் சிறுகதை என்கிற இலக்கிய வடிவம் தோன்றி உருவம் கொள்ளத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்திலேயே அ. மாதவையா, ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், பி.எஸ். ராமையா, லா.ச.ரா, மவுனி, கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம் என முன்னோடிகள் பலரும் இவ்வடிவத்தை மிகவும் மேதமையுடன் பயன்படுத்தியதோடு அல்லாமல் அழியா புகழுடைய பல கதைகளையும் எழுதி உள்ளனர். இவர்களுக்கு பிறகு அடுத்து வந்த அசோகமித்திரன், சு.ரா., ஜெயகாந்தன், கி.ரா., ஆ. மாதவன், நாஞ்சில் நாடன், பூமணி, ராசேந்திர சோழன், பிரபஞ்சன், அம்பை, வண்ணதாசன், வண்ணநிலவன், கந்தர்வன் முதலியோர் தம் கதைகள் வாயிலாக இவ்வடிவத்தின் சாத்தியங்களை அழகியல் ரீதியாகவும், அரசியல் நோக்கிலும் விரிவுபடுத்தினார்கள்.
இவ்விரு தலைமுறைகளுக்கு அடுத்ததாக கோணங்கி, ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், விமலாதித்த மாமல்லன் ஆகியோருடன் எண்பதுகளில் எழுத வந்தவர் சுரேஷ்குமார இந்திரஜித். இம்மூன்றாவது தலைமுறையில் எழுத வந்தவர்களுக்கு இரண்டு பெரிய நெருக்கடிகள் முன்நிபந்தனையாக நின்றன. முதலாவது, முன்னோடிகளின் கதைகளை உள்வாங்கிக்கொண்டு அவற்றை எல்லாம் விஞ்சும் முனைப்போடு தம் படைப்புகளை முன்வைக்க வேண்டியது அவசியம். மற்றது மொழிபெயர்ப்புகள் வாயிலாக பெரிய அளவில் அப்போது அறிமுகமாகி வந்த மொழியியல் மற்றும் சமூக அரசியல் சார்ந்த விமர்சனக் கோட்பாடுகள் பலவற்றிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தமது கதைகள் வாயிலாக முகம் கொடுக்க வேண்டியிருந்த நிர்பந்தம். இவை தவிர்த்து, அக்காலகட்டத்தில் அதிகமாக மொழியாக்கம் செய்யப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின், குறிப்பாக ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க கதைகள் மேற்கத்திய நவீனத்துவத்திற்கு நேரெதிரான தன்மைகள் பலவற்றைக் கொண்டிருந்தன. வரலாறு, கலாசாரம், தொன்மம் முதலியவற்றின் மீதான மறுபரிசீலனையை முன்வைப்பதாக அக்கதைகள் இருந்தன. அவற்றின் தாக்கமும் தமிழ் கதைகளின் மீது எதிரொலித்தன.
“அன்றாட நிகழ்வுகளின் தற்செயல்களில் ஒரு திட்டமிடாத திட்டம் இருக்கிறது அதையே நாம் விதி என்கிறோம். அதன் சூதாட்டத்தை சொற்களின் வழியாக தொடர முனைவதே என் கதைகள்,” என்று கூறும் சுரேஷ்குமார இந்திரஜித் அளவில் சிறிய ஆனால் வித்தியாசமான விவரணை தன்மை உடைய “அலையும் சிறகுகள்” (1983) என்கிற சிறுகதை தொகுப்பின் வழியாக தமிழ் வாசகர்களின் பரவலான கவனத்திற்கு வந்தார். தொடர்ந்து நாளது வரையிலும் சிறுகதைகளில் மாத்திரமே கவனம் செலுத்தி எழுதி வருகிறார். “மறைந்து திரியும் கிழவன்” (1992), “மாபெரும் சூதாட்டம்””, “அவரவர் வழி”, “நானும் ஒருவன்”, “நடன மங்கை”, ”இடப்பக்க மூக்குத்தி”, என நூற்றுக்கும் குறைவான கதைகளை கொண்டிருக்கும் ஏழு தொகுதிகள் இதுகாறும் வெளிவந்துள்ளன.
அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், அவற்றோடு சம்பந்தப்பட்ட நடத்தைகள் ஆகியவற்றில் உள்ள வினோதங்கள், அபத்தங்கள் ஆகியவற்றை உற்று நோக்குவது என்பதை இவருடைய கதைகளின் பொதுவான போக்கு எனலாம். ஒரு தனிமனிதன், குறிப்பாக, படித்த இளைஞன் ஒருவன் வாழ்வை எதிர்கொள்ள இயலாது தத்தளிப்பது குறித்த சித்திரங்களைக் கொண்டது இவருடைய ஆரம்ப கதைகள். தொடர்ந்து மையமற்ற கதை, மறைந்திருக்கும் கதை, புனைவின் வழியாக வரலாற்றை பரிசீலனை செய்தல், கால வரிசையை கலைத்து மாற்றுவதன் மூலமாக கதையை வினோதமாக்குவது என பல யுத்திகளை தனது கதைகளில் முயன்று பார்த்திருக்கிறார்.
இவருடைய சமீபத்திய தொகுப்பான “இடப்பக்க மூக்குத்தி” யில் இடம்பெற்றுள்ள ஒரு கதை “முற்றுப்புள்ளி”. அமெரிக்க வாழ் செல்வந்தனான ராம சுப்பிரமணியன் விடுமுறையில் இந்தியாவிற்கு வரும்போது தனது பாலிய நண்பனை சந்திக்கிறான். அவனிடம் தன் பதின்பருவத்து கனவுப்பெண்ணும் தற்போது வாழ்ந்து கெட்டு வறுமையில் உழலும் முன்னாள் நடன நடிகையுமான ஜெயசுந்தரியை சந்தித்து பண உதவி செய்ய விரும்பும் தனது ஆசையை தெரிவிக்கிறான். இருவரும் அவளை சந்திக்க செல்கிறார்கள். அவளிடம் காண்பிப்பதற்காக அவளுடைய விதவிதமான படங்களை ஒட்டி பாதுகாத்து வைத்திருந்த ஆல்பத்தை வைத்திருந்தவன் திரும்பப் போகும்போது அவளிடமே விட்டு செல்வதாக கதை. ஒரு கதைக்கான நாடகீய தருணம் எதுவுமே இல்லாத சாதாரணமான நிகழ்வு. பத்திரிக்கை செய்தி போன்ற எளிமையான விவரிப்பு. இதை கதையாக்குவது ராம சுப்பிரமணியன் போகிற போக்கில் சொல்லுகிற ஒரு வரிதான். “எங்க அம்மாக்கிட்ட இருந்த ஒரு பூரிப்பு உங்ககிட்ட இருந்துது”. உளவியல் நுட்பமுள்ள அந்த ஒரு வரியை திறந்துக்கொண்டு போனால் முழு கதையுமே வேறு ஒரு நிறத்தில் நம் முன் விரிவதை காணலாம். என்னுடைய கதைகளில் கதை என்பது வெளிப்படையாக இருக்காது. சமூக சிக்கலை, மனதின் சிக்கலை, ஆண் – பெண் உறவு சிக்கலை முன்வைத்து அதற்குள்ளாக மறைந்திருக்கும், என்று தனது முன்னுரை ஒன்றில் கூறுகிறார் சுரேஷ்குமார். அவ்வாறு மறைந்திருக்கும் கதையை கண்டுணர்வதில்தான் வாசகனின் வெற்றியும் எழுத்தாளனின் யுத்தியும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கிறது எனலாம்.
“இடப்பக்க மூக்குத்தி” தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு கதை “வழி மறைத்திருக்குதே”. நந்தனார் சரித்திர கீர்த்தனையில் உள்ள ஒரு பாடலின் முதல் வரி “வழி மறைத்திருக்குதே! மலைப்போல ஒரு மாடு படுத்திருக்குதே!”, என்று தொடங்குகிறது. சங்கீத கச்சேரி ஒன்றில் அதைப்பாட கேட்கும் ஒருவன் தன்னை மறக்க, அவன் நினைவில் எழுகிறது வேறு ஒரு கதை. எவ்வளவோ நாகரீகம் அடைந்து விட்டதாக நாம் கருதிக் கொண்டாலும் இன்றும் இந்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் அநீதியான சம்பவமாகவே அது இருக்கிறது. செய்தி தாளில் ஏதோ ஒரு மூலையில் இடம்பெறும் தகவலாக அதை நாம் படித்துவிட்டு கடந்து போகிறோம். “உற்றுப் பார்க்க சற்றே விலகாதோ மாடு” என்று பாடகர் பாட அவன் தன் கண்ணை துடைத்து கொள்கிறான். நந்தனார் சரித்திர கீர்த்தனை என்ற தகவலில் இருக்கிறது இக்கதைக்கான சாவி. ஒரு சொல்லையும் உரத்து பேசாமலே நம் மனச்சான்றை கேள்விகளுக்கு உள்ளாக்கிவிடுகிறது இக்கதை. இதைப் போலவே பத்திரிக்கை கட்டுரை, செய்தி அறிக்கை போன்ற வடிவங்களில் சமகால அரசியல், சமூக நடப்புகளை விவாதிக்கும் விதமாக “பீகாரும் ஜாக்குலினும்”, “சிறுமியும் வண்ணத்துப்பூச்சியும்”, “கடுரி ரிமொகாவின் பேட்டி அறிக்கை”, என பல கதைகளை எழுதியுள்ளார். வெறும் தகவல் என்பதில் இருந்து எந்தத் தருணத்தில் ஒரு விவரணை புனைவாக மாற்றம் கொள்கிறது என்பதை இக்கதைகளை ஆராய்வதன் வழியாக நாம் கண்டுணர முடியும்.
திரைப்படங்களில் சமீபமாக பயன்படுத்தப்படும் காட்சி ரீதியிலான யுத்தி ஒன்று இருக்கிறது. ஒரு தொடக்கப் புள்ளியில் இருந்து வரிசையாக நிகழும் சம்பவங்களின் கோர்வை ஒன்றை காட்டிவிட்டு பிறகு ‘கட்’ செய்து, அதே தொடக்க புள்ளியில் தொடங்கி அங்கு ஏற்படும் சிறிய மாறுதல் வழியாக பிறிதொரு வரிசையில் நிகழும் சம்பவ கோர்வையை காட்டுவார்கள். இவ்விதமாக ஒரு சமபவத்தை அது சற்றே மாறினால் நிகழ ஏதுவான இரண்டு மூன்று சாத்தியங்களோடு காட்சிப்படுத்துவதன் மூலம் ஒரு வலுவான தாக்கத்தை பார்வையாளர்கள் இடத்தே ஏற்படுத்துவார்கள். காட்சி ரீதியிலான இந்த நுட்பத்தை எழுத்து வடிவிலாக தன் கதைகளில் விரும்பிப் பயன்படுத்துகிறார் சுரேஷ்குமார். “இருள்”, “திரை”, “கடந்து கொண்டிருக்கும் தொலைவு”, “நடன மங்கை”, முதலியவற்றில் இத்தன்மையிலான கதைசொல்லல் முறையை காணலாம்.
சுரேஷ்குமார இந்திரஜித் தன் கதைகளின் வழி அவதானிக்கவும் அவிழ்க்கவும் முனையும் இன்னொரு முடிச்சு என்று காலம் பற்றிய புரிதலை குறிப்பிடலாம். நாள்காட்டி, கடிகாரம், ஆகியவற்றால் அளவிடப்படுகிற, நமக்கு புறத்தே நிகழ்ந்து கொண்டிருக்கிற காலத்திற்கும், அதற்கு தொடர்பற்ற விதமாக நமது அகத்தில் நாம் உணருகிற காலத்திற்கும் இடையிலான முரண்கள், அதனால் நம் நடத்தைகளில் உருவாகும் அபத்தம் போன்றவற்றையும் கதை சொல்ல முயன்றிருக்கிறார். தவிரவும் இறந்த காலத்தை வரலாறு என்ற பெயரில் தமக்கு உகந்த விதமாக உருவமைத்து, நிகழ்காலத்தில் முன்வைப்பதன் மூலமாக, எதிர்காலத்தையும் கட்டுப்படுத்த முயலும் அதிகாரத்தின் குரூரத்தையும் அவரால் தன் கதைகளில் கோடிட்ட முடிந்திருக்கிறது. அவ்வகையில் “காலத்தின் அலமாரி”, “எலும்புக் கூடுகள்”, “மறைந்து திரியும் கிழவன்” ஆகியவை முக்கியமான கதைகள்.
பொதுபுத்தியில் நிலைபெற்றுவிட்டிருக்கும் எண்ணங்களுக்கும் மதிப்பீடுகளுக்கும் ஒத்தொடுவது எழுத்தாளனின் வேலையல்ல. மாறாக அவ்வாறான மதிப்பீடுகளின் மறுபக்கத்தையே அவன் எழுதி பார்க்க வேண்டும் என்று கூறும் சுரேஷ்குமார் “நானும் ஒருவன்”, “மினுங்கும் கண்கள்”, “உறையிட்ட கத்தி”, “கணவன் மனைவி”, “சொப்பன வாழ்வில் மகிழ்ந்து” போன்ற கதைகளில் மனித நடத்தை என்று நாம் நம்புபவற்றின் மறுபக்கத்தை, அதன் விசித்திரத்தை யதார்த்தம் போலவே எழுதி செல்கிறார்.
ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் காரணிகளாக அவனுடைய புற சூழ்நிலைகளைதான் நாம் எப்போதும் கணக்கில் எடுத்து கொள்கிறோம் மாறாக ஒருவரது அகத்தில் ஏற்படும் சிறியதொரு சுழிப்பும்கூட எவ்விதமாக பெரிய அளவில், அவருடைய வாழ்வின் கதியை மாற்றிவிடக் கூடியதாக அமையும் என்பதை மிகவும் நுணுக்கமாக சித்தரிக்கும் சில கதைகள் இவருடைய தொகுப்புக்களில் இருக்கின்றன. “பறக்கும் திருடனுக்குள்”, “சுழலும் மின்விசிறி”, “கால்பந்தும் அவளும்”, ஆகியவை அவ்வகையிலானவை. இக்கதைகளின் தொனியும், மொழியும், பிற கதைகளில் இருந்தும் மாறுபட்டு அமைந்தவையும்கூட. தமது வாசகர்களுக்கு தம் கையில் இருக்கும் எல்லாவற்றையும் உவந்து ஊட்டிவிட வேண்டும் என்ற முனைப்பில் கதைகளுக்கு அவசியமே இல்லாத பல தகவல்களை கொட்டி எழுதும் பலவீனம் பல எழுத்தாளர்களுக்கு உண்டு. அவர்களுடன் ஒப்பிட்டு நோக்குகையில் சுரேஷ்குமாரை ஒரு குறைத்தல்வாதி என்றே குறிப்பிடலாம். சித்திரத்தை எழுப்பிக்காட்ட அவசியமான சிற்சில கோடுகளை மட்டுமே உபயோகிக்கும் சிக்கனமானதொரு கோட்டோவியனைப் போல இவர் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். தன்னைப் போன்றே வாசகனும் நுண்ணுணர்வு கொண்டவன் என்ற நம்பிக்கை கொண்ட எழுத்தாளரால்தான் இவ்விதமாகவெல்லாம் எழுதிப் பார்க்க இயலும். அத்தகைய நம்பிக்கை உள்ளவராக தனது கதைகளை எழுதி இருக்கும் சுரேஷ்குமார் ஏனோ தெரியவில்லை, தன் தொகுப்புக்களின் முன்னுரையில் வாசகன் மீது அவநம்பிக்கை கொண்டவரைப் போல் தன் கதைகளில் உள் மறைந்திருக்கும் நுட்பங்களை விளக்க முற்படுகிறார். வாசகனுக்கு விளங்காமல் போய்விடக் கூடாது என்ற பதட்டமாக இருக்கலாம் என்றாலும்கூட இதுவொரு எதிர்மறையான விஷயமாகவே படுகிறது.
தன் கதைகளைப் போலவே எவ்வித பகட்டும் ஆரவாரமும் இல்லாதவர் சுரேஷ்குமார். தமிழில் பெரும்போக்கிலான யதார்த்தவாத கதைகளுக்கே உரிய நாடகீயமான திருப்பங்களோ, கதாபாத்திரங்களின் உள் மனமோதல்களோ, சூழல் வர்ணனைகளோ அதிகம் இல்லாத இவர் கதைகள் கடல் மீது மிதக்கும் பனிப் பாறைகளை ஒத்தவை. கண்ணுக்கு புலனாகும் அளவை விடவும் நீரில் மறைந்திருக்கும் பகுதி கூடுதலாக இருக்கும். அவற்றைப் போலவே இவர் கதைகளிலும் தட்டுப்படுவதைக் காட்டிலும் மறைந்திருப்பன அதிகம் எனலாம். சொல்லும் விஷயத்தினால் அல்ல, சொல்லிய விதத்தாலேயே தம்மை கதைகளாக ஒருங்கிணைத்துக் கொள்ளும் தன்மை கொண்ட இக்கதைகள் சமகால நடப்புகளின் மீதான விமர்சனத்தையும் உட்கிடையாக கொண்டவை என்பதே இவற்றின் சிறப்பு.