Saturday 21 November 2020

மரநிழலும் மனநிழலும்

இரண்டு வருடங்களுக்கு முன் ஒருநாள் பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்த என்மகன் புத்தகப் பையை மூலையில் போட்டுவிட்டு, சீருடையைக் கூட கழற்றாமல் என்னைத் தேடிவந்தான்.

"டாடி உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்" ரகசியமான குரலில் கிசுகிசுத்தான். உள்ளூர் ஆங்கிலப் பள்ளி ஒன்றில் மூன்றாம்வகுப்பு படித்துவந்தான். அவன் பள்ளி செல்லத் துவங்கிய சில நாட்களிலேயே கட்டிய பணத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது. அதுவரையிலும் 'அப்பா' என்று என்னை அழைத்து வந்தவன் 'டாடி' என்று கூப்பிடத் தொடங்கிவிட்டான். தொடக்கத்தில் அது நெருடலாக இருந்தாலும் போகப்போகப் பழகிவிட்டது.

வகுப்பில் நடக்கும் நிகழ்வு எதுவொன்றையும் என்னிடம் வந்து விவரமாகச் சொல்லுவான். மாலை நடையாக இரண்டுத் தெரு தள்ளியிருக்கும் கடைக்கு போய்வரும் வழியில்தான் இதுபோன்ற உரையாடல்கள் எங்களுக்குள் வழக்கமாக நடைபெறும். மாறாக, அன்றொரு நாள் அவனுடைய ஆங்கில ஆசிரியைப் பற்றி ஏதோ சொல்ல வந்தபோது "யார்டா ? மூஞ்சி பூராவும் பவுடர் வாரிப்பூசிக்கிட்டு வருவாங்களே அந்த மிஸ்ஸா?" என்று நான் கேட்கவும், அப்போதுதான் டீக் கொண்டுவந்த என் மனைவி திட்டித்தீர்த்து விட்டாள்.

" அந்தப் பையனாவது ஒழுங்கா வளரட்டும். உங்க போக்கிரித்தனத்தையெல்லாம் அவனுக்கும் கத்துக் கொடுத்துடாதீங்க "

அதன் பிறகு சில விஷயங்களை நாங்கள் இருவரும் இடம், பொருள், ஏவல் அறிந்தே பேசவேண்டியதாயிற்று. அன்றும் அப்படித்தான், அம்மா பக்கத்தில் இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்டே பேசத் தொடங்கினான்.

" நான் சொல்றத யார்கிட்டையும் சொல்லக்கூடாது"

"சொல்லலை"

" முக்கியமா அம்மாகிட்ட சொல்லக்கூடாது"

" சொல்ல மாட்டேன்டா"

"காட் பிராமிஸ்?"

"காட் பிராமிஸ்!"

நீட்டிய அவனது சிறுகை மீது என்கையை வைத்தேன். என் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்துகொண்டு மெதுவாகச் சொன்னான்.

‘ இன்னிக்கு மத்தியானம் சயின்ஸ் மிஸ் பாடம் நடத்திக்கிட்டிருந்தாங்களா அப்போ, பியூன் அண்ணா வந்து கூப்பிட்டாங்கன்னு, பாதியிலேயே கிளாஸை விட்டுட்டு பிரின்ஸ்பல் ரூமுக்கு போயிட்டாங்க.."

"சொல்லு"

" அப்போ பிரசாந்த் இருக்கான்ல அந்த முரடன் என்ன பண்ணினான் தெரியுமா?"

"யாருடா, பேக்கரி வச்சிருக்காங்கன் சொல்லுவியே. அந்தப் பையனா?"

" அய்யோ! அவன் வேற டாடி! பேரு பிரகாஷ். இவங்கப்பா எங்கியோ வெளிநாட்டுல இருக்கார். குறுக்க பேசாம நான் சொல்லறத மட்டும் கேளுங்க"

" சரி சொல்லு"

"இந்த பிரசாந்த் என்ன பண்ணினான் தெரியுமா?மன்னுன்னு என் பிரண்ட் இருக்கானே அவனுடைய லுல்லாவைப் பிடிச்சு நறுக்குன்னு கிள்ளி வச்சுட்டான். ரத்தமே வந்துடுச்சு. அவன் அழுஅழுன்னு அழுதுட்டான்."

“அய்யோ ! அப்புறம் என்னாச்சு?"

“அப்புறம் மிஸ் வந்து பார்த்துட்டு இவனுக்கு முதுகிலேயே ரெண்டு அறை வச்சாங்க."

தேவையானதோ, தேவையில்லாததோ அவன் சொல்கிற எல்லா விஷயத்தையும் காதுகொடுத்து கேட்பேன். மிஞ்சிப் போனால் இன்னும் ஆறேழு வருடங்கள், அதற்குப் பின் அவனுக்கென்று சுயமான ஒரு உலகத்தை உருவாக்கிக் கொள்ளுவான், அதில் அவனுக்கேயான கனவுகள் அந்தரங்கங்கள் என்று தனிமை கொண்டுவிடுவான். அப்போது இந்த தகப்பனிடம் பகிர்ந்து கொள்ள சொற்கள் வெகுவாக குறைந்துவிடும். அவன் சொன்னதில் ஒரு விஷயம்தான் நெருடலாக இருந்தது. இதை அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று ஏன் சொன்னான். உடலும் உள்ளமும் முகிராத இவ்வளவு சிறுவயதிலேயே, சில விஷயங்கள் பெண் என்பதால் அம்மாவிடம் சொல்லக்கூடாது என்கிற மனத்தடை அவனுக்குள் எவ்விதம் உருவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்,

எனக்குப் பதின்பருவத்தில் குழப்பமாகவும், ரகசியமாகவும் இருந்த விஷயங்கள் எல்லாம் இன்று ஆறேழுவயது சிறுவனுக்குகூட சாதாரணமாகத் தெரிகிறது. எல்லாம் காலத்தின் கொடை பெற்றோர்களைக் காட்டிலும் வெளிஉலகத்திலிருந்து அவர்கள் அறிந்துகொள்வது அதிகமென்று தோன்றுகிறது . தமிழாசிரியரான ஒரு நண்பரிடம் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது ‘ஏற்பியல்’ என்ற ஒரு பதத்தைப் பற்றி கூறினார். எல்லா காலத்திலும், எல்லா விஷயமும், எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கும். என்றாலும் சில விஷயங்களை வெளிப்படையாக பார்ப்பதற்கு, பேசுவதற்கு, கேட்பதற்கு ஒரு மனத்தடை சமூகத்தில் இருக்கும். காலமாறுதலை ஒட்டி அத்தடையும் மாறும். முன்பு தவறாகக்கருதிய பல விஷயங்களை பின்பு இயல்பாக அது ஏற்றுக்கொள்ளும் . சமூகத்தின் இவ்வியல்பிற்கே ‘ஏற்பியல்‘என்று பெயர் என்றார் அந்நண்பர்.

"ஒன்றும் வேண்டாம்! பாகவதர் காலத்திலிருந்து இன்று வரையிலுமான தமிழ் சினிமாவின் பாடல்காட்சிகளை எடுத்துக்கொண்டு மேலோட்டமாக ஒப்பிட்டு பார்த்தாலே நம் ஏற்பியல் எப்படியெல்லாம் மாறிவந்துள்ளது என்று புரியும்!" என்றார். உண்மைதான். அன்றெல்லாம், கதாநாயகி ஒரு மரத்தின் பின்னிருந்து ஏக்கத்துடன் நோக்குவாள். பத்தடி தள்ளி பிறிதொரு மரத்தை கட்டியணைத்தபடி கதாநாயகன் காதல்மொழி பகர்வான். சிறிதுகாலத்திற்கு பிறகு கைகோர்த்து ஆடத்துவங்கிடும் காதலர் இருவரும் முகத்தோடு முகம் நோக்குங்கால் இடையீடாக பூவில் தேன்குடிக்கும் வண்ணத்துப்பூச்சியும், சொம்பைக் கவிழ்த்து பால் குடிக்கும் பூனையும் உவமித்துக் காட்டப்பட்டன. ஏறுதழுவுதல், மற்போர் போன்றவற்றை நினைவுறுத்தும் இன்றைய பாடல் காட்சிகளிலோ பார்வையாளனின் கற்பனைக்கான இடைவெளி என்று ஏதுமே இருப்பதில்லை. புறாக்களின் காலில்கட்டி அனுப்பப்பட்ட லிகிதங்கள் இன்று கைபேசித்திரைகளில் ஒளிரும் தகவல் துடிப்புகளாக மாறிவிட்ட நிலையில், இன்ன பிறவற்றைப் போலவே காதலும் அதன் இயல்பான நுண்உணர்வுகளை இழந்து, வருவதாகவே தோன்றுகிறது.

இச்சூழ்நிலையிலேயே காலமாறுதலினால் நாம் இழந்துவரும் பலவிஷயங்களைக் குறித்த நமது சமூக நினைவுகளை, அவை ஞாபகப்படுத்தும் பல நுண்உணர்வுகளை அழிந்துவிடாமல் மீட்டுருவாக்கம் செய்வதில் நமது புராணங்களும், செவ்விலக்கியங்களும், நாட்டார் கலைகளும் நமக்கு கணிசமாக உதவ முடியும். அவ்வகையில் பின்வரும் பிரபலமான நற்றிணைப் பாடலைச் சுட்டலாம்.
" வினையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்மூளை அகைய
ஐநெய்பெய்தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது
நம்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்" என்று
அன்னை கூறினல் புன்னையது நலனே
அம்ம! நாணுவதும், நும்மொடு நகையே
விருந்தின் பாணார் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நலலும் இலங்கு நீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே.

                                                 நற்றிணை
                                                 பாடல் -172.

களவொழுக்கத்தின்போது பகற்குறியை தேர்ந்து ஒரு புன்னை மரத்தடியில் தலைவியை சந்திக்கிறான் தலைவன். தன்னை தழுவ வேட்கையுடன் அணுகும் தலைவனை தள்ளிநிறுத்தியவளாகத் தலைவி உரைக்கிறாள். "நான் சிறுமியாக இருக்கும்போது விளையாடிக் கொண்டிருந்துவிட்டு மறந்துவிட்டு விட்டுப்போன புன்னைவிதையே வளர்ந்து இங்கு மரமாகிநிற்கிறது. இதற்கு நான்தான் தண்ணீர்விட்டு வளர்த்தேன். ஒருவிதத்தில் இது எனக்கு தங்கை முறையுடைத்து என்று என்தாய் சொல்லியிருக்கிறாள். தங்கையின் முன் காதல்புரிய எனக்கு வெட்கமாகயிருக்கிறது. எனவே, வேறிடம் செல்லலாம்"

நாம் செல்லும் வேகத்திற்கு தடையாக உள்ளனர் என பெற்றவர்களையே உதறிவிட்டுச் செல்லும் அவசர யுகத்தில் வாழ்பவர்களுக்கு, மரம் செடிகொடி போன்ற எளிய உயிர்களையெல்லாம் தம் சகோதரியாக வரித்துக் கொண்டிருந்த ஒருகாலமும் இருந்தது என்பதைச் சொன்னால் உணர்ந்து கொள்வதற்குச் சற்று மிகையாகத்தானிருக்கும். உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத, நம் தமிழ்மொழிக்கு மாத்திரமேயான சிறப்பு என மொழியியல் அறிஞர்களால் சுட்டப்பெறுவது, நமது சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள திணை, துறை வகைமைகள். அது வெறும் இலக்கணமோ, அழகியலோ மட்டுமல்ல. ஒரு முழுமையான வாழ்வியல்முறையும், அறமும் கூடதான். நிலம், பருவம், பொழுது, தெய்வம், மாந்தர், விலங்குகள், பறவைகள், தாவரவங்கள், பூக்கள், தொழில், கருவிகள் என மனித வாழ்வும், சூழலும் ஒன்றையொன்று சார்ந்தும், ஒத்திசைந்தும் முன்நகர்ந்த ஒரு முறைப்பாட்டை புலப்படுத்துகின்றன.

மனித உணர்ச்சிகளை, அதன் நாடகத்தருணங்களை அவற்றின் கூர்மையுடன் வெளிக்காட்ட, அழுத்தமானதொரு பின்புலமாகவே சங்கக் கவிதைகளில் இயற்கை சித்தரிப்பு பயின்று வருகிறது எனலாம். மேற்குறிப்பிட்ட நற்றிணைப் பாடலிலுமேகூட காதலியின் நாணத்தை, நாசுக்கான மறுப்பை வெளிக்காட்ட உதவும் ஒரு சாக்காகவே அப்புன்னை நிற்கிறது. விழைவை நிறைவேற்றி கொள்ளுவதன் மூலம், காமத்தின் பெறுமானத்தை வேண்டுமானால் அறியலாம். காதலின் சுவை விழைவு நிறைவேற்றத்தில் அல்ல விழைவை ஒத்திவைப்பதிலும் , தாமதப்படுத்துவதிலும்தான் பிறக்கிறது. காண்பதற்கோ, பேசுவதற்கோ, சந்திப்பதற்கோ தாமதமாகும் ஒவ்வொரு கணமும், கற்பனையில் முடிவற்றதாக நீட்சியுற்று நினைவுகளை வெள்ளமென பெருக்குகிறது. அப்பெருக்கே காதலை, நடைமுறை வாழ்வின் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாற்றுகிறது. அம் மனநிலையில் கிளைத்துப் பரவும் நுண் உணர்வுகளின் தீராத சித்திரங்களே நம் மரபின் அகப்பாடல்கள். நுட்பமான அகவுணர்வுகளை பகிர்ந்து கொள்வதெனில் அதற்கேதுவான புறச்சூழலும் அமையவேண்டும். அதனால்தான் போலும் காவியங்களிலும், கதைகளிலும் வரும் நாயக, நாயகிகள் சந்தித்துக் கொள்ள ஏகாந்தமும், அமைதியும் ததும்பும் இடங்களையே நாடுகின்றனர். பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பொது இடங்களின்றும் காதலர்களை துரத்தியடிக்கும் நிஜ காவலர்கள், கலாச்சார காவலர்களையெல்லாம் பொருட்படுத்தாமல் காலமாற்றங்களை விழுங்கிச் செரித்தபடி, இன்றும் காதல் தன்போக்கில் உயிர்த்திருக்கிறது.

விளை நிலங்களெல்லாம், வீட்டுமனைகளாகிக்கொண்டிருக்கும் நகர்ப்புறங்களில், காதலர்கள் நின்றுபேச ஒரு மரத்தடியைத் தேடுவது என்பதெல்லாம் இன்று இடம் மற்றும் காலரீதியாக கட்டுப்படியாகாத விஷயம் என்றே கூறவேண்டும். தேவதேவனின் கவிதை ஒன்று இந்த நெருக்கடி குறித்து பேசுகிறது.

பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் நண்பர் ஒருவரின் அறையில் வைத்து கவிதை பற்றிய உரையாடல் நடந்தது. அதில் தேவதேவனைக் குறித்து பேச்சு எழுந்தது. அப்போது விவாதத்தில் பங்குபெற்றிருந்த நண்பன் ஒருவன் "யார் அந்த மரக்கவிஞரா?" என்று சிரித்தபடியே வினவினான். அவனுடைய கேலியால் என்முகம் சுருங்கியதைக் கண்டவன் தன் சிரிப்பை புன்னகையாகக் குறைத்துக் கொண்டு " நான் அப்படி என்னப்பா தப்பா சொல்லிட்டேன்? அவர் புத்தகத்தை எடுத்து எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும், அதுல ஒரு மரம் நிற்குது இல்லையா?" எதையும் கோணலாக பார்ப்பதும், குதர்க்கமாக பேசுவதும் அவன் வழக்கம். எப்போது விளையாட்டாகப் பேசுகிறான். எப்போது வினையமாகப் பேசுகிறான் என்று கண்டுபிடிப்பது சிரமம். " மரத்தில் மாமதயானையே மறையும்போது கவிதை எம்மாத்திரம்?" என்று எண்ணியவனாக மேற்கொண்டு பேசாதொழிந்தேன். '

சில கவிஞர்களின் கவிதைகளில், சில குறியீடுகளும், படிமங்களும் ஒருவகை மனப்பீடிப்போ என ஐயுறும் வகையில் திரும்பத்திரும்ப பயின்று வருவதுண்டு. நகுலனுக்கு சுசீலா, பசுவய்யாவுக்கு நாய்கள், கலாப்பிரியாவுக்கு சசி, ஆனந்துக்கு காலம், சுகுமாரனுக்கு கிளிகள், பிரம்மராஜனுக்கு இசை போல தேவதேவனுக்கு மரங்கள்,

தேவதேவனின் மரங்கள் வெறும் தாவரவஸ்து மட்டுமல்ல, மனிதனின் பாற்பட்டு இயற்கை பெருங்கருணையுடன் உவந்தூட்டும் முலை, பூமியினின்றும் அருகிக் கொண்டிருக்கும் அன்பு, கனிவு ஆகிய பேருணர்வுகளின் தூல வடிவம். நவீனத்துவத்தின் வெக்கையாக வறண்டு கிடக்கும். தமிழ்ப் புதுக்கவிதையினூடாகப் பயணித்து வரும் வாசகனொருவன் நடுவே சற்றுநின்று, தன் மூளைச்சூட்டை தணித்துக் கொள்ள ஏதுவாக நிழல் விரித்திருக்கும் பசுமரத்தோப்பு அவர் கவிதைகள்.

அவருடைய ஆரம்பகால படைப்புகளில் வெகுவாக கவனம் பெற்ற ஒன்று " ஒரு மரத்தைக் கூடக் காணமுடியவில்லை " என்ற கவிதை,ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்து விட்டுப்
போவேன்.
வெட்ட வெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்கமாட்டேன் என்கிறது

மேலும்
மரத்தடியில் நீ நிற்கையில்தான்
ரொம்ப அழகாயிருக்கிறாய்
 
கர்ப்பிணிப் பெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல்
உன்னை ஒரு மரநிழலில்
விட்டுப் போக விழைகிறேன்

மரங்களின் தாய்மை
முலைமுலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளில் காற்று
வாத்ஸல்யத்துடன் உன் தலையைக் கோதும்.

மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
அந்தப் பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்,
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே

ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப் போவேன்.

                            - தேவதேவன்
                           "பூமியை உதறியெழுந்த மேகங்கள்" தொகுப்பிலிருந்து.

இந்தக் கவிக்குரலை நாம், ஆண் என்று கற்பித்துக்கொள்ளவே அதிக முகாந்திரம் உண்டு. ஏனெனில் தனக்கு உரிமைப்பட்ட பொருளுக்குத் தானே பாதுகாப்பு என்னும் உடமை மனோபாவம் அவனுக்கே அதிகம். அந்த ஆண் அப்படிப் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துவிட்டுப் போகவிரும்பும் பெண் அவனுடைய மகளோ, தங்கையோ, தாயோ, தோழியோ, துணைவியோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அம்மரத்தடி வெறும் நிழலை மட்டும் தருவதில்லை. ஒன்றும் அறியாதவளான, அந்த அப்பாவி பெண்ணிற்கு கனிகளை கொடுக்கிறது. பறவைகளை அறிமுகப்படுத்துகிறது. வானமோ அவளுக்கு அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடும். கடவுளுக்கு அடுத்தபடியான கற்பனைத்திறனும் கருணை உணர்வும் கொண்டவன் கவிஞன். கவிஞனின் கனவை ஐயுறுவது என்பது படைப்பின் நோக்கத்தை சந்தேகிப்பதற்கே ஒப்பாகும். எனினும், ஒருஆண் விரும்பித் தந்துவிடவும், ஒருபெண் வேண்டிப் பெற்றிடவும் ஒரு பரிசுப்பொதியினைப் போல அவ்வளவு இலகுவான விஷயமா விடுதலை? இருவருக்குமிடையே அவிழ்த்தெறியவும் மாட்டாமல் அறுத்தெரியவும் கூடாமல் முடிச்சிட்டுக் கிடக்கும் நூற்றாண்டுகளின் சிடுக்குகளினின்றும் விடுபடுதல் எவ்வளவுக்கு சாத்தியம்? தெரியவில்லை,

இவ்விரு கவிதைகளிலுமே நிகழ்வின் களம் ஒரு மரத்தடிதான். கவிதை மாந்தர்கள் ஒரு ஆணும் பெண்ணும்தான். ஆனால் இரண்டின் அர்த்தளங்களுக்குமிடையில் பேரளவு வேறுபாடு உண்டு. இது காலப்போக்கில் உணரப்படும் மேலெழுந்தவாரியான கலாச்சார மாறுபாடு மாத்திரமல்ல. கவிதையைப் பொருள் கொள்வதற்கான நோக்கிலேயே நிகழ்ந்திருக்கும் அடிப்படையான வேறுபாடு ஆகும். முன் சொல்லப்பட்ட சங்கக் கவிதை அன்றாட வாழ்வின் ஒரு தருணத்தை நாடகப்படுத்திக் காட்டுகிறது. அதன் மூலம் ஏற்கனவே அரும்பியிருக்கும் காதல் உணர்வை, மண உறவாக வலுப்படுத்திக் கொள்ள விழையும் பெண்ணின் மனநிலையை சித்தரிக்கிறது. மாறாகப் பிந்தையக் கவிதையோ, சமூகத்தில் பெண்ணுக்கு இன்று இருக்கும் இடம் பற்றிய விசனத்தையும், இருந்திருக்க வேண்டிய நிலை குறித்த மறைமுகமான அக்கறையையும் பகிர்ந்து கொள்கிறது. முந்தைய கவிதையின் மரநிழலில் பெண் மனதின் நுண்உணர்வு இழைத்து காட்டப் பெறுகிறது என்றால், பிந்தையக் கவிதையின் மனநிழலிலோ பெண்ணின் கையறுநிலை குறித்த ஆதூரம் ஒரு துக்கஉணர்வாகக் கோலம் கொள்கிறது. புறமழிய அகந்திரிந்து போனவனாய் மனிதன் இன்று நிற்பது திரும்ப முடியாப் பாதையின் நடுவே .அவன் மீளநோக்குகையில் கண்ணெட்டிய வரையிலும் தெரிவது அவனுடைய மனப்பரப்பின் கானல்தான். ஓய்வுகொள்ள ஒரு மரத்தடி நிழலும் அங்கில்லை. கடந்தே தீரணும் வழி.

Wednesday 11 November 2020

திரும்ப முடியாத பாதை

மூணாறிலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்தோம். முன்தினம் பெய்த மழையின் ஈரம் முற்றிலுமாக வற்றியிருக்கவில்லை. புதுப்பட்டுத்திய பெண் போல் ஊமை வெய்யிலில் மினுங்கிக் கொண்டிருந்தது மலை. சாலை இருமருங்கிலும் விதவிதமான பச்சையில் தாவரங்கள் காற்றில் ஆடி நின்றன. மனமும், உடலும் ஒருசேரக் குளிர்ந்து போயிருந்தது. பேச்சின் உற்சாகத்திற்குத் தகுந்தபடி நிதானமான வேகத்தில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. அறிவிப்புப் பலகையைக் கண்ணுற்ற நண்பன் கூறினான் "வழியில் மறையூர்ல பழைய பாறை ஓவியங்கள் இருக்காம் ஒரு எட்டு பார்த்துட்டுப் போகலாம்" சாலையோரத் தேநீர்க்கடையில் நிறுத்திக் கேட்டபோது அங்கிருந்தவர்களுக்கும் சரியான விவரம் தெரியவில்லை. ஆனாலும், கடைக்காரர் இடதுபுறமாகக் கையைக் காட்டிச் சொன்னார். "இந்த வழியிலேயே கொஞ்ச தூரம் போய் மேலுக்கேறிப் போக ஒரு பாறக்கோயிலு வரும். நீங்க கேக்கற படம் அங்க இருக்கலாம். போயிப் பாருங்க" முன்புறம் சாய்ப்பு வைத்த ஓட்டு வீடுகள் உள்ளடங்கியிருந்த தெருக்களைக் கடந்து, குறுக்கிட்ட ஒரு ஓடைப்பாலத்தைத் தாண்டிய பிறகு வளைந்து வளைந்து மேலேறிச் சென்ற சாலையில் ஊர்ந்து, ஒரு குன்றின் பக்க வாட்டில் வந்து நின்றது எங்கள் கார்.


பெரும்யானை ஒன்றின் முதுகென விரிந்துகிடந்தது அந்தக் கரும்பாறைத் திட்டு. வெய்யிலிலும், மழையிலும் உவறி மேற்பரப்பு பொரிந்து கிடந்தது. சிறிதும் பெரிதுமான செவ்வக வடிவக் கற்பலகைகள் ஒருவரிசையாய்க் குலைந்துகிடந்த வடகிழக்கு மூலைக்கு நடந்தோம், நாற்புறமும் நிற்கவைத்த பலகைகளுக்கு மேலே மற்றுமொரு செவ்வகப்பாளம் கிடத்தப்பட்டு, முடுக்குகளில் சிறுசிறு சில்லுகள் தாங்க அசையாது நின்றது. உடனிருந்த நண்பர்களுள் ஒருவர் சுவடியியல், கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் நாட்டம் கொண்டு படிப்பவர், பார்த்துவிட்டுச் சொன்னார். “இவை யெல்லாம் பழைய கற்காலத்தைச் சேர்ந்தவையா இருக்கும். எப்படியும் ரெண்டு மூணாயிரம் வருஷத்துக்கு குறையாது. முதுமக்கள் தாழின்னு படிச்சிருப்பிங்களே! இதுவும் அதுபோலவொரு சவஅடக்கமுறைதான். செத்த உடலை நடுவில் வச்சு, மிருகங்கள், பறவைகள் கொத்தி குதறி விடாதபடிக்கு சுத்தியும் கல்பலகை வச்சு மூடிட்டு போய்டுவாங்க". மூன்று, நான்கு அடுக்குகள் மாத்திரம் முழுமையாக நின்றுகொண்டிருக்க, ஏராளமான பலகைகள் சரிந்தும், உடைந்தும் அங்காங்கே சிதறிக்கிடந்தன. நான் அதைக்குறித்து வருத்தப்படவும், அந்நண்பர் கசந்த புன்னகையோடு சொன்னார். “சரித்திரத்தைப் புறத்தே வச்சு பார்க்கற அளவுக்கு அதைவிட்டு வெளியே வந்துவாழ நாம் இன்னும் படிக்கலை. முக்கால பேதம் எதுவுமில்லாமதான் நாம் வாழறோம், நமக்கு இவ்வளவுதான் வரலாற்றுணர்வு இருக்கும்."

 பாறையின் ஒருமூலையில் சிறிய அம்மன் கோயில் ஒன்றும், அதற்குச் சற்றுத் தொலைவில் ஆளுயரக் கான்கிரீட் சிலுவை ஒன்றும் நிறுவப் பட்டிருந்தது. எது முதலில் தோன்றியது எனத் தெரியவில்லை. ஆனால் ஒன்றின் பதிலியாகவே மற்றொன்று முளைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை, அந்தப் பழம்பெரும் கற்பாளங்கள் மெளனமாக விளம்பிநிற்கும் 'மரணம்' என்னும் முழுமுற்றான உண்மைக்குமுன் சிமெண்ட்டால் எழுப்பப்பட்ட இந்த சிலையும், சிறு கோயிலும், மனிதர்களான நமது எளிய நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் அபத்தமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தன. நாங்கள் தேடிவந்த பாறை ஓவியங்கள் எதுவும் அங்கில்லை. என்றாலும், எங்களுடைய பயண நிரலில் திட்டமிடப்படாததொரு முக்கிய நிகழ்வாக அத்தருணம் அமைந்தது. அதுகாறும் உற்சாகமாகத் தொடர்ந்து வந்த பேச்சு மெல்ல அடங்கி, ஒவ்வொரு வரும் தத்தமது சொந்த யோசனைகளுக்குள் மூழ்கிப் போனோம். அந்தப் பாறைத்திட்டிலிருந்து பார்க்கையில், சுற்றிவர மூன்றிலொரு பாகத்திற்கு மேல் வெட்டவெளியாய் விரித்துகிடக்க, பார்வை தொடுவானில் மங்கிக் கலந்தது. மனிதர்களின் இறுதி உறக்கத்திற்கென்று இவ்விடத்தைத் தெரிவு செய்த அம்மூதாதை கனிந்த விவேகியாய்த்தானிருக்க வேண்டும்.


உலகின் எப்பகுதியில் வாழும் இனக்குழுக்களாக இருப்பினும், அவர்களுடைய கலாச்சாரத்தில் எஞ்சியிருக்கும் தொன்மையான சடங்கு எதுவென ஆராயப் புகுவோமானால், அது பெரும்பாலும் மரணத்தோடு தொடர்புடைய ஒன்றாகவே இருப்பதைக் காணலாம். தவிர்க்கவோ, தப்பிக்கவோ முடியாத அந்த நிச்சயமான உண்மையை எதிர் கொள்வதற்காக மனிதர்கள் தம் வாழ்வினூடாகத் திரட்டிக்கொண்ட நம்பிக்கையும், ஆறுதலுமே அனைத்து வகையான வழிபாடுகளுக்கும், சடங்குகளுக்கும், கலை வெளிப்பாடுகளுக்குமான தோற்றுவாய். மரித்த உடலை எரிப்பது அல்லது புதைப்பது என்ற இருவேறு வழக்கம் உலகெங்கும் தொன்று தொட்டு இருந்துவருகிறது. மரணத்தை முற்றுப் புள்ளியாக ஏற்றுக்கொள்பவர்கள் உடலை எரிக்கவும், இறப்பிற்குப் பின்னும் வாழ்வில் நீட்சியை ஏதோஒரு வகையில் கற்பனை செய்ய விரும்புகிறவர்கள் புதைக்கவும் செய்கிறார்கள் என நம்பலாம். உலகின் தொன்மையான கல்லறைகளாகக் கருதப்படுகின்ற பிரமிடுகளில் புதைக்கப்பட்ட மன்னர்களின் அப்பாலை வாழ்விற்குத் துணையாகப் பெரும் செல்வமும், பணியாட்களும் உடன் புதைக்கப்பட்டிருந்ததாகக் கண்டறிந்திருக்கிறார்கள். உலகின் எல்லா மொழிகளிலும், உள்ள இலக்கியங்களிலும் ஈமக்கலன், இடுகாடு, ஈமத்தீ முதலியவற்றைச் சுட்டும் சொற்களும், குறிப்புகளும், தொல்பழங்காலம் தொட்டே இருந்துவருவதை மொழியியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தமிழர் நாகரிகத்தின் செழுமைக்கும், தொன்மைக்கும் வலுவானதொரு இலக்கியச் சான்றாகக் கொள்ளப்படும் புறநானூற்றிலும் இத்தகைய செய்திகளைக் கொண்ட சில பாடல்கள் உள்ளன. பின்வரும் பாடல் (புறம் - 356) வாழ்வின் நிலையாமையை அறிவுறுத்தும் விதமாக எழுதப்பட்டது.

கனறி பரந்து. கன்னி போகிப்
பகலும் கூட்டம் கூகையொடு, பேழ் வாய்
ஈம விளக்கின், போஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்று. இம்மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணறு அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.

                                        திணை: காஞ்சி
                               துறை: பெருங்காஞ்சி
                பாடியவர் : தாயங்கண்ணனார்

 காடு பரந்து, கள்ளிகள் மிகுதியாக முளைத்திருக்கும் இச்சுடுகாட்டில் பகல் பொழுதிலேயே கூகைகள் கூவுகின்றன. பிணத்தைச் சுடும் தீயின் வெளிச்சத்தில் கோரமான பற்களோடு அகன்று காணப்படும் வாயை உடைய பேய் மகளிர் உலவு கின்றனர், புகை தவழும் இவ்விடம் காண்பாருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இறந்தோர் மீது அன்புகொண்டோர் விடும் கண்ணீரில் பிணத்தை எரிக்கும் நெருப்பின் சாம்பல் அவிகிறது. எல்லோருடைய முடிவையும் தான் கண்டு, உலகத்து மாந்தருக்கெல்லாம் இறுதிப்புகலிடமாய் அமையும் இச்சுடுகாடு, தன்னைப் புறங்காண வல்லவர் எவரையும் இதுகாறும் கண்டதில்லை.

இக்கவிதை தீட்டிக்காட்டும் சித்திரமளவிற்கு, அச்சம் தருவதாக அல்லாது போனாலும், பாழடைந்து, எருக்கஞ் செடிகளும், முட்புதர்களும் நிறைந்து ஓணான்களும் கூகைகளும் கழுகுகளும் பயமின்றி அலைய, குழந்தைகளும் பெண்களும் நுழையக் கூடாத ஒரு கைவிடப்பட்ட ஸ்தலமாகவே பெரும்பாலான ஊர்களின் இடுகாடுகள் அமைந்துள்ளன. இறப்பது ஒரு கலை என்றால், இறந்தவர்களுக்கு உரிய மதிப்புடன் விடைதந்து அனுப்புவது என்பதுவும் அதற்குச் சற்றும் குறையாத கலைதான், அதில் நம்மைவிடவும் மேலைநாட்டினர் தேர்ந்தவர்களாக உள்ளனர். இறந்த உடலை அலங்கரிப்பதற்கும், சவப் பெட்டியை அழகுப்படுத்தவும் அங்குத் தனியே கலைஞர்கள் உள்ளனர். தவிரவும் சுற்றுச்சுவருடன் கூடிய தோட்டத்தில் நிழல் தரும் மரங்களுக்குக் கீழாக, பூச்செடிகளின் அருகில் துயிலும் அந்த ஆன்மாக்கள் கொடுத்து வைத்தவையே என்பதில் ஐயமில்லை .

மரணத்தைத் தட்டிப்பறிக்கும் கூற்றுவனாக, திகிலூட்டும் ஒரு இருண்ட அனுபவமாக, தப்ப முடியாத ஒரு தண்டனையாக உருவகிக்கும் ஒரு போக்கு நமது மரபில் உண்டு. இது உருவாக்கும் அச்சத்தினூடாக, இக வாழ்வில் மக்களிடையே தர்மத்தையும், அறவிழுமியங்களையும் தழைக்கச் செய்யமுடியும் என்றும் நம் முன்னோர் நம்பினர். பிறகு வந்த பௌத்த, சமண சமயங்கள் மரணத்தைக் சுடந்து செல்லவேண்டிய ஒரு வாயிலாக, இயல் பான ஒருமுடிவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வலியுறுத்தின.

மேற்காணும் புறநானூற்றுப் பாடல், மனித நாடகத்தின் இறுதிக்காட்சியை அழுத்தமான அவலச்சுவையுடன் தீட்டிக் காட்டுவதன் வாயிலாக, பிறிதொரு, கருத்தைக் குறிப்புணர்த்தி நிற்கிறது. எந்நிமிடமும் கலைந்துவிடக்கூடிய இந்நீர்க்கோல வாழ்வை நச்சி, நலிவுற்று அழியாமல் நமது நற்செயல்கள் மூலம் அதை அர்த்தப்படுத்திக் கொண்டாகவேண்டும் என்பதையே மறைமுகமாக வலியுறுத்துகிறது.

ஒருமுறை நண்பர்களுடனான உரையாடலின்போது கனவுகளைப்பற்றிய பேச்சு எழுந்தது ஆழ்மன வெளிப்பாடு என்பதால் கனவுகள் நமது புறமனதின் தர்க்க ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட சுயேச்சை யான இயக்கவிதிகளைக் கொண்டிருக்கின்றன எனவே, காணப்படும்போது மிகத் துல்லியாக தெரியும் கனவு, விழித்தபிறகு நினைவுபடுத்திப் பார்க்கையில் பல இடங்களில் தெளிவின்றிக் கலங்கிப் போய் மங்கலாகத்  தென்படும் . பல கனவுகள் விழித்தெழுந்தவுடன் நினைவுகொள்ள முடியாதஅளவிற்குத் தடமின்றி மறைந்துபோய் விடுவதுமுண்டு. அபூர்வமாக சில கனவுகள் மாத்திரம் வரையப்பட்ட சுவரோவியம் போல் நினைவில் துல்லியமாக நிலைத்துவிடுவதுண்டு் அவ்வாறான அழியாத சில கனவுகளைப் பற்றிய தமது அனுபவங்களை அப்போது நண்பர்கள் பகிர்ந்துகொண்டனர். அதில் ஒரு நண்பர் விவரித்த கனவு அதன் வினோதத்தால் என் நினைவில் தன் விட்டது.

அக்கனவில் நண்பர் இறந்துபோய் சடலமாகக் கிடக்கிறார். வீட்டுக் கூடத்தில் உற்றார் குழுமியிருக்க, மனைவியும், பெற்றோரும் கதறி அழு கின்றனர். தலைமாட்டில் எரியும் விளக்கில் ஒருபெண் திரியைத் தூண்டிவிட்டு எண்ணெய் நிரப்புகிறாள். நண்பருக்குப் பிடிக்காத நெடியில் ஊது பத்தி புகைகிறது. எல்லாவற்றையும் விலகியிருந்து அறிகிறது நண்பரின் உடலற்ற பிரக்ஞை . அப்போது தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதைப் போல புலன்களனைத்தும் குளிர்ந்துபோயிருந்ததாக ஒரு உணர்வு மாத்திரம் மீந்திருந்தது என்று சொன்ன நண்பர், தலைமாட்டிற்கு நேரே கூடத்தைத்தாண்டி வீதியைப்பார்க்க திறந்துகிடந்த தலைவாசலில் தனது பதின்மவயது நண்பனைக் கண்டார். பித்தான்கள் போடப்படாத சட்டை திறந்து வயிற்றைக் காண்பித்துக் கொண்டு, இடுப்பிலிருந்து இறங்க முயலும் கால்சட்டையை ஒருகையால் இழுத்துப் பிடித்தபடி மற்றொரு கையால் சீக்கிரம் வாவென சைகை காட்டுகிறான். நண்பருக்குப் புரிகிறது.

சாமித்தோப்பின் மூலைக்கிணற்றில் நீந்த எல்லோரும் போய்விட்டனர். இவர்தான் கடைசி. நண்பன் பொறுமையிழந்து கால்மாற்றி வைக்கிறான். எவ்வளவு முயன்றும் படுத்துக்கிடப்பவரால் எழ முடியவில்லை. சட்டென்று விளங்கியது. இந்தஎழவு அழுகையை இவர்கள் நிறுத்தினால்தான் அவர் எழுந்து நீச்சலுக்குப் போகமுடியும். அவர் பேச்சு மட்டுமல்ல கத்தி கூப்பாடு போட்டும் யாருக்கும் கேட்கவில்லை. வார்த்தைகள் ஒலிவடிவம் கொள்ளாமல் நீரின் மேற்பரப்பிற்கு வந்தவுடன் உடைந்துபோகும் காற்றுக்குமிழிகள் போலக் குரல்வளைக்குள்ளாகவே கலைந்து போனது. வெளியே நிற்கும் நண்பன் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்தபடி நகர, இவர் 'விட்டுப்போகாதே!' என எழமுயல, அர்த்தமற்ற கேவலுடன் படுக்கையினின்றும் விழித்தெழுகிறார். பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியும் குழந்தையும் யாரோ போலத் தோன்ற, தலையை உதறி உடலைநிமிர்த்தி சமநிலைக்கு வந்தவர் மீத இரவுமுழுவதும் தூங்காமல் இக்கனவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்திருக்கிறார். கனவில் வந்த அந்த பால்ய நண்பன் தனது பதினான்காவது வயதிலேயே விஷக்காய்ச்சலில் மாண்டு போனவன் இத்தனைவருடங்கள் கழித்து எதற்கு இந்நண்பரைக் காணவந்தான்? அதுவும் பிழைப்புதேடி சொந்த ஊரைவிட்டுப் பலநூறு மைல்கள் தாண்டிவந்து சேர்ந்த இந்நகரிலுள்ள வீட்டிற்கு எப்படி வழி கண்டுபிடித்து வந்திருப்பான்? அவனது அந்த அழைப்பின் பின்னால் ஒளிந்திருக்கும் மறைபொருள் என்ன? உண்மையில் மரணம் குறித்த முன்னுணர்த்தல் ஏதேனுமிருக்குமோ? என அரண்டுபோன நண்பர் சோதிடரொரு வரை கலந்தாலோசித்த பிறகு சனிபகவானுக்கு எழுவாரங்கள் எள்ளும் நெய்யுமிட்டு பரிகாரம் செய்திருக்கிறார். நான் சிரித்தபடியே நண்பரை வினவினேன். "நீங்க மத்த எல்லாவற்றையும் விட உங்கமனைவி, குழந்தை மேல் அதிக ஆசை வச்சிருக்கிங்க இல்லையா?" நண்பர் தயக்கத்துடன் 'ஆம்' என்றார். இவ்வாழ்க்கையின் மீது அவர் கொண்டிருக்கும் மாளாத காதலே அவருடைய ஆழ்மன விருப்பமாகத் தலைகீழாக்கப்பட்ட நிலையில் மரணம் குறித்த நிகழ்வாக மாறிக் கனவில் வெளிப்பட்டிருக்கிறது என்றேன். எனது அரைகுறை படிப்பையும், சொந்தக் கற்பனையையும், கலந்து நான் சொன்னக் காரணத்தை நம்பியவராக நண்பர் மலர்ந்து சிரித்தார்.

 'தன் மரணக் கோலத்தைத் தானே பார்ப்பது' என்பது பலரும் பலவாறு கற்பனைகளிலும், சில சமயம் கனவுகளிலும் காண்பதுவே. அவ்வப் போது, ஏதேனுமொரு பிரபலத்தைப் பற்றிய மரணச்செய்தி புரளியாகப் பரவி ஓயக்காண்போம். 'கண்ணேறு கழித்தல்' என்னும் பரிகாரநிமித்தம் அவர்களே கிளப்பிவிடும் வதந்தி அது எனக் கூறுவோரும் உண்டு. கல்யாணத்தின்போது ஒப்புக்கொண்ட சீர்வரிசைகளைக் குழந்தை பிறந்த பின்னும் தரவில்லை என்பதற்காக, உயிரோடிருக்கும் போதே தன் மாமனாருக்கு உத்தரகிரியைப் பத்திரிகை அடித்து விநியோகித்த மருமகன் ஒருவரையும் நான் அறிவேன். தன் மரணத்தைத் தானே காண்பது அல்லது கேள்விப்படுவது என்பது முதல்கணத்தில் வலிதருவதாக இருப்பினும், அதைக்குறித்து ஆழ யோசிப்பவர்களுக்கு அதுவொரு அகவயப் பயணமாகவே அமையும் என்பது திண்ணம்.


நடைப்பயிற்சியை முன்னிட்டு நம்மில் சிலர் காலையிலோ, மாலையிலோ உலாவச் செல்வதுண்டு அபியின் பின்வரும் கவிதையும் அப்படிப்பட்ட ஒரு உலாவைப் பற்றிதான் விவரிக்கிறது, ஆனால் இது பௌதீகமான தளத்தில் நிகழும் ஒன்றுஅல்ல. இக்கவிதை உத்தேசிக்கும் வழி அகவயமானது. நமக்கு அவ்வளவாக பரிச்சயமற்றது என்பதால் முதலில் தடுமாறவைக்கக்கூடியது. ஆயினும் சற்று நிதானமாக எட்டு வைத்தால் இக்கவிதையுடன் சேர்ந்து அது சுட்டும் இடத்தில் நாமும் சென்றடையலாம்.

    உலா      

        நிழல்
        தொட்டு எழுப்பிவிட்டுப்
        போனது
        ஒருநாளும்
        படுக்கையில்
        பின்னம் விடாமல்
        வாரிச் சுருட்டி
        முழுமையாய் எழுந்ததில்லை
        இன்றும் தான்.        

        வாடைக் காற்று
        வழித்துப் போகும்
        தேய்மானம்
        பொருட்படுத்தாமல்
        நடைபாதை நெருப்புத்
        தொற்றித் தொடர
        ஊர்க் கோடி வரை
        உலாவப் போக வேண்டும்        

        ஊர்க்கோடி
        ஒருநாள் இருந்த இடத்தில்
        இன்னொரு நாள்
        இருப்பதில்லை        

        போய்ச் சேரும் போது
        பெரும்பாலும்
        இருட்டி விடும்        

        இருளின் பேச்சு மட்டும்
        மயக்கமாய்
        கனத்துக் கேட்கும்
        அதில் மின்மினிகளின்
        பாதையன்றி
        வேறொன்றும் தெரியாது        

        திரும்பிப்பார்த்தால்
        ஊர்
        புகைவிட்டுக்கொண்டு
        சின்னதாய்த்தெரியும்
        பிணங்கள் அங்கே
        பொறுமையிழந்து
        கூக்குரலிடுவது கேட்கும்.....
        திரும்பத்தான் வேண்டும்
        மனமில்லாவிடினும்,        

        திரும்பி
        கடைவாயில்
        மரணம் அதக்கி
        மழுப்பிச் சிரித்து
        உறங்கித் திரியவேண்டும்
        மறுபடி நிழல்வந்து
        தொட்டு எழுப்பும் வரை,

 'நாம் பேசும் வார்த்தைகள், நாம் பேசியிராத முறைகளில் இதற்கு முன்பு நாம் சந்தித்திராத சந்திப்புகளில், இதுவரை நம்மைத் தொட்டிராத த்வனிகளுடன் நம்மை எதிர்கொள்கின்றன கவிதையில்' என்று கூறும் அபியின் குரல் தமிழ்க் கவிதையின் அபூர்வங்களில் ஒன்று. இலக்கியச் சூழலின் சந்தடியிலிருந்து எப்போதும் ஒதுங்கியே காணப்படும் அவரது சுபாவத்தினால் மட்டுமல்லாது, அவருடைய கவிதைகளின் அசாதாரணமான உள்ளடக்கம் மற்றும் அதன் முன்பரிச்சயமற்ற தன்மை காரணமாகவும், தனது சாதனைகளுக் குரிய அங்கீகாரத்தையும், கவனத்தையும் போதிய அளவு பெறாதவர் அவர்.


மொழியை மிகுந்த விழிப்போடும், வீச்சோடும் பயன்படுத்துகிற அபியின் கவி உலகம் பலவிதங்களிலும் தனித்துவமான ஒன்று. அது அருவமான சித்தனைகளையும் ஆழ்மனப் படிமங்களையும் உள்ளடக்கியது. புற உலகின் தோற்றங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் அகவயமான காரணிகளைக் காணும் பொருண்மைத்தன்மை உடையது. சொல்லுக்கும், பொருளுக்கும் இடையிலான பிளவை, அதில் நிரம்பியுள்ள நிழல்வெளியைக் குறித்த கவனத்துடன் எழுதப்படும் இவரது கவிதையின் வரிகள் ஆழமான வாசிப்பைக் கோருபவை. மேற்சுட்டப்பட்டிருக்கும் கவிதையும் இத்தன்மையதே. இக்கவிதையினுள் தொழிற்படும் காலம் நாம் வழக்கமாக உபயோகிக்கும் கடிகாரச் சுற்றிற்கு உட்பட்ட ஒன்றல்ல. மட்டுமின்றி இதில் சுட்டப்பெறும் இடங்களான படுக்கை, ஊர், நடைபாதை, ஊர்க்கோடி என்பவையும் திட்டவட்டமான பௌதீக இருப்பாக இல்லாமல் அசையும் படிமங்களாகவே காணப்படுகின்றன.

எனவே இக்கவிதை குறிப்புணர்த்தும் உலா என்பது உள்முகமான ஒன்று என்பதை அறிகிறோம் கொண்டாட்டமான வாழ்வின் வெளிச்சத்திற்கடியில் ஒளிந்திருக்கும் மரணத்தின் நிழலை ஒரு எக்ஸ் கதிர் படம்போல் பிடித்துக்காட்டுகிறது இந்தக் கவிதை. இருப்பிற்கும் இறப்பிற்குமிடையில் இருப்பதாக நாம் கருதும் இடைவெளியைத் தனது சொற்களால் அழிப்பதன் மூலம் இக்கவிதைவின் அனுபவத்தை உருவாக்குகிறார் அபி. 'ஒரு நாளும் படுக்கையினின்றும் பின்னம் விடாமல் எழுந்ததில்லை', 'ஒரு நாளிருந்த இடத்தில் இருப்பதில்லை ஊர்க்கோடி' 'ஊர் புகைவிட்டுக்கொண்டு தெரியும், 'என்பிணங்கள் பொறுமையிழந்து கூக்குரலிடும்’ போன்ற தொடர்கள் முதலில் தரும் திடுக்கிடலைக் கடந்து உள்நுழையும் ஒருவருக்கே இக்கவிதை தனது அனுபவத்தின் வாசலைத் திறக்கிறது எனலாம் 

எங்களூர்ப் பகுதியில் இறந்த உடலைப் பாடையில் வைத்து ஆற்றின் அக்கரையிலுள்ள இடுகாட்டிற்குக் கொண்டு செல்லும்போது, ஒரு குறிப்பிட்ட தூரம்வரையிலும் இறந்தவரின் முகம் ஊளரைப் பார்க்கத் திரும்பியிருக்குமாறு எடுத்துச் செல்வார்கள். குறிப்பிட்ட ஒரு இடம் வந்தவுடன் உடலைத் திசைமாற்றி முகம் இடுகாட்டைப் பார்த்தவாறு இருக்க சுமந்து செல்வார்கள். அந்த இடத்திற்கு 'பாடை மாற்றி' என்று பெயர். அவ் விடம் வரும்வரை உடலுக்குரியவருக்கு ஊருடன் இருந்த பிணைப்பு அத்தோடுஅறுந்து இனியெப்போதும் திரும்பமுடியாத வழியில் இடுகாட்டை நோக்கிச் செல்வதாக ஒருநம்பிக்கை, இதே மாதிரியான ஒரு தலைகீழாக்கல் மூலமாகவே இக்கவிதையில், வாழ்வு X மரணம் என்ற வழக்கமான எதிரீடுகளைக் கலைத்து அவற்றின் அர்த்தங்களை ஒன்றின் பரப்பிற்குள் மற்றொன்றை ஊடாடச் செய்வதன் வழியாக ஒரு அனுபவத்தை உருவாக்கித் தருகிறார் அபி.

இங்கு எடுத்தாளப்பட்ட கவிதைகள் இரண்டினுள் முதலாவதாக அமைந்த புறநானூற்றுப் பாடல் மரணத்தைப் புறவயமாக ஆராய்கிறது. திட்டவட்டமான நோக்குடன் இழப்பு குறித்து ஒரு துல்லியமான சித்திரத்தை வரைந்து காட்டுவதன் வாயிலாக அப்பாடல் வாழ்வின் நிலையாமை குறித்து நமக்கு போதிக்கிறது. அப்பாடலின் உட்கிடையாக அமைந்திருக்கும் செய்தி அநித்திய மான இந்த வாழ்வை அர்த்தமுள்ள ஒன்றாக நாம் ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பதே.

இரண்டாவதாகச் சுட்டப்பெற்ற அபியின் கவிதையோ இறப்பை அகவயமான நிலையிலிருந்து பரிசீலனை செய்கிறது. நாம் இருந்துகொண்டிருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் தன்மையைக் கோடிகாட்டும் இக்கவிதை நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ அறிவுரை எதையும் நம்மிடம் பகர்வதில்லை . மாறாக மரணம் குறித்த முடிவற்ற யோசனைகளின் அதலபாதாளத்திற்குள் நம்மை இழுத்துக் கொண்டுவிடுகிறது. சாவு குறித்த நமது இந்தத் தயக்கமும் அச்சமுமே , அதன் மறுதலையாக வாழ்வு குறித்த ஈர்ப்பும் துய்ப்புமாக நம்மிடம் வெளிப்பாடு காண்கிறது எனலாம். காலவரிசைப்படி இவ்விரு கவிதைகளுக்குமிடையில் பல நூற்றாண்டுகள் இடைவெளியிருப்பினும் இவற்றின் சாராம்சமான யோசனைகளின் அடிப்படையில் அருகருகே வைத்து நோக்கத்தக்கவையே. மனித சிந்தனையின் பரிணாமவரலாற்றில் தொடக்கம்தொட்டே நீடித்துவரும் புதிர்களில் மரணமளவிற்கு வசீகரமானது வேறு எதுவுமில்லை. அதனாலேயே தர்க்கத்தின் துணை கொண்டு ஆராய்கின்ற தத்துவவாதிகளை மட்டுமில்லாது, கற்பனையின் சிறகு கொண்டு பறக்கும் கவிஞர்களையும் அது ஒன்று போலவே ஈர்த்து வருகிறது.

Monday 2 November 2020

கவிதையும் காலமும்

இங்வுலகில் நம்மைச் சுற்றிலும் அனந்தகோடி ஜீவராசிகள் உயிர்கொண்டு உலவி வருகின்றன. அவற்றுள் பலவற்றை நாம் தினமும் எதிர்கொண்டு கடந்தாலும்கூட கடக்கும் அக்கணங்களைத் தாண்டி ஆழமான பதிவுகள் எதுவும் நம் மனதில் தங்குவதில்லை . அவற்றால் ஏதேனும் ஒருவகையில் நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்படாதவரையில் அவை குறித்த நமது கவனம் மிக மேலோட்டமான ஒன்றாகவே இருக்கும். அவ்வகையில் நோக்கினால், நான் காக்கையைச் சிறுகுழந்தையாக இருக்கும் போதிலிருந்தே பார்த்து வந்திருந்தாலும், அதுபற்றி ஊன்றித் தெரிந்துகொண்டது எனது பதினான்காவது வயதில்தான் எனலாம்.

ஒன்பதாம்வகுப்புத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அப்போதுதான் தொடங்கியிருந்தது. நான், கதிரவன், வடிவேல், புகழேந்தி, ராஜேந்திரன் என ஒரு சிறுபடையே காலை உணவிற்குப் பிறகு ஓடைப்புளிய மரத்தடியில் கூடுவோம். அங்கு வைத்துதான், அப்போதைய மனநிலைக்கேற்ப அன்றையப் பொழுதிற்கான வேலைத் திட்டத்தைத் தீர்மானிப்போம். தெரிந்த பல்வேறு விளையாட்டுகளும் சலித்துப்போனதால், இம்முறை அருகிலிருந்த காட்டிற்கு கிளிக்குஞ்சும், பொன்வண்டும் பிடிக்கப் போகலாம் என முடிவுசெய்தோம். கல்வராயன் மலையடிவாரத்தில் அரசின் வனத்துறை கட்டுப் பாட்டிலிருந்தது அவ்வனப்பகுதி. ஆடு ,மாடு மேய்ப்பவர்கள் , சுள்ளி பொறுக்குபவர்கள் என அரிதாகவே ஆள்நடமாட்ட்ம் இருக்கும் . உச்சிப் பொழுதுவரை சுற்றியலைந்தும் கிளிக்குஞ்சு எதுவும் அகப்படவில்லை. ராஜேந்திரன் மட்டும் இரண்டு பொன்வண்டுகளைப் பிடித்து தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்திருந்தான். பசி வேறு வயிற்றைக் கிள்ளியது, பொழுது சாய்வதற்குள் திரும்பிவிடவேண்டும் என்று வேகமாக நடந்தோம்.

நல்லதண்ணீர் ஓடையைக் கடந்து மேலேறியதும் ஒற்றைப் புளியமரத்தைச் சுற்றிக்கொண்டு போகும் பாதையில் திரும்பினோம். வரிசையின் கடைசியில் மெதுவாக வந்துகொண்டிருந்தேன். திடீரென அந்தப் புளியமரத்தினின்றும் எழுந்த காக்கைகளின் கரைச்சலைக் கேட்டுத் திரும்பியதும், எங்கிருந்து என்று தெரியாதபடி வேகமாக வந்திறங்கிய காக்கை ஒன்று என் தலையை மோதிவிட்டுப் பறந்தது. அய்யோவெனும் கூச்சலுடன் தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்து கொண்டேன். மோதிய இடத்தில் கடும் வலி, தொட்டுத்தடவிய கையில் ரத்தப் பிசுபிசுப்பு . சத்தம் கேட்டு ஓடிவந்த வடிவேல் அருகிலிருந்த வரப்பிலிருந்து கிணற்றுப் பூண்டுத் தழையை பறித்துவந்து கசக்கி காயத்தில் விட்டான். 'கால் நகம்தான் கீறிவிட்டிருக்கிறது. சின்னக்காயம்தான் ஆறிவிடும்' என்றான். வீட்டிற்குப் போகும்போது லேசாக ஜீரம் கண்டிருந்தது.

காயத்தைப் பார்த்து அம்மா பதறிப்போனாள். சொல்லாமல் கொள்ளாமல் காட்டிற்குத் திருட்டுத்தனமாகப் போனதற்காக எல்லோரும் திட்டினார்கள். 'காக்கா சனீஸ்வர பகவான் வாகனமில்லையா? மூணு வாரம் நவக்கிரகம் சுத்திவந்து எள்ளு முடிஞ்ச எண்ணெய் விளக்கேத்திவை. ஏதாவது தோஷம் இருந்தா கழிஞ்சுடும்' மேலத்தெரு பொன்னம்மா பாட்டி அம்மாவிடம் சொன்னாள். இன்றும் தலையைத் தடவினால் இடது காதுக்கு மேலாக அந்த வடு விரல்களுக்குத் தட்டுப்படும். இத்தனைக்கும் கூட்டைக் கலைத்து முட்டை எடுத்ததோ உண்டிவில் வைத்து எந்தக் காக்கையின்மீதும் கல்லெறிந்ததோ கிடையாது. அப்படியிருக்க, ஆறேழுபேர் கொண்ட வரிசையில் அந்தக்காகம் என்னை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொத்தியது ஏன் என்ற கேள்விவெகுநாட்களுக்கு என்னைக் குடைந்தெடுத்தது.

அப்போதிலிருந்து காக்கைக்கும் எனக்குமான ஒரு முடிச்சு விழுந்திருக்கவேண்டும். என்னை அறியாமலேயே காக்கையைப் பற்றிய கவனம் என்னில் கூடுதலானது. அது குறித்த தகவல்கள் ஏதேனும் கண்ணில் பட்டால் வரிவிடாமல் படிக்கவும் தொடங்கினேன். அவ்வாறுதான் குளிர் மிகுந்த ஐரோப்பிய நாடுகளில் காக்கைகள் வசிப்பதில்லை என்ற தகவலை ஏதோ ஒரு பத்திரிகையில் துணுக்குச் செய்தியாகப் படித்திருந்தேன். காலையில் தூக்கம் கலைந்து எழும்போது, ஜன்னல் வழியே காக்கைகளின் கரைதல் காதில் விழாது போனால் அது என்ன தேசம்? அதன் காலைகளுக்கு ஏது அழகு? பறவைகளின் சலசலப்பில்லாத அந்த அமைதியில் மனம் கவியுமா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்,

கழுத்தில் சாம்பல் நிறத்திற்கு பதிலாக அடர்ந்த கறுப்பு வண்ணத்தைக் கொண்ட காக்கையைச் சுட்டிக்காட்டிய அம்மா, அது புழக்கடைக்குப் பின் நிற்கும் முருங்கை மரத்திலிருந்து கூவினால் 'வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள்' என்று கூறினாள். "ஆமாம் அதுக்கு ஜோசியம் தெரியுமாக்கும்" என்று நான் கேலியாகச் சிரித்தேன். நான் அப்போது, எனக்குத் தமிழ் கற்பித்து வந்த குருலிங்கம் ஐயாவின் போதனைகளால் மூடநம்பிக்கை களுக்கு எதிரான பட்டறிவின் மீது பற்று கொண்டிருந்தேன். பின்னால், பலவருடங்கள் கழித்து 'ஐங்குறுநூறு' பாடல் ஒன்றினை எதேச்சையாகப் படிக்க தேர்ந்த போதுதான் என் அம்மாவின் நம்பிக்கை ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வயதுடையது. பகுத்தறிவு தர்க்கங்கள் எல்லாம் தோன்றுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பிருந்தே சமூகத்தின் அடிமனதில் நினைவாய்த் தொடர்ந்து வருகிறது என்பதை உணர்ந்துகொண்டேன். ஓதலாந்தையார் பாடிய பாலைத்திணையைச் சேர்ந்த அப்பாடல் பின்வருமாறு, 
 
"மறுவில் தூவிச்சிறுகருங் காக்கை
அன்புடை மரபின் கிளையோடாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்திற்றருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளையொ
டஞ்சி லோதியை வரக்கரைந்தமே."

தான் வேண்டுவது பலித்தால் இன்னது படைப்பேன் என்று கடவுளரையோ, பிறவற்றையோ வேண்டிக் கொள்வது பராய்க்கடன் உரைத்தல் எனப்படும். அவ்வாறு வேண்டும் ஒரு தாயின் கோரிக்கையாகவே இப்பாடல் அமைந்துள்ளது. தலைவி, தலைவனோடு உடன்போக்கு சென்றுவிட்டதை அறிந்த தாய், தன் மகள் தலைவனோடு தன் இல்லத்திற்குத் திரும்பவேண்டும் என விரும்புகிறாள். அவ்வாறு வந்தால் சுற்றம்சூழவிருந்து அவளுக்கு மணம் செய்வித்துக்கண்குளிரக்காணவேண்டுமென அவாவுறுகிறாள்.அவர்கள் திரும்பி வருவதன் நிமித்தமாகக் கரையும்படி காக்கைகளை இரந்து வேண்டுகிறாள். அவ்விதம் நடந்து கொண்டால் காக்கைக்குக் கறி சேர்த்த உணவுவைத்து விருந்து படைப்பதாகக் கூறுகிறாள். 

இக்கவிதையில் தொனிக்கும் இறைச்சிப்பொருள் கொண்டுவந்து சேர்க்கிற நுட்பமும், ஆழமும் கவனிக்க வேண்டியது. இறைச்சி என்பது கவிதையின் சொற்பொருளுக்கு புறத்தே தோன்றும் குறிப்புப் பொருளாகும். ‘நீ அன்புமிக்க உன் சுற்றத்தாரோடு வருவாயானால் அனைவரும் உண்ணும் அளவிற்கு மிகுதியான உணவை உங்களுக்குப் படைப்பேன் ‘ என்பது கவிதையில் அமைந்துள்ள நேரடியான பொருளாகும். இதற்கும் புறத்தே தோன்றும் இறைச்சிப் பொருள் என்மகள் தலைவனோடு வந்தால் அவர்களுக்கு எம்வீட்டில் மணம் செய்வித்து சுற்றத்தாரோடு இருந்து விருந்தளித்து மகிழ்வேன் என்பதாகும்

மனித வசிப்பிடங்களுக்கு அருகிலேயே வளரும் பறவைதான் என்றபோதிலும், கிளி, புறா போலக் காக்கையை யாரும் செல்லப்பறவைகளாக வளர்ப்பதில்லை. என்றாலும் மனிதர்களின் வாழ்க்கைமுறையில் உண்டாகும் மாற்றங்கள் இவற்றின் இருப்பையும் மறைமுகமாக பாதிக்கவே செய்கின்றன. பாட்டி வடைசுட்ட கதையில் வருவதுபோல நரியின் தந்திரமான பேச்சுக்கு மயங்கிவடையைக் கீழே போடும் அசட்டுக்காகமல்ல இப்போதிருப்பவை . கூரைகளையும் மரக்கிளைகளையும் மறந்து கான்கிரிட் பொந்துகளில் வசிக்கவும், ஆண்ட்டெனா கம்பிகளிடையே கூடுகட்டவும் இவை பழகிக்கொண்டன. தன் வீட்டு முற்றத்திலிருந்து, சிறு கரண்டியை தூக்கிக்கொண்டு போய்விட்டு பதிலுக்குப் பெரிய கரண்டியைக் கொண்டு வந்துபோட்ட ஒரு காக்கையைபற்றி ஞானக்கூத்தன் தன் கவிதையொன்றில் குறிப்பிடுகிறார். பள்ளியில் படிக்கும்போது மனனம் செய்த சங்ககாலப் பெண்பாற்புலவர்கள் பட்டியலில் என் கவனத்தைக் கவர்ந்த பெயர் "காக்கைப் பாடினியார்' என்பதாகும். அவர் காக்கையைப் பற்றி எழுதிய பாடல் ஒன்றையும் நான் படித்ததில்லை. என்றாலும் அப்பெயரின் மீது ஏதோவொரு இனம்புரியாத ஈர்ப்பு இருந்துவந்தது. கல்லூரி நாட்களில் பார்த்த 'ஹிட்ச்காக்’ படம் ஒன்றில் கடற்காகங்கள் ஆட்கொல்லிப் பறவைகளாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன. அவை கூட்டம்கூட்டமாகப் பறந்து வந்து மனிதர்களைத் தாக்கும் காட்சி நம் நெஞ்சைப் பதறவைக்கும் விதமாகப் படமாக்கப்பட்டிருந்ததாக நினைவு. தன்னைத் தவிர்த்து, சுற்றிலுமுள்ள பிற அனைத்தையும் எதிர்மறையாகவே காணும் மேற்கத்திய மனோபாவத்தின் வெளிப்பாடு அத்திரைக்கதை ஆக்கம். மனிதனின் இன்பத்திற்கும், இருப்பிற்காகவுமே பிற உயிர்களும், இயற்கையும் படைக்கப்பட்டுள்ளன என்ற அசட்டு ஆதிக்கக்குணத்தின் காரணமாகவே வெள்ளையர் இப்புவியின் குழல்அழிவுக்குப் பல நூற்றாண்டுகளாக, பலவகைகளிலும் காரணமாக இருந்தனர். இன்று அவர்களே உருத்திராட்சப் பூனைகளாக மாறி நம்மைப்பார்த்துச் சுற்றுக்குழல் பாதுகாப்புப்பற்றி உபதேசித்து வருகின்றனர். இதற்கு மாறாக, தொன்மங்கள், சடங்குகள், பாரம்பரிய நம்பிக்கைகள், வாய்மொழிக் கதைகள், பாடல்கள் இவற்றின் வாயிலாக வெளிப்படும் நம்முடைய கீழைத்தேய ஞானமோ, மனிதன் மட்டுமன்றி அனைத்து உயிர்களும் இயற்கையுடன் ஒத்திசைந்துவாழும் ஒரு முறைமையையே விதந்துபேசுகிறது. சூழலை ஆதிக்கம் செய்வதற்குப் பதிலாக அதனுடன் அரவணைத்துச் செல்வது பற்றியே நம் மூதாதையர்கள் சிந்தித்தார்கள்.

தனக்குகிடைத்த சிறு உணவென்றாலும் கரைந்து சுற்றத்தையே அழைத்தபிறகே உண்ணுவது காக்கையின் இயல்பாகும். தனிமனிதனைக் காட்டிலும் சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் நமதுமரபில் காக்கையி்ன் இந்த இயல்பு விருந்தோம்பலுக்கு ஒரு உதாரணமாக எடுத்தாளப்படுகிறது. இதுதவிர மற்றொரு நம்பிக்கையும் நம்மிடையே தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. அது இறந்துபட்ட மூதாதையர் காக்கையாக மறுபிறவி கொள்கிறார்கள் என்பதாகும். சிரார்த்தம், திதிக்குரிய விஷேச தினங்களிலும், அமாவாசைபோன்ற விரதநாட்களிலும் சமைத்தவுடன் காக்கைக்குச் சோறு வைத்துவிட்டு பிறகு தாம் உண்ணும் வழக்கம் இன்றும் நம்மிடையே தொடர்கிறது. இந்த நம்பிக்கையைத் தொட்டுபேசும் 
ஆத்மாநாமின் கவிதை ஒன்றுண்டு


அழைப்பு

இரண்டாம் மாடியில் உப்பரிகையில்
ஒற்றைச் சன்னல் அருகில்
நான் என்னோடு
உணவருந்திக்கொண்டிருந்தேன்
அருகில் வேப்பமரக்கிளை
மீதிருந்த காகம் அழைத்தது
பித்ருக்களோ தேவர்களோ
என எண்ணி
ஒரு சிறு கவளச் சாதத்தை
வெளியே வைத்தேன்
சாதம் சாதமாக
காகம் பறந்துவிட்டது
யாருடைய பித்ருக்களோ
நானறியேன்,

அவசரம் என்பதுதான் இக்காலகட்டத்தின் மந்திரமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்து உண்பதே அசாதாரணமாக ஆகிவரும் காலமிது. இதில் அடுத்தவர்களை அழைத்து விருந்தோம்பும் சாத்தியங்கள் ஏது? அத்தகையதொரு தனிமனிதன்தான் இக்கவிதையில் வருபவன். ஆனால் அவனது மனமோ இன்னமும் மரபுடன் வேர்கொண்டிருப்பது. அதனால்தான் தனியே உணவருந்தும் போதும் ஒருகை சாதத்தை ஜன்னல் காக்கைக்கு வைக்கிறான் அக்காக்கையோ அதை உண்ணாமல் பறந்துவிடுகிறது. உயிரோடு இருப்பவர்களே உணவுக்கு ஆலாய்ப்பறக்கும் காலமிது. இதில் இறந்தவர்களின் உணவைப் பற்றிக் கவலைப்பட யாருக்கு அக்கறை ? ‘யாருடைய பித்ருக்களோ நானறியேன்' எனும் வரிகளில் வெளிப்படும் முரண்நகைத் தொனி அபூர்வமானது. மரணத்திற்குப்பிறகான இருட்டை சூன்யத்தைக் குறித்த அச்சம் மனிதனுக்குள் தொடர்ந்து இருப்பது அந்த அச்சத்தினை எதிர்கொள்ளும் முகமாகவே இது போன்ற நம்பிக்கைகள் ஒவ்வொரு சமூகத்திலும் நிலவி வருகின்றன. கடவுளும் மதமும், அறிவியலும் அவைசார்ந்த தத்துவங்களும் சாவுகுறித்த இப்புதிரை முழுவதுமாக விளக்க முடிவதில்லை . அறிவின் அந்த அறியமுடியாப் பிரதேசம்தான் இத்தகைய நம்பிக்கைகளின் விளைநிலமாகும்.

கால அடிப்படையில் இரு கவிதைகளுக்குமிடையே பல நூற்றாண்டுகள் இடைவெளி உள்ளது. அன்று உபயோகித்த மொழியில் அல்ல இன்றைய கவிதை எழுதப்படுவது பார்வைகளும், இலக்கணங்களும் கால வழுவிலதானது. இருப்பினும், மனித அகத்தின் அந்தரங்கமானதொரு நிலையைத் தம் சொற்களால் ஒளியுறுத்த முயலும் தன்மையால் இவ்விரு கவிதைகளும் உணர்வு ரீதியாக அருகருகே அமைவதாகின்றன.

Monday 26 October 2020

தந்தையர்களும் தனையர்களும்

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு, ஒரு கல்லூரிக்குச் சேர்க்கை விஷயமாக நண்பர்கள் இருவருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தேன் . ஒருவர் மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர், என்னைக் காட்டிலும் பத்து வயது மூத்தவர். மாலைநேரக் கல்லூரியில் என்னுடைய வகுப்புத்தோழராக இருந்தவர். மற்றவர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் கிளை மேலாளர். இருவரும் தங்களுடைய நேரடிப் பொறுப்பின் கீழ் ஒரு குட்டி அலுவலகத்தையே கட்டிக்காத்து வந்தார்கள். வெவ்வேறு துறையில் பணிபுரிபவர்கள் என்றாலும் பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

காரில் ஏறிஅமர்ந்ததுமே இருவரின் பேச்சும் அவர்களுடைய குழந்தைகளைப் பற்றித் திரும்பியது. காரை மேலாளர் ஓட்டிக்கொண்டிருந்தார். அருகில் உதவிப் பொறியாளர் உட்கார்ந்திருந்தார். நான் பின் இருக்கையில் சாய்ந்தபடி அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“என் பையன் இப்பதான் சுவரைப் பிடிச்சுக்கிட்டு நடக்கறான்!"

"என் பையன் என்னைப் பார்த்ததும் ஒடி வந்து காலைக் கட்டிக்குவான்!"

“என் பையனுக்கு 'ப்' வராது. அபான்னுதான் கூப்புடுவான்"

"என் பையனுக்குப் போனவாரம் காய்ச்சல் வந்து ரொம்பப்படுத்திடுச்சு"

"என் பையனுக்கு அடுத்த மாசம் மொட்டை போட்டுறலாம்னு இருக்கேன். முடி இப்பவே கண்ணை வந்து மறைக்குது “

“என் பையனுக்கு இப்பதான் மேல மூணு பல்ல முளைச்சிருக்கு “


இருவரும் மாறிமாறித் தம் மழலைச் செல்வங்களின் மகாமியங்களைப் போற்றிப் பாடிக்கொண்டு வந்தார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை . குழந்தைகள் என்று இருந்தால் ஆடவும் பாடவும் அழவும் சிரிக்கவும் தானே செய்வார்கள். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று இவர்களிருவரும் இப்படி மாறி மாறி மாய்ந்து போகிறார்கள்? ஒன்றும் விளங்காமல் கேட்டுக் கொண்டு வந்தேன். இத்தனைக்கும் இரண்டுபேரும் அலுவலகத்தில் இருக்கும்போது இறுக்கமான முகத்துடனும், குறைவாகப் பேசுபவர்களாகவுமே காணப்படுவார்கள் . எனக்கு அலுத்துப் போகவும் ஜன்னல் வழியாக, ஓடிக் கொண்டிருக்கும் சாலையோரக் காட்சிகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அவர்கள் பின் இருக்கையில் நானொருவன் இருப்பதையே மறந்து போனவர்களாகப் பயணம் நெடுகிலும் தம் பேச்சிலேயே மூழ்கியிருந்தனர்.

அதன் பிறகு ஏழெட்டு ஆண்டுகள் கழித்து மேற்சொன்ன சம்பவத்தை மீளவும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய தருணம் எனக்கு வாய்த்தது. அப்போது எனக்கு திருமணமாகி மகன் பிறந்திருந்தான். தள்ளாடி நடக்கத் துவங்கியிருந்த அவனது அர்த்தமற்ற சொற்பிரயோகங்களுக்கெல்லாம் கவிப்பொருள் கண்டு பரவசமடைந்து கொண்டிருந்தேன். 'குழலினிது யாழினிது என்பர்' என்ற வள்ளுவனுடய வரிகளின் அர்த்தம் அதன் மொத்த பரிமாணத்துடனும் எனக்குள் அப்போதுதான் இறங்கியது. குறைந்தது ஐந்தாறு குழந்தைகளையேனும் பெற்று, கொஞ்சி மகிழ்ந்திராத பட்சத்தில் இந்தச் சொற்றொடர் அவரிடத்தே பிறந்திருக்க வாய்ப்பில்லை. அள்ளிச் செறுகிய கொண்டையும், மீசைதாடியுடன் ஒற்றையாய்ச் சுற்றிய அங்கவஸ்திரமுமாய், ஒரு துறவிக்கோலத்தில் அவரை வரைந்த சித்திரக்காரனிடத்தே எனக்கு மனக்குறைதான்.

நம் குழந்தையின் மீதான தாயின் பரிவும் பாதுகாப்புணர்வும் அனைத்து ஜீவராசிகளுக்குமான பொதுவான இயற்கை நியதி.தந்தையின் உணர்வு அப்படிப்பட்ட ஒன்றல்ல . குழந்தையின் மீதான தந்தையின் பாசம் முரண்களும் புதிர்களும் நிரம்பிய ஒன்று என்றாலும், தன்சுயத்தின் நீட்சியாய் தனது கைகளில் தன்னுடைய குழந்தையைக் காணும் ஒரு ஆண் முதலில் சற்றுக் கலவரமடைவது என்னவோ உண்மைதான் என்றாலும் தான் என்னும் உணர்வை ஓரளவேனும் அழித்துக் கொள்ளும்போதே அவன், தன்னின் ஒரு பகுதியாக அக்குழந்தையை ஏற்றுக்கொண்டு கொஞ்சத் துவங்குகிறான். அதுகாறும் ஆண் என்ற இந்த ஜந்துவை சரிவரப் புரிந்துகொள்ள முடியாமல் குழம்பியும் அஞ்சியும் அருவருத்தும் தன் விருப்பு வெறுப்புடன் எதிர்கொண்டுவந்த பெண், தாயான பிறகே குழந்தையை முன்னிட்டுத் தன் மெய்யான அதிகாரத்தைக் கைப்பற்றுகிறாள் . தான் பெற்றெடுத்து தன் கைக்குள் வைத்திருக்கும் குழந்தையை விடவும் எவ்வகையிலும் மேம்பட்ட ஒன்றல்ல ஆண் என்கிற அசட்டு ஜன்மம் என்கி்ற தன்நிச்சயம் பிறந்தவுடன் கணவனை, அவனது அதிகார ஆர்ப்பாட்டங்களை அவள் சற்றும் சட்டைசெய்வது கிடையாது. ஆக ஒரு ஆண் தன் விட்டேற்றியான மனோபாவத்தை விட்டொழித்துக் குடும்பம் என்ற அமைப்புக்குள் தன்னை முழுவதுமாகப் பொருத்திக்கொள்வது அவன் தந்தையாகத் தன் பொறுப்பைஉணரும் போதுதான்பிரியத்தை வெளிப்படுத்துவதற்குத் தொடுதலைக் காட்டிலும் சிறப்பான வழிமுறை வேறில்லை. தம் அன்பிற்குரியவர்களைக் காணும்போது வரவேற்கும் விதமாகக் கைகனைப் பற்றிக்கொள்ளுதல், மார்புறத் தழுவிக் கொள்ளுதல், உச்சிமுகர்தல், கன்னத்தில் முத்தமிடுதல் போன்ற செயல்கள் மொழி , இன பேதமின்றி உலகெங்கிலும் பொதுவான வழக்கமாகவே காணப்படுகிறது. மேலும் வீட்டில் நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடத்தே செல்லுபடியாகக்கூடிய ஒரே மொழியும் அதுதான். எனில் குழந்தைகளைக் கொஞ்சும் போது சொல்லவேத் தேவையில்லை. அத்தனை இலக்கண வழுவுகளுக்குப் பிறகும், மொழி அதன் உச்சபட்ச உணர்வைத் தருவது அவ்விடத்தில்தான் என்றாலும், அள்ளி எடுத்து ஆரத்தழுவாவிட்டால் அது கொஞ்சலே இல்லை. குழந்தையின் மேனியைத் தழுவுவதால் கிடைக்கும் அவ்வின்பத்திற்கு இணை வைக்கக்கூடிய பிறிதொரு இன்பம் இவ்வையகத்தில் இல்லை. மெய் தீண்டல் எனப்படும் அவ்வின்பம் தன் குழந்தைகளை முன்னிட்டு ஒரு ஆணுக்குக் கிடைக்கப்பெறுவது மிக குறுகிய காலமே . அது பற்றிய ஒரு நுட்பமான சித்திரத்தைத் தருகிறது பின்வரும் புறநானூற்றுப்பாடல்,

படைப்புபல படைத்து பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ்செல்வர் ஆயினும், இடைபடக்
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி
இட்டும், தொட்டும். கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே

பாடியவர் - பாண்டியன் அறிவுடை நம்பி
திணை- பொதுவியல்
துறை - பொருண்மொழிக் காஞ்சி

குறுகுறுவென்று நடந்து தன் சிறுகை நீட்டி நெய் கலந்த சோற்றினைக் கலத்தினின்றும் அள்ளிஎடுத்து வாயிலிட்டும். மண்ணில் இறைத்தும். மேனியில் பசி கொண்டும். அதே கையால் பெற்றோரைக் கட்டிக் கொண்டும் தம்மைப் பெற்றவர் எண்ணிப் பார்க்கும்படியான பல செயல்களையும் செய்யும் குழந்தையைப் பெறாதவர்கள். பலரோடு சேர்த்து விருந்துண்ணும் பெருஞ்செல்வராயினும் அவர்களுடைய வாழ்க்கை வீணானதே என்கிறது இப்பாடல்

குழந்தைக்குத் தன் உடம்பு பற்றிய பிரக்ஞை வரும் வரையிலேயே தன்னைப் பிறர் தொட அனுமதிக்கும் அதன் பின்னர் நீங்கள் மேலேபடாமல் எட்டிநிற்க வேண்டியிருக்கும் . அந்த தருணத்திலிருந்தே தந்தைக்கும் மகனுக்குமான இடைவெளி தொடங்கிவிடுகிறது. தாய்க்கும் மகனுக்குமான இணக்கமும் புரிதலும் வேறு வகையிலானது. அது ஆயுள் பரியந்தமும் நீடித்திருக்கும் . ஆனால், மகன் வளரவளரத் தந்தை பின்வாங்க வேண்டியிருக்கிறது. இருவருக்கும் இடையிலான அந்தக் கபடமான இடைவெளியே மரியாதை எனப்படுகிறது. அந்த இடைவெளி எதேனும் ஒரு காரணம் பற்றிக் குறைவுறும்போது தந்தைக்கும் மகனுக்குமான முரணும் வளரத் தொடங்கிவிடுகிறது.

கல்லூரியில் படிக்கும்போது என் அறைத்தோழனாக இருந்தவன் கிரி. என்னைக்காட்டிலும் ஒரு வருடம் இளையவன், நயத்தக நாகரீகத் தோற்றமும் அதற்குச் சற்றும் சம்பந்தமில்லாத முரட்டுக்குணமும் கொண்டவன் . சகநண்பர்கள் பலரும் அவனுடன் பழகவிரும்பிய அளவிற்கு அவனைக்கண்டு அஞ்சவும் செய்தனர். சிறிய விஷயங்களுக்காகக் கூட சச்சரவில் இறங்கிவிடுவது அவனது சுபாவமாக இருந்தது. துவக்கத்தில் என்னுடனும் பல உரசல்கள் இருந்தன என்றாலும், விரைவிலேயே நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். நான் இயல்பிலேயே அதிகம் பேசாதவன். ஆனால் அவனோ நேரெதிர் அவனைப் பற்றிய எந்த ரகசியமும் எனக்குத் தெரியாததல்ல . அத்தனை விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறான் அம்மா, அப்பா, சித்தப்பா, பெரியம்மா, அக்கா மாமா, தங்கையென ஆளுக்கொரு திசையில், திசைக்கொரு மனப்போக்கில் சிதறிக்கிடந்த குடும்பத்தில் பாட்டியிடம் வளர்ந்தவன் அவன் .

தன்தந்தையைக் குறித்து எள்ளளவும் அவனுக்கு மதிப்பில்லை. எப்போதும் ஏகவசனத்திலேயே குறிப்பிடுவான். அவன் அவ்வாறு முதலில் பேசக்கேட்ட போது திகைத்துப்போனேன் . நான் என்னுடைய வழக்கமான உபதேசத்தொனியில் தந்தை மீது இருக்கவேண்டிய மரியாதை குறித்து பிரசங்கிக்கத் துவங்கினேன், "மூடு பெருசா பேசவந்திட்ட ! சண்டைபோட்டு அம்மாவோட கன்னத்தில் அறைந்து படுக்கையில் தள்ளிவிட்டு வந்து, அடுப்பில் எரியும் நெருப்பை எடுத்து சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு, மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்கும் மகனிடம் பணத்தைக் கொடுத்துப் பாட்டில் வாங்கிகொண்டு வரச்சொல்லிக் குடித்த அப்பன் உனக்கு வாய்த்திருந்தால் நீயும் இப்படித்தான் பேசுவாய் “ சினத்துடன் கூறினான். இத்தனைக்கும். அவன் தந்தையும், தாயும் காதல் , கலப்புமணம் செய்தவர்கள் என்று சொல்லியிருக்கிறான். அதற்குப் பிறகான வருடங்களில் தந்தையை உள்ளூர வெறுக்கவும் எதிர்க்கவும் செய்த தனயர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன் தந்தைக்கும் மகனுக்குமான உறவின் முரண் என்பது பாலியல் தன்மையிலான சிக்கலை அடிப்படையாகக் கொண்டது என்றெல்லாம் பிறகு படித்து தெரிந்து கொண்டேன்

சமீபத்தில் என் மூத்தநண்பரும் தமிழ்அறிஞருமான ஆர் . கேயுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது குரு சிஷ்ய பாவம் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்னது எனக்கு மிகவும் வெளிச்சத்தைத் தருவதாக இருந்தது. குரு -சிஷ்ய உறவு என்பதும் ஒருவகையில் தந்தை மகன் உறவு போன்றதுதான் . குருவின்மீது துவக்கத்தில் எந்த அளவுக்கு சிஷ்யனுக்கு பக்தியும், மதிப்பும் இருக்கிறதோ அதே அளவிற்குப் பின்னாளில் பகையும், வெறுப்பும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் . ஏதோ ஒரு கட்டத்தில் தன்சிஷ்யனுக்கு இனிமேல் தான் தேவையில்லை என உணர நேரிடும் குருவிற்கு வரும் குரோதத்தை அவரால் வெகுகாலத்திற்கு கட்டி வைத்திருக்க முடியாது. குருவை, தந்தையை அவர்களுடைய ஆளுமையை, அதிகாரத்தை அழித்தால் அல்லது தாண்டினால் மட்டுமே தனக்கு வாழ்க்கை என அறியவரும் சீடனும் மகனும் மூர்க்கமாக எதிர்கொண்டு தாக்கத்தொடங்குகிறார்கள். இந்த அழிவு அல்லது மீறல் என்பது சிலபோது யதார்த்த தளத்திலும், பலபோது குறியீட்டுத் தளத்திலும் நிகழ்ந்தேறும். தந்தையைக் கொலை செய்துவிட்டு, சிறையிலடைத்துவிட்டு அரசு கட்டிலேறிய மகன்களைச் சரித்திரத்தின் பக்கங்களில் நாம் சாதாரணமாகக் காணமுடியும். மாறாக தந்தையைவிட அதிக வெற்றிகளைப் பெறவேண்டும். பெரிய கோவில்களைக் கட்டவேண்டும். அகலமான ஏரிகளை வெட்ட வேண்டும் என்று இன்னொரு வகையில் தந்தையரை விஞ்சத் தவித்த தனயர்களையும் பார்க்கலாம். உண்மை தான் மகன் பிறந்து தோளுயரம் வளர்ந்து என் முன்நின்று கேள்வி கேட்கத் துவங்கும்போதுதான் எனது தந்தையை நான் உண்மையாகவே புரிந்துகொள்ளத் துவங்குகிறேன் இந்த தேசத்திற்கே தந்தையாக விளங்கிய காந்தி, தன் சொந்தமகன் ஹரிலாலிடம் அப்பாத்திரத்தை வகிக்க இயலாமல் தோற்றுப்போனார். தந்தையைப் பற்றிய காப்காவின் எதிர்ப்புணர்வுதான் அவருடைய எழுத்துக்களுக்கே அடிப்படை என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.


முன்பு முன்னேற்றப் பதிப்பகம் கெட்டி அட்டைப்பதிப்பாக வெளியிட்ட இவான் துர்கனேவின் 'மூன்று காதல் கதைகள்' என்ற குறுநாவல் தொகுதி வெகுகாலம் வரையில் NCBHல் மலிவு விலையில் கிடைத்து வந்தது. இப்போது பிரதிகள் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை . அதில் 'முதல் காதல்' என்றொரு குறுநாவல், பதின்பருவத்தில் அப்போதுதான் நுழைத்திருக்கும் மகன், பக்கத்து வீட்டிற்குப் புதிதாகக் குடிவந்திருக்கும் இளம்சீமாட்டி மீது மையல் கொள்கிறான். அவள் இச்சிறுவனைவிடவும் சிலஆண்டுகள் மூத்தவள், இவனோடு வாஞ்சையுடனும், விளையாட்டுத்தனத்துடனும் பழகுகிறாள். ஒருநாள் தொப்பி அணிந்து, முரட்டுத்தோல் காலுறைகளுடன், சேணம் பூட்டிய குதிரைமீது, முள்பதித்த சாட்டையை வீசியபடி விரைந்து செல்லும் தந்தையைத் தொலைவிலிருந்து காண்கிறான். அக்குதிரையில் அவரை அணைத்தபடி களிகொண்ட சிரிப்புடன் போகிறவள் அந்த இளம் சீமாட்டிதான். இக்கதையை முதன்முறையாக எனது பதினேழாவதுவயதில் நான் படித்தபோது , அடைந்த உணர்வு உயர்அழுத்தம் கொண்ட மின்கம்பி ஒன்றினை தொட்டது போலிருந்தது.

குடும்பஅமைப்பில் உள்ளார்ந்து உருவாகிவரும் வன்முறைக்கு அதிகமும் ஆளாகிவருவது குழந்தைகள்தாம் . தம்மை நாகரீகமடைந்துவிட்ட சமுதாயமாக கூறிக்கொள்ளும் ஐரோப்பிய, அமெரிக்க சமூகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல . கட்டுப்பாடு, ஒழுங்குவிதிகள் என்கிற பெயரால் பல தந்தையர்கள் தம்பிள்ளைகளின் பால்யத்தின்மீது கண்மூடித்தனமான வன்முறையை செலுத்துபவர்களாகவே இருக்கிறார்கள் . யூமா வாசுகியின் ‘ரத்தஉறவு’ நாவல் இத்தகையதொரு குரூரமான கொடுமையின் ஆவணப்பதிவு போல விளங்குகிறது. இதனுடைய பலபக்கங்களை நடுங்கும் மனதோடுதான் நாம் கடந்துபோக முடியும். 'தாய்' என்ற தொல்படிமம் மொழியும் இலக்கியமும் தோன்றும் முன்பே மனித ஆழ்மனதில் பதிந்து போனது. உலகின் எல்லா மொழிகளில பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் அவளைக் குறித்து எழுதிக் குவிக்கப்பட்டுள்ளது. அவற்றுடன் ஒப்பிடுகையில் தந்தையைப் பற்றி எழுதப்பட்டவை மிகச் சொற்பமும் விதிவிலக்கானவைகளுமே ஆகும். குறிப்பாக நவீனத்துவ இலக்கிய படைப்புகளில்தான் தந்தைக்கும் மகனுக்குமான முரண் குறித்து அதிக பதிவுகள் காணக்கிடைக்கின்றன.

சுந்தரராமசாமியின் படைப்புகளிலும் மகனின் மீது கட்டுப்பாடும் அதிகாரமும் செலுத்துகிற தந்தை வருகிறார். அந்த அதிகாரத்தைக் குறித்து மகனிடம் கேள்விகள் எழும்போதும்கூட அது எவ்விடத்திலும் தந்தையின் மீதான வெறுப்பாக மாறுவதில்லை. எனக்குத் தெரிந்த வரையில் முழுக்கமுழுக்க தந்தையைப் பற்றிய சித்திரங்கள் மட்டுமே அடங்கிய நூல் என்று சுதேசமித்திரன் எழுதிய ‘அப்பா' கவிதைத்தொகுப்பை கூறலாம் .ஆனால் , அது பெரிதும் நேர்மறையான சித்திரிப்புகள் கொண்டது. பா.சத்தியமோகனின் சில கவிதைகளிலும் இத்தகைய ஆளுமைகொண்ட தந்தை தென்படுகிறார். என்றாலும், தமிழ் நவீன கவிதையில் தந்தை மகன் உறவை முன்னிறுத்திக் கூர்மையாக எழுதப்பட்ட ஒருகவிதை சுகுமாரனின் ‘கோடைகாலக் குறிப்புகளில்’ வருகிறது.அப்பா

உன்னுடைய மனித முகம் கழன்று
கழுதைப் புலியாகி நெடுநாட்களாயிற்று
எனக்கு மூலம் நீ தான்
எனினும்
பறவைகள் ஒருபோதும் முட்டைக்குத் திரும்புவதில்லை

என் சிறகுகளை அறுக்க வாள் ஒங்கியவன் நீ
நான் வாள் முனையில் கால் உதைத்துப் பறக்கத் தொடங்கியவன்

என் சங்கீதத்தின் ஊற்றை அடைத்தவன் நீ
எனினும்
ரத்த துடிப்புகளுக்கு இடையில் அது எதிரொலிக்கிறது
உன் போதையும் புறக்கணிப்பும் பொறுப்பின்மையும்
நிராதரவாய் உன்னைக் கொல்லலாம் ஒரு நாள்
நான் வெறும் வழிப்போக்கனாய்ப் போகலாம்
எனக்கு உன்னிடம் பகையில்லை
அன்பைப் போலவே

இக்கவிதையின் முதல் வரியைப் படித்ததும் முகத்தில் அறைவாங்கியது போலத் திகைத்து நின்றேன். காரணம், இன்றளவும் தந்தையின் மீதான எனது மதிப்பு பக்திபூர்வமானது. தன்னை வைத்தே உலகை அளக்கும் அங்குலப்புழுவைப் போல இருந்த என்னைக் கண்திறக்கச் செய்வித்தவை இதுபோன்ற இலக்கிய ஆக்கங்களே வெறுப்பைக்கூட ஒரு எதிர்வினை என்ற அளவில் நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இக்கவிதையின் இறுதியில் வரும் அன்பைப் போலவே வெறுப்பும் இல்லை உன்னிடம் எனக்கு என்னும் போது கூடும் பற்றற்ற தன்மையின் உக்கிரம் தணிக்கமுடியாதது.

முதலில் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் சித்திரிப்பதுபோலப் பெறற்கரிய செல்வமாக, ஒருவனின் வாழ்வை அர்த்தப்படுத்தும் அரும்பொருளாகப் பிறக்கும் ஒரு குழந்தை எந்த வயதிற்குப்பிறகு, சுகுமாரனின் இக்கவிதையில் குறிப்பிடப்படுவது போலத் தந்தையின் விரோதத்திற்குரியவனாகிறான் ?அன்பு எப்புள்ளியிலிருந்து அதிகாரமாக மாறுகிறது? பயம் எக்கணத்திலிருந்து வெறுப்பாக வளர்கிறது ? இக்கேள்விகளுக்கெல்லாம் அறுதியான பதில்கள் என்று எதுவும் கிடையாது எனினும், படைப்பின் வெளிச்சத்தைக் கொண்டு வாழ்வை அணுகுவோம் எனில், பல சமயங்களில் நாம் காண்பிக்க நேரிடும் இந்த அதிகாரத்தினுடைய, வெறுப்பினுடைய கூர்மையை ஓரளவேனும் முனை மழுங்கச் செய்யலாம்.

Monday 5 October 2020

ஈராயிரத்திற்குப் பிறகான கவிதைகள் - ஒரு பார்வை

கரை மீது நின்று காணும்போது கடல் அதன் மேற்புற அலைகளோடு மாற்றமேதுமின்றி ஒரே மாதிரியாகவே தோற்றமளித்திடும் போதிலும் , அதனுள் நாம் அறிந்திடாத விதத்தில் சில உள்நீரோட்டங்கள் மறைவாக வந்து கலக்கும் . அந் நீரோட்டங்கள் அக்கடல் பகுதியின் உப்புத்தன்மையை , தட்பவெப்பத்தை , உயிர்ப் பெருக்கத்தை பாதிப்பதாக அமையும். அவ்வாறே ஒரு மொழியில் , ஒரு காலகட்டத்தில் எழுதப்படும் கவிதைகளிலும் மேலெழுந்தவாரியாக நோக்குகையில் அவற்றின் புறவடிவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பெரிய அளவிலான வேறுபாடுகள் எதையும் நாம் காணவியலாது . என்றாலும் , அவற்றின் வரியொழுங்குகளுக்கு அப்பால் அக்கவிதைகளின் நோக்கு நிலைகளிலும் அர்த்த உருவாக்கத்திலும் மொழிதல் முறையிலும் சில பத்தாண்டுகளுக்கு ஒருமுறை , நுட்பமான மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதை காணலாம் . கூர்ந்த வாசிப்புடைய எவருமே இம்மாறுதல்களை அவதானிக்க முடியும். ஒரு காலகட்டத்தினுடைய கவிதை சூழலை நெருங்கிக் காணவும்  , ஆழமாக புரிந்துகொள்ளவும் , ஆராய்ந்து மதிப்பிடவும் இத்தகைய அவதானிப்புகள் உதவும் .


அவ்வகையில் ஈராயிரத்திற்குப் பிறகான வருடங்களில் தமிழ்க் கவிதையானது ,அதன் நோக்கிலும் போக்குகளிலும் எத்தகைய மாறுதல்களை அடைந்துள்ளது என்பதை குறுக்கு வெட்டாக , ஒரு பருந்துப் பார்வையில் பார்க்கும் முயற்சியாகவே இக்கட்டுரை அமைகிறது .


 'புது அல்லது நவீன கவிதை ' என்கிற பதத்தில் முன்னொட்டாக வரும் 'புதுமை'அல்லது 'நவீனம்' என்பது 'modern' என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதே . அதை 'Fashion' எனப்படும் காலத்தை ஒட்டிய நாகரீக மோஸ்தர் என்பதைப்போல மேலோட்டமாக புரிந்து கொள்வதைக் காட்டிலும் அபத்தம் வேறில்லை ;  அப்படி எண்ணுபவர்கள் கவிதையை வெறும் ஏட்டளவிலான செயல்பாடாகவும் , சொற்களை வரிகளை மாற்றிப் போட்டு ஆடும் மொழி விளையாட்டாகவும் மாத்திரமே கருதி மேலோட்டமாக எழுதவும் பேசவும் செய்கின்றனர் .

மாறாக , ஒரு சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் நடுவில் இருக்கும் இடைவெளி குறித்த புரிதலோடு அர்த்த உருவாக்கம் மற்றும் தொடர்புறுத்தும் முறைகளில் காலத்தையொட்டி ஒரு மொழியினூடாக ஏற்படும் மாறுதல்களை வரவேற்கும் தன்மையே நவீனம் அல்லது புதுமை எனப்படும் .


   பொதுவாக இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விதந்து ஓதப்படும் அழகியல் மற்றும் வடிவ நுட்பங்கள் முதலியவை , செறிவும் செழுமையும் அடைந்து ஒருவகை இலக்கணமாக மாறிவிடும் போது , இயல்பாகவே அதனை மீறவும் விட்டு விலகவுமான ஒரு போக்கு உருவாகி , புதிய திசையில் நகரத் தொடங்கும். பிறகு , அதுவும் பூரித நிலையை அடையும்போது ,பிரிதொரு கிளைப்பாதை அதனின்றும் பிரிந்தேகும் . இதுவே பொதுவான இயக்கவியல் நியதி .என்பது, தொன்னூறுகளில் எழுதப்பட்ட கவிதைகளில் அதிகமும் காணக் கிடைப்பது இறுக்கமான படிமங்கள் , குறியீடுகள் மற்றும் உருவகங்கள் விரவி வரும் குறுகத் தறித்த வரிகள், கட்டுப்படுத்தப்பட்ட உணர்வுத் தெறிப்புகள் ,தத்துவார்த்தமானதொரு வாழ்வியல் நோக்கு முதலிய அம்சங்கள்தாம். இவை பெரிதும் நவீனத்துவம் முன்வைத்த அழகியல் நியதிகள். இவை பொது விதிகள் ஆகிவிட்ட இரண்டாயிரத்திற்குப் பிறகு எழுத வந்தவர்கள் இவற்றிற்கு நேரெதிராக , அணி அழகுகளை உதறிவிட்ட கிட்டத்தட்ட உரைநடைக்கு ஒப்பான ஒரு மொழியில் , உணர்ச்சிகளை சமநிலைப்படுத்த முயலாமல் கட்டற்று விரித்து எழுதுவதன் மூலம் , நுண்தருணங்களை அகப்படுத்துவதன் வாயிலாக தமது கவித்துவத்தை உருவாக்க முனைகிறார்கள் எனப் பொதுவாகக் கூறலாம். இந்த வரையறையும் கூட கறாரானதொரு காலப் பிரிவினை அல்ல. தனிப்பட்ட கவிஞர்களைப் பொறுத்து நெகிழ்ந்தும் முன்பின்னாக வளைந்தும் போகக்கூடிய தோராயமானதொரு கருதுகோளே ஆகும் .

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் , தமிழ் சிறுபத்திரிகைகளில் பல்வேறு இலக்கியக் கோட்பாட்டு அறிமுகங்களும் அவை பற்றிய விவாதங்களும் பெரும் வீச்சாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. இருத்தலியல் , அமைப்பியல் , பின்அமைப்பியல் , பின் நவீனத்துவம் போன்ற  கோட்பாடுகளோடு , உளவியல் மானுடவியல் ,மொழியியல் போன்ற பிற துறை சார்ந்த விளக்கங்களைக் கொண்டு நவீன இலக்கியப் பிரதிகளை அலசவும் ஆராயவும் அளவிடவும் பலரும் முனைந்தனர் . குறிப்பாக கல்விப்புலம் சார்ந்த பேராசிரியர்கள் பலரும்

இதில் மிகுந்த ஆர்வம் காட்டினர் .


பொழிகின்ற பெருமழையில் வழிந்தோடியது போக மண்ணில் வடிந்து இறங்கி தன் தனிச் சுவையோடு ஊற்றாகிக் கசியும் நீர் போல மேற்சொன்ன விவாதங்கள் எல்லாமும் ஏதோ வகையிலும் , அளவிலும் பிறகான படைப்புகளை பாதிக்கவே செய்தன .


மூத்த கவிஞர்களான தேவதேவன் ,விக்ரமாதித்யன் ,கலாப்பிரியா ஆனந்த் , பிரம்மராஜன் , சமய வேல் , சுகுமாரன் இவர்களைத் தொடர்ந்து அடுத்த தலைமுறையில் பிரேம் ரமேஷ் ,யவனிகா ஸ்ரீராம் ,மனுஷ்யபுத்திரன், லட்சுமி மணிவண்ணன் , கரிகாலன் பெருமாள் முருகன் , ரவிசுப்பிரமணியன் , சங்கர ராமசுப்ரமணியன், பாலை நிலவன் மகுடேஸ்வரன் என பலரும் இரண்டாயிரத்திற்குப் பின்னரும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். தவிரவும் பதிப்புத்துறையில் நிகழ்ந்திருக்கும் தொழில்நுட்ப மாற்றம் மற்றும் நூல் விற்பனையில் கண்டிருக்கும் வளர்ச்சி காரணமாக , பல முன்னோடிக் கவிஞர்களின்  மொத்த கவிதைகளும் ஒரே தொகையாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ஒரு கவிஞனின் மொத்தக் தொகுப்புகளையும் ஒருசேரக் காண்பதோ , வாசிப்பதோ இருபதுஆண்டுகளுக்கு முன்பு அவ்வளவு எளிதான காரியமன்று. அவ்வகையில்  பிரமிள், சுரா, அபி ஆத்மாநாம் ,ஞானக்கூத்தன் கல்யாண்ஜி ,சுகுமாரன் ஆகியோரின் பெருந்தொகை அவர்களுடைய பெயரையே தலைப்பாகக் கொண்டு வெளியாகியுள்ளன. இவை போக எஸ் வைதீஸ்வரனின் 'மனக் குருவி'  தேவதச்சனின் 'மர்மநபர் ' ராஜ சுந்தரராஜனின் 'தாய்வீடு 'மு. சுயம்புலிங்கத்தின் ' 'நிறமழிந்த வண்ணத்துப் பூச்சிகள் ' யூமா வாசுகியின் 'கசங்கல் பிரதி' எம் யுவனின் 'தீராப் பகல்' பிரதீபனின் 'கண் மறைத் துணி' முதலியனவும் வெளியாகியுள்ளன. இதுதவிர தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'கொங்குதேர் வாழ்க்கை' எனும் நூற்றுக்கும் அதிகமான கவிஞர்களின் தெரிவு செய்யப்பட்ட கவிதைகள் அடங்கிய தொகை நூல் ,  நவீன கவிதையின் இதுகாறுமான வளர்ச்சிப் போக்கின் ஒரு வரைபட மாதிரியை காட்டுவதாக அமைந்திருக்கிறது .

தொடந்து எழுதும் கவிஞர்களின் இத்தகைய பெருந்தொகை நூல்களை வாசிப்பதன் வாயிலாக ,ஒரு கவிஞரின் அகஉலகமும் அதனோடு கூடி அவருடைய ஆளுமையும் எவ்விதமாக உருப்பெற்று வந்திருக்கிறது என்பதை அறிய முடிவதோடு மட்டுமல்லாமல் , புறத்தே அவருடைய வெளியீட்டு மொழியானது ,  காலத்தை ஒட்டி எவ்விதமான வளர்சிதை மாற்றங்களை அடைந்திருக்கிறது என்பதையும் , நாம் அனுமானிக்க முடியும் .


 மனிதர்களின் மனம் என உருவகிக்கப்படும் அருவமான ஒரு பரப்பை களமாகவும் , அதில் நிழலாடும் உணர்வுகளையும் எண்ணங்களையும் கைமுதலாகவும் கொண்டு சொற்களில் இயங்கும் வடிவமே கவிதை . பட்டறிவையும் அதன் புற தர்க்கங்களையும் அது இரண்டாம் பட்சமாகவே கருதுகிறது என்றாலும் , உலகத்தை விளித்து ஒட்டுமொத்த வாழ்வையும் முன்வைத்து ஒரு வரியை எழுதும்போது உருவாகிவரும் பார்வைக் கோணமானது ,தவிர்க்கவே முடியாதபடி தத்துவத்தின் சாயலைப் பெற்றுவிடுகிறது. தமிழின் நவீன கவிதை இன்றளவும் உதறி விட முடியாத அல்லது முயலாத ஒரு அம்சம் என்று அதனுடைய இந்த தத்துவார்த்த நோக்கை குறிப்பிடலாம். பாரதி, பிச்சமூர்த்தி என்று அதன் ஊற்றுமூலத்திலேயே 

தொடங்கி விடுகிற இந்தச் சாய்வு பிறகு சி.மணி, நகுலன், பசுவய்யா , அபி , தேவதச்சன், ஆனந்த், ந. ஜெயபாஸ்கரன்  எனத் தொடர்ந்து இடையறாததொரு தைலதாரையாக இன்றளவும் நம் கவிதை போக்கோடு ஒழுகி வருகிறது .இது நம் மொழியின் செவ்வியல் மரபோடும் கலாச்சார தொன்மங்களின் நினைவுகளோடும் நம்மைப் 

பிணைக்கிறது . அவ்விதமாக தமக்கேயுரிய தனிப் பார்வையோடுகூடிய வாழ்வனுபவங்களை தம் கவிதையில் தரிசனப் படுத்த முயல்பவர்கள் என  இத்தலைமுறையில் எழுதும் ஷாஅ, எஸ். சண்முகம் ,தேவேந்திரபூபதி ,இளங்கோ கிருஷ்ணன், நேசமித்திரன் , ஆத்மார்த்தி, அமலன் ஸ்டான்லி , தபசி ,போகன் சங்கர், சாகிப் கிரான், குணா கந்தசாமி , எஸ். ஜே. சிவசங்கர், கார்த்திக் நேத்தா,ராஜன் ஆத்தியப்பன் , கே. சி. செந்தில் குமார் , சபரிநாதன் ,அகச்சேரன் , வே. நி.சூர்யா முதலியோரைக் குறிப்பிடலாம் .


தனிமனிதனின் விசனங்களுக்கும் சமூக மனிதனின் விமர்சனங்களுக்கும் நடுவிலான பிளவைக் கடந்து அவை ஒன்றையொன்று சந்திக்கவும் பாதிக்கவும் செய்கின்ற புள்ளியிலிருந்து எழுதப்படுவன இன்றைய சமூக அரசியல்கவிதைகள் அவை நமது சமகால வாழ்வின் அபத்தங்களையும் அர்த்தமின்மையையும் சுட்டுவது போல் அல்லாமல் தனது கூர்மையான அங்கதத்தால் அவற்றின் அறமின்மையையும் அடிக்கோடிட்டு காட்டுவதாகவும் அமைகின்றன . நமது மரபிலக்கியத்தில்  உள்ள சித்தர் பாடல்களிலும் தனிப்பாடல்களிலும் வெளிப்பட்ட அந்த பரிகாசத்தின் தொடர்ச்சியை இன்றைய கவிதைகளிலும் காணலாம் . வரிகளை மீறி மெல்லிய நகைப்பாக மெலெழும் அது , அமைப்பிற்கு எதிரான விமர்சனமாகவும் அதே சமயத்தில் அதிகாரமற்ற தனது தன்னிலை குறித்த சுய எள்ளலாகவும் வெளிப்படுவதைக் காணலாம். தோராயமாக இவ்விதமான வகைமைக்குள் அடங்கும் விதமான கவிதைகளை எழுதுபவர்கள் என என். டி. ராஜ்குமார் ,அழகிய பெரியவன் , கண்டராதித்தன் ,   இசை, லிபி ஆரண்யா, செல்மா பிரியதர்ஷன் , சாம்ராஜ் ,   பூவிதழ் உமேஷ் , ஸ்டாலின் சரவணன் ,பெரு. விஷ்ணுகுமார், றாம் சந்தோஷ் , பா. ராஜா, தங்க பாலு போன்றோரைக் குறிப்பிடலாம்


நாம் வாழும் நிலத்திற்கும் அதன் சூழல் அமைவிற்கும் அதில் நிலவும் தட்பவெட்ப நிலைகளுக்கும் , நமது உடலுக்கும் அதில் உறையும் நம் மனதிற்கும் ,

நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தொடர்புகள் உண்டு .இயற்கைக்கும் மனிதனுக்கும் நடுவிலான இந்த தொப்புள் கொடி உறவை நம் தன்முனைப்பினாலும் பேராசையினாலும் , அதிக முடிச்சுகளும் சிடுக்குகளும் கொண்ட ஒன்றாக , நாம் மாற்றிக் கொண்டுவிட்டோம் . திரிந்தலையும் திணைகளால் ,நம்மில் பலரும் நிலம் பெயர்ந்து அலையும் ஏதிலிகள் ஆக்கப்பட்டு விட்டோம் .நம்மின் இருப்பும் அடையாளமும் நினைவுகளும் வேரிழந்துபோகத் தொடங்கிவிட்டன. இது தரும் பதற்றமும் வலியும் இன்று எழுதும் பலரின் கவிதைகளில் ஆற்றாமையென ஒலிக்கிறது . தம் கவிதைகளில் அத்தகைய உணர்வுகளுக்கு முகம்தரும் விதமாக

எழுதுபவர்கள் என்று கரிகாலன், வெய்யில், மெளனன் யாத்ரீகா, கண்மணி குணசேகரன், கலிய மூர்த்தி , கதிர்பாரதி,  நா. பெரியசாமி , இயற்கை , கடங்கநேரியான், கண்ணகன், ஜி. எஸ். தயாளன், மண்குதிரை ,தாணுபிச்சையா , முருக தீட்சண்யா , சா . துரை, சூ. சிவராமன்,  முத்துராசா குமார் என பலரைக் குறிப்பிடலாம் 


மேலெழுந்தவாரியான ஒரு நோக்கிலேயேகூட ,  நாம் அவதானிக்க முடிகின்ற இன்றைய கவிதையின் பொதுவான போக்கு என்று ஒன்றை சொல்வதென்றால் , உரைநடையை நெருங்கிவரும் அதன் மொழியைச் சொல்லலாம் .இது ஒன்றும் இற்றைப் புதுமையுமல்ல ; உறையிட்ட செய்யுள் என்று சிலப்பதிகாரத்தில் ஒரு மொழிதலாகவும் அது சுட்டப்பெறுகிறது. புதுக்கவிதையின் வளர்ச்சிப் போக்கிலும்  நேர்கவிதை , எதிர் கவிதை என்ற வடிவங்களில் இத்தன்மை பேசப்பட்டிருக்கிறது. க. நா. சு , விக்ரமாதித்யன், சமயவேல் ராஜ மார்த்தாண்டன் , பழமலை , இந்திரன்  எனப் பலரும் தமக்கே உரிய விதத்தில் கையாண்ட இம்முறையை ஒரு இயக்கமாக முன்னெடுத்தவர் என மனுஷ்யபுத்திரனை கூறலாம். தொடர்ந்து பெருந்தேவி 

இதையே எதிர்கவிதையின் வகைபாட்டிற்குள்  பலவிதமாக முயன்றிருக்கிறார் . இவர்களைத் தவிர  சங்கர ராமசுப்பிரமணியன் , குவளைக் கண்ணன் ,ஸ்ரீநேசன் , ராணி திலக், ஸ்ரீ சங்கர், நரன்,  முகுந்த் நாகராஜன் , வே. பாபு, அய்யப்ப மாதவன் , சிபிச் செல்வன், குமாரநந்தன் , ரவி உதயன் ,கார்த்திக் திலகன்  எனப் பலரையும் இன்று இவ்வடிவில் எழுதுபவர்கள் என்று குறிப்பிடலாம். 


தொன்னூறுகளின் முற்பகுதியில் அழுத்தமான குரலுடன் துலக்கமாக எழுந்து வந்த பெண்ணிய ,தலித்திய , விளிம்புநிலை கருத்துநிலைகளின் அழுத்தமான அடையாளங்களுடன் தொடர்ச்சியாக இன்றும் பலர் எழுதுகிறார்கள். ஆனால் ,

அவ்வடையாளங்கள் தனித்து இயங்காமல் கரைந்ததொரு நிலையிலேயே , பொது சமூகத்தோடு விவாதிக்கவும் உரையாடவும் முனைவதாக அவை காணப்படுகின்றன. அவ்வகையில் சுகந்தி சுப்பிரமணியன், குட்டிரேவதி , மாலதிமைத்ரி , சுகிர்தராணி , சல்மா, லீனா மணிமேகலை , அ. வெண்ணிலா, உமாமகேஸ்வரி, இளம் பிறை ,

சக்திஜோதி, என்கிற வரிசையில் பெருந்தேவி, தி.பரமேஸ்வரி , அழகு நிலா 

சே. பிருந்தா , உமா மோகன் கனிமொழி ஜி ,தேன்மொழி தாஸ் , கு.உமா தேவி , எழிலரசி , லாவண்யா சுந்தரராஜன் தென்றல் , சசிகலா பாபு, லதா அருணாச்சலம் , நறுமுகை தேவி,  கயல் ,ஸ்வாதி முகில், பொன்முகலி எனப் புதிதாக பலரும்  எழுதி வருகின்றனர் . அன்று மொழியில் தமது இடத்தை பெறுவதற்காக உரத்து ஒலித்த குரல்கள் , இன்று சற்று தணிந்தும் அதே சமயத்தில் தனது தனித்துவத்தை மேலும்  வலியுறுத்தும் வகையிலுமாக இன்றைய கவிதைகளில் வெளிப்படுகின்றன எனலாம்.


தமிழ் கவிதையின் நில எல்லைகளை மாத்திரமல்லாமல் , அதன் நிகழ் அனுபவங்களின் சாத்தியங்களையும் விரிவடையச் செய்ததில் , ஈழக் கவிதைகளுக்கு முதன்மையான பங்கு உண்டு. இன ஒடுக்குதலும் உள்நாட்டு யுத்தமும் புலம்பெயர்வுமாகக் கழிந்த பல வருடங்களின் அலைகழிப்பிற்குப் பிறகு , இழப்புகளின் துயரமும் , எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையும் ,நிம்மதியான வாழ்வு குறித்த எதிர்பார்ப்புமாக நீளும் இன்றைய சூழ்நிலை வரையிலுமான வரலாற்று தருணங்களின் உணர்வுபூர்வமான ஆவணப் பதிவுகளாக , அவர்களின் கவிதைகள் விளங்குகின்றன . புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் இன்று உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் எழுதப்படும் கவிதைகள் 'யாதும் ஊரே!' என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிக்கு மேலதிகமான அர்த்தத்தையும் ஒரு உலகளாவிய நோக்கினையும் அளிக்கின்றன. அவ்வகையில் மஹாகவி , நீலாவணன் , மு.பொ. அ. யேசு ராசா, சு. வில்வரத்தினம் , வ.ஐ. ச.ஜெயபாலன் ,சேரன், பா. அகிலன்,  திருமாவளவன், கி.பி அரவிந்தன் , செல்வி ,சிவரமணி எஸ். போஸ் , கருணாகரன் சோலைக்கிளி முதலியோரின் தொடர்ச்சியாக இத்தலைமுறையில் எழுதுபவர்கள் என பஹீமாஜஹான் ,அனார், தமிழ்நதி அலறி, ரஷ்மி, ரியாஸ் குரானா ,தீபச்செல்வன், கிரிசாந் , நெற்கொழுதாசன், ஊர்வசி,  பிரதீபா , அகமது ஃபைசல் , நிலாந்தன் ,சர்மிளா சய்யீத் , ரிஷான்செரிப் எனப் பலரையும் சுட்டலாம் .


வரலாற்றுக் காலம் தொட்டு வணிகத் தொடர்பு இருந்து வந்தபோதிலும் சமீப காலமாக பரவலாகியிருக்கும் இணையத் தொடர்பு வசதி வழியாகவே சிங்கப்பூர், மலேசிய கவிதைகள் குறித்த கூடுதல் அறிமுகம் நமக்கு கிடைத்திருக்கிறது . இங்கே தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்படும் சில எழுத்தாளர்களின் படைப்புகளுக்கப்பால்  , அங்கே உள்நாட்டிலேயே பதிப்பு காணும் பலரின் எழுத்துக்களைப் பற்றிய அறிமுகம் நமக்கு அரிதாகவே கிடைக்கிறது . தவிரவும் புலம்பெயர்ந்து அங்கு வசிப்பவர்களது எழுத்துக்களுக்கும் ,  பாரம்பரியமாக அங்கேயே வசிப்பவர்களின் ஆக்கங்களுக்கும் நடுவே ஒரு இடைவெளி இருப்பதாகவும் தெரிகிறது . மட்டுமல்லாமல் , நம்முடைய சமகால போக்கோடு ஒப்பிடுகையில் அவை வேறுபட்ட கால வளர்ச்சியை கொண்டிருப்பதாகவும்  சொல்லப்படுகிறது . கவிதையைப் பொறுத்த வரையிலும் சிங்கப்பூரில் இந்திரஜித் , லதா, மாதங்கி தேன்மொழி சதாசிவம், சுபா செந்தில்குமார் , சித்துராஜ் பொன்ராஜ் முதலியோரும் , மலேசியாவில் கோ .புண்ணியவான் , சை.பீர்முகமது ,கே .பாலமுருகன் மா .நவீன் முதலியோரும் முதன்மையாக சுட்டப்படுகின்றனர் 


ஒரு காலத்தில் ஒரு மொழியில் நேரடியாக எழுதப்படும் படைப்புகளுக்கும் அதற்கு சற்று முந்தைய காலகட்டத்தில் அம்மொழியில் மொழிபெயர்க்கப்படும் ஆக்கங்களுக்கும் உள்ளார்ந்ததொரு தொடர்பு இருக்கும். ஒரு மொழியில் நிகழும் புதிய எத்தனிப்புகளுக்கு , பல சமயங்களிலும் தூண்டுதலாக அமைபவை அயல்மொழி படைப்புகளே. தவிரவும் நம் மொழியில் நாம் அடைந்திருக்கும் உயரங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்  நமக்கு உதவுவன மொழியாக்கங்களே. அவ்வகையில் , கடந்த இருபது ஆண்டுகளில் தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு கவிதை நூல்கள் எனப் பார்த்தால் , சமகால உலகக் கவிதைகள், நெருடாவின் கேள்விகளின் புத்தகம்,மிராஸ்லோவ் ஹோலூப் கவிதைகள் (பிரம்மராஜன் ) கடைசி வானத்திற்கு அப்பால் ( வ.கீதா , எஸ். வி. ராஜதுரை ),

பாப்லோ நெருடா கவிதைகள் , கவிதையின் திசைகள் (சுகுமாரன்),  தொலைவிலிருக்கும் கவிதைகள் (சுரா) அன்னா அக்மதோவா கவிதைகள் (லதா ராமகிருஷ்ணன்) ' கண்ணாடியில் மிதக்கும் பிம்பம் எமிலி டிக்கின்சன் கவிதைகள் (இர.மிதிலா) அண்ணா ஸ்வீர் கவிதைகள் , குளோரியா ப்யூடர்ஸ் கவிதைகள் (சமயவேல் ) பெயரற்ற யாத்ரீகன் ஜென் கவிதைகள் (யுவன் சந்திரசேகர்)

உறைநிலைக்கும் கீழே தாமஸ் டிரான்ஸ்ட்ரோமர் கவிதைகள் (சபரிநாதன் )

தெரிதாவுக்குத் தெரியும் (ஆர். அபிலாஷ் ) மிதந்திடும் சுய பிரதிமைகள் சீனக் கவிதைகள் (ஜெயந்தி சங்கர் ) , வலசைப் பறவைகள், குரல் என்பது மொழியின் விடியல் (ரவிக்குமார்) சாத்தானுக்குப் பிரார்த்தனை விண்ணப்பங்கள் ( கால சுப்ரமணியம் ) நரகத்தில் ஒரு பருவகாலம் ( கார்த்திகைப் பாண்டியன் )

ஆலன் கின்ஸ்பெர்க் கவிதைகள் (பாலகுமார் விஜயராமன்) தாவோ தே ஜிங் ( சி. மணி)  உமர் கய்யாம் கவிதைகள் (தங்க. ஜெயராமன் ஆசை) நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் (ஜெயமோகன் ) தாகம் கொண்ட மீன் ரூமி கவிதைகள் ( சத்தியமூர்த்தி ) புன்னகைக்கும் பிரபஞ்சம் கபீர் கவிதைகள் (செங்கதிர்) காற்றின் குரல் (ஸ்ரீரங்கம் மோகனரங்கன் ) பிணத்தை எரித்தே வெளிச்சம் ( இந்திரன்), துயர் நடுவே வாழ்வு

( எம். கோபால கிருஷ்ணன்) , குவாண்டமோனோ கவிதைகள்  ( மண் குதிரை) , எண் ஏழுபோல் வளைபவர்கள் (அனுராதா ஆனந்த்) ஐயப்பன் கவிதைகள் , பவித்ரன் தீக்குன்னி கவிதைகள் (என். டி. ராஜ்குமார்)  முதலியவற்றைச் சொல்லலாம் .


      இன்று நூல்களும், வாசிப்பும் அச்சுப்பதிப்பிலிருந்து மெல்ல இணையத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன. வலைதளங்களும் , முகநூலும் சுயேச்சையாக எழுதுபவர்களுக்கு பெரும் வெளியை திறந்துவைத்திருக்கிறது. வடிகட்டலும் தணிக்கையுமின்றி , எதை வேண்டுமானாலும் எவ்விதமாகவும் எழுதிப் பார்க்கலாம் என்கிற அளவிறந்த சுதந்திரத்தை இது புதிதாக எழுதுபவர்களுக்கு அளித்திருக்கின்றது. இந்த சுதந்திரத்திற்குப் பின்னால் அதேயளவிற்குப் பொறுப்புணர்வும் இருக்கிறது என்பதை உணர்ந்து எழுதுபவர்கள் வெகுவிரைவிலேயே நம் கருத்தை ஈர்ப்பவர்களாகிவிடுகின்றனர். அவ்வகையில் முகநூலில் கவிதைகள் எழுதுபவர்கள் என பாலாகருப்பசாமி , ராயகிரி சங்கர், ராம் வசந்த், விஷ்வக் சேனன், நாகப் பிரகாஷ், மதிக்குமார் தாயுமானவன், அன்பில் பிரியன், நெகிழன் , நிசப்தன், ரோஸ்லின் , சுபத்திரா , ஷோபனாநாராயணன் போன்றோரைக் குறிப்பிடலாம். என் கவனத்திற்கு எட்டாத பலரும் இவ்வகையில் இருப்பர்.


              சிறுகதை நாவல் மற்றும் கட்டுரை நூல்களுக்கு கிடைக்கும் வரவேற்பு கவிதைத் தொகுப்புகளுக்கு கிடைப்பதில்லை.  எனவே பெரிய பதிப்பகங்கள் , புதிய கவிதை நூல்களை பெரும்பாலும் தவிர்க்கவே செய்கின்றன என்று ஒரு பேச்சு உண்டு . இதை குறித்து ஒரு பதிப்பாளரிடம் வினவியபோது அவர் விற்பனை கூட இரண்டாம்பட்சம்தான் ; தேங்கிக் கிடக்கும் நூல்களை அடுக்கி வைத்திருக்க இடம்தான் எங்களுக்கு பெரிய பிரச்சனை என்று பதிலிறுத்தார். மாறாக சிறிய பதிப்பகங்களான மணல்வீடு , புது எழுத்து , யாவரும் காம் , சால்ட் , தமிழ் வெளி போன்றவை புதியவர்களின் கவிதை நூல்களை தொடர்ந்து வெளியிடுகின்றன . இப்போது தேவைக்கேற்ப குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகளை அச்சடித்துக் கொள்ளும் வசதியும் , மின்னூலாக வெளியிடும் வாய்ப்பும் உள்ளமையால் பலரும் சுயமாகவே தங்கள் நூல்களை பதிப்பித்து கொள்ளும் போக்கும் காணப்படுகிறது. இக்கட்டுரைக்காக வேண்டி , எனது வாசிப்பு , நினைவு இவற்றை மட்டுமே முழுமையாக நம்பாமல் தேடிப் படிக்கும் பழக்கமுடைய என் நண்பர்கள் சிலரிடமும் தகவல்களை கேட்டுப் பெற்றேன். அவ்வகையில் நண்பர் ஒருவர் நீண்ட பட்டியலை அனுப்பியிருந்தார்.  அது ஒரு விருது வழங்கும் அமைப்பின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்ட , கடந்த இரண்டு வருடங்களில் வெளிவந்த கவிதை நூல்களின் பட்டியல் அதில் 54 நூல்களின் பெயர்கள் அடங்கியிருந்தன . விருதின் பரிசீலனைக்கு வராத நூல்கள் இன்னுமொரு 50 இருக்குமென யூகித்துக்கொள்வோமாயின் , இரு வருடங்களுக்குத் தோராயமாக 100 கவிதை நூல்கள் வெளியாகின்றன.  கடந்த இருபது வருடங்களில் உத்தேசமாக ஆயிரத்துக்கும் குறையாத தொகுப்புகள் வந்திருக்கக் கூடும். இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒருவர் எழுதுவது என்பது அசாத்தியமான காரியம் . மாறாக பரந்துபட்ட பார்வையுடைய மூன்றோ நான்கோ பேர்கள் , தனித்தனியாக எழுதும் கட்டுரைகளை தொகுத்து பார்ப்போமாயின் அப்போது ஓரளவிற்கு முழுமையானதொரு சித்திரம் நமக்கு கிடைக்கும்.