Tuesday, 1 January 2019

எல்லைகள் இல்லாத உலகம்


A great age of literature is perhaps always a greater age of translations
- Ezra Pound

தனிமனிதன் என்பவன் இம் மானுடகுலத்தின் சிற்றலகு என்கிற நோக்கில் உலகப்பொதுவானவன். அதே சமயம் சிந்திக்கத் தெரிந்த உயிரி என்கிற வகையில் ஆகத் தனிமையானவனும் கூட. மொழி, இனம், பிரதேசம் முதலியவற்றின் அடிப்படையிலான சமூகக்குழுக்களாக இயங்கும் மனிதர்களின் தனித்தன்மைகளைக் கொண்டு வந்து பொதுவான மானுடப்பண்புகளுள் சேர்க்கும் மேலான காரியத்தையே மொழிபெயர்ப்புகள் செய்கின்றன. ஓடிவந்து கலக்கும் நதிநீர் கடலின் உப்புத்தன்மையைக் கட்டுக்குள் வைப்பதைப் போலவே மொழிபெயர்ப்புகள் ஒரு மொழியின் தேக்கத்தை மட்டுப்படுத்துவதோடு அல்லாமல் அதன் படைப்புகளின் சுவையைக் கூட்டவும் உதவுகின்றன.

தமிழில் நவீன உரைநடை உருவாகி வந்த காலத்திலேயே மொழிபெயர்ப்புகளும் தோன்றி விட்டன. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமாயின், ஆங்கிலம் கற்கத்தொடங்கிய உயர், மத்தியத்தர வர்க்கத்தினர் அம்மொழி வாயிலாகத் தமக்கு அறிமுகமானது போன்ற இலக்கிய முயற்சிகளை தமிழிலும் செய்துபார்க்க விரும்பியதன் விளைவே நமது மொழியின் ஆரம்பகால உரைநடைப் படைப்புகள். ஆனால் மேலை இலக்கியங்களை உள்ளது உள்ளவாறே மொழிபெயர்ப்பதில் சந்திக்க நேரிட்ட கலாச்சார அதிர்ச்சிகளையும் முரண்பாடுகளையும் தீர்ப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட உபாயமே தழுவல் இலக்கியங்கள் உற்பத்தியாக வழிவகுத்தன. அந்நிய மொழியின் கதைக்கருவை எடுத்துக்கொண்டு, பாத்திரங்களின் பெயர், நடை, உடை பாவனைகளை நமது என நாம் நம்புகிற பண்பாட்டு வரையறைகளுக்குள்ளாக நின்று அவற்றைத் தமிழாக்கித் தந்தனர். கதவுகளே இல்லாத கட்டிடங்களுக்கு வெளிக்காற்றிற்கான சிறு சாளரங்களும் ஆரோக்கியமானதே.

அச்சிதழ்களும், நூல்களும் வெளிவரத் தொடங்கிய குறுகிய காலத்திற்குள்ளாகவே மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டதோடு அல்லாமல் அது தனியானதொரு இலக்கிய வகைமையாகவும் அங்கீகரிக்கப்பட்டது. ஜப்பானிய ஹைக்கூக்கள் பற்றிய அறிமுகத்தையும் தாகூரின் கதைகள் சிலவற்றையும் தமிழுக்குத் தந்ததன் வழியாக பாரதியே மொழிபெயர்ப்புக்கும் முன்னோடி ஆகிறார் என்றாலும் உலகச் சிறுகதைகளையும், ஐரோப்பிய நாவல்களையும் முறையே மொழிபெயர்த்த புதுமைப்பித்தனும் க.நா.சு.வுமே நவீன இலக்கிய மொழிபெயர்ப்புகளுக்குத் துவக்கப்புள்ளியாகிறார்கள். அதே காலகட்டத்தில் இன்னும் சில எழுத்தாளர்களும் மொழியாக்கத்தில் ஆர்வம் காட்டினர். ச.து.சு.யோகி (கடலும் கிழவனும்), திருலோக சீத்தாராம் (சித்தார்த்தா), டி.எஸ்.சொக்கலிங்கம் (போரும் அமைதியும்), த.நா.குமாரசாமி (ஆரோக்கிய நிகேதனம்), ஆர்.சண்முகசுந்தரம் (பதேர் பாஞ்சாலி), வல்லிக்கண்ணன் (தாத்தாவும் பேரனும்) மற்றும் தி.ஜானகிராமன் (அன்னை) போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். தமிழ்ச் சிறுகதைகள் அதன் ஆரம்பக்கட்டத்திலேயே அடைந்த உயரங்களுக்கு இத்தகைய மொழிபெயர்ப்புகளும் ஒரு மறைமுகக் காரணம்.

இன்று நடுவயதைக் கடந்த எழுத்தாளர்கள், வாசகர்கள் என எவரைக் கேட்டாலும் அவர்களை இலக்கிய வாசிப்பிற்குள் இழுத்து வந்து தள்ளி, மீளமுடியாமல் மூழ்கடித்தது என்று ரஷ்ய செவ்வியல் ஆக்கங்களின் மொழிபெயர்ப்புகளையே சொல்லுவார்கள். தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், புஷ்கின், துர்கனேவ், கார்க்கி, செக்காவ் போன்ற பெயர்கள் தமிழ் எழுத்தாளர்கள் அளவிற்கே வாசகர்களிடையே நெருக்கம் கொண்டிருந்தன என்றால் அது மிகையாகாது. அவ்வகையில் ரஷ்ய மொழியாக்கங்களுக்காக டி.எஸ். சொக்கலிங்கம், நா. தர்மராஜன் , பூ. சோமசுந்தரம், ரா.கிருஷ்னையா, நா.முகமது ஷெரிப் ஆகியோருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். மாஸ்கோவின் ராதுகா, முன்னேற்றப் பதிப்பகங்கள் அளவிற்குப் பெருவாரியாக இல்லாவிட்டாலும் அமெரிக்க அரசின் நிதிப் பின்புலத்தில் பேர்ல் பதிப்பக வெளியீடுகளாக வந்த பல நூல்களையும் மறக்க முடியாது. லிங்கனின் வாழ்க்கை சரிதமான ‘அழிவற்ற காதல்’ (இர்விங் ஸ்டோன்), ‘போரே நீ போ’, ‘மணிகள் யாருக்காக ஒலிக்கின்றன?’ (ஹெம்மிங்வே), ‘குருதிப்பூக்கள்’ (காதரின் ஆன் போர்ட்டர்), ‘சர்வாதிகாரியும் சந்நியாசியும்’ (ஆர்தர் கோஸ்ட்லர்) முதலியவை அவற்றில் முக்கியமானவையாகும்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய அரசால் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனங்களான சாகித்ய அகதெமியும், என்.பி.டி.யும் மாநில மொழி இலக்கியங்களின் பரஸ்பர மொழிபெயர்ப்புகளுக்கு பெரும் பங்காற்றி வருகின்றன. இவற்றின் வாயிலாகவே மண்ணும் மனிதரும், வாழ்க்கை ஒரு நாடகம், நீலகண்டப்பறவையைத் தேடி, அக்னிநதி, கங்கைப்பருந்தின் சிறகுகள், வனவாசி, செம்மீன், அவன் காட்டை வென்றான், மைய்யழிக் கரையோரம், பருவம் போன்ற காலத்தால் மங்காத படைப்புகள் தமிழுக்குக் கிடைத்தன.
எண்பதுகள் தொடங்கி வெ.ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்த பல படைப்புகளை க்ரியா வெளியிட்டுள்ளது. அந்நியன் (காம்யு), குட்டி இளவரசன் (அந்துவான் து எக்சுபரி), மீள முடியுமா (சார்த்தர்), சொற்கள் (ழாக் ப்ரெவர்) ஆகியவை தமிழில் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம்.

மீட்சி சிற்றிதழ் பெரிய அளவில் சர்வதேச இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் விதமாகச் செயல்பட்டது. அது வெளியிட்ட ‘லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்’ தொகை நூலானது அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியத்துக்கப்பால் செழுமையாக உள்ள மற்றொரு பிராந்தியத்தை தமிழ் வாசகர்களுக்குத் திறந்து வைத்தது. பிரம்மராஜன் மொழியாக்கம் செய்த கால்வினோ கதைகள் (யுனைடட் ரைட்டர்ஸ்), போர்ஹேஸ் கதைகள் (யாவரும் – மறுபதிப்பு) ஆகியவையும் ஆர்.சிவகுமார் மொழிபெயர்த்த உருமாற்றம் (தமிழினி), சோபியின் உலகம் (காலச்சுவடு), இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் (பாதரசம்) முதலியவையும் குறிப்பிடத்தகுந்தவை. அதுபோலவே அமரந்தாவின் மொழியாக்கத்தில் வெளிவந்த லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பான ‘சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்’ மற்றும் ‘நிழல்களின் உரையாடல்’ (நிழல்) என்னும் நாவலும் தமிழ்ச்சூழலில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதிர்வினைகளை உண்டாக்கின. லதா ராமகிருஷ்ணனின் மொழியாக்கத்தில் வந்த கவபாட்டாவின் நூல்களான ‘தூங்கும் அழகிகளின் இல்லம்’, ‘மூங்கிலிலைப் படகுகள்’ (ஸ்நேகா) ஆகியவற்றுடன் சாரு நிவேதிதா மொழிபெயர்த்த ‘ஊரின் மிக அழகியபெண்’ தொகுப்பையும் சி.மோகன் மொழியாக்கத்தில் வெளியான ‘ ஓநாய் குலச்சின்னம்’ நாவலையும்  இவ்வரிசையில் வைத்துப் பார்க்கலாம். இதுதவிர சுகுமாரன் , குளச்சல் மு யூசுப் , நிர்மால்யா , கே.வி. ஷைலஜா ஆகியோரின் மொழியாக்கத்தில் வந்துள்ள பல்வேறு மலையாள ஆக்கங்கள் ,குறிப்பாக பஷீர் மற்றும் பால்சக்கரியாவின் கதைகள் முக்கியமானவை.

நிறப்பிரிகை வெளியிட்ட தலித் மற்றும் ஆப்பிரிக்க இலக்கியச் சிறப்பிதழ்களும், பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் வெளியான தலித் சுயசரிதை நூல்களான ‘ஊரும் சேரியும்’, ‘கவர்மெண்ட் பிராமணன்’, தலித் எழுத்துகளின் தொகைநூலான ‘புதைந்த காற்று’ (விடியல்) ஆகியனவும் இந்திரன் தொகுப்பித்த ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’, ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’ ஆகிய நூல்களும் தமிழில் தலித் இலக்கியச் செயல்பாடுகளுக்கு உத்வேகம் தந்தவை. விடியல் பதிப்பகம் பெரிதும் இடதுசாரி அரசியலை மையப்படுத்திய கட்டுரை மற்றும் வரலாற்று நூல்களையே வெளியிட்டு வருகிறது என்றாலும் எஸ்.பாலச்சந்திரனின் மொழியாக்கத்தில் பதிப்பித்த ‘எரியும் சமவெளி’, ‘பெட்ரோ பராமா’ ஆகிய யுவான் ரூல்ஃபோவின் கதைகளும் நாவலும் குறிப்பிட வேண்டியவை.

காலச்சுவடு பதிப்பகம் உலக மற்றும் இந்திய கிளாசிக் வரிசையில் சுகுமாரன், ஜி.குப்புசாமி, அகிலன், அசதா, ஆனந்த், தி.அ.சீனிவாசன், எம்.எஸ், யுவன் போன்றோரின் சீரிய மொழியாக்கத்தில் பல நூல்களை வெளியிட்டிருக்கிறது. தனிமையின் நூறு ஆண்டுகள், பனி, கா, என் பெயர் சிவப்பு, கடல், பொம்மை அறை, நிச்சலம், வீழ்ந்தவர்கள், கசாக்கின் இதிகாசம், உடைந்த குடை ஆகிய நூல்கள் அவற்றில் நினைவுகூரத்தக்கவை. கிழக்கு மற்றும் சந்தியா பதிப்பகங்கள்  புனைவல்லாத பல வரலாற்று நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். போலவே பாரதி புத்தகாலயம் குழந்தைகளுக்கான பல அரிய நூல்களை உலக மற்றும் இந்திய மொழிகளினின்றும் மொழிபெயர்த்துக் கொணர்ந்திருக்கிறார்கள். என்சிபிஹெச், வ.உ.சி போன்ற பதிப்பகங்கள் அச்சில் இல்லாத பல பழைய மொழிபெயர்ப்பு நூல்களை மறுபதிப்பு செய்து வருவதோடு புதிய மொழியாக்கங்களையும் வெளியிட்டு வருகின்றன. இது தவிர்த்து பாரதி புக் ஹவுஸ், நற்றிணை வெளியிட்டுள்ள எம்.ஏ.சுசீலாவின் தஸ்தாவ்ஸ்கி மொழிபெயர்ப்புகள், ராமானுஜத்தின் மொழியாக்கத்தில் வெளியாகிய மண்ட்டோ படைப்புகள் (புலம்) ஆகியவையும் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியன.
தமிழுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் பல மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ள இப்பதிப்பகங்களின் வரிசையில் சில வருடங்களுக்கு முன்னால் இணைந்திருக்கும் பதிப்பகம் எதிர் வெளியீடு. வேர்கள், நார்வீஜியன் வுட், நள்ளிரவின் குழந்தைகள், பட்ட விரட்டி, கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது, ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் போன்ற மிக முக்கியமான அந்நிய மொழி படைப்புகளைத் தமிழில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இதுகாறும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் நூல்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பகங்கள் குறித்த நினைவை வரைந்து பார்க்கையில் கிடைத்தத் தோராயமான கோட்டுச்சித்திரம்தான் மேற்கண்டது. இன்று ஓரளவு அங்கீகாரமும், விற்பனை சாத்தியங்களும் இருந்தாலும் கூட மொழிபெயர்ப்பாளர்களுக்கு பல சமயங்களில் கிடைப்பது இரண்டாவது வரிசை இடம்தான். எனினும் பிறிதொரு மொழியில் தான் தேடிக் கண்டடைந்த படைப்பை, வாசித்து அடைந்த பரவசத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலிலேயே ஒரு மொழிபெயர்ப்பாளன் தன் பணியைத் தொடங்குகிறான். நாம் ரசித்தவொரு அயல்மொழிப் படைப்பை மேலும் அணுக்கமாகப் புரிந்து கொள்ள ஒரே வழி அதை நம் தாய்மொழியில் பெயர்த்து எழுதுவதுதான் என்று சொல்லுவார்கள். அவ்விதமாகத் தானடைந்த சுயநிறைவை பிறருக்கான ஒன்றாகவும் விரிவடையச் செய்யும் செயல்பாட்டிற்குக் கடினமான உழைப்பும், அசாதாரணமான அர்ப்பணிப்புணர்வும் தேவை. இயல்பாகவே இக்குணங்களைக் கொண்டிருப்பதாலேயே, கார்த்திகைப் பாண்டியன் இத்துறைக்குள் வந்த சிறிது காலத்திற்குள்ளாகவே ஒரு நாவல் (ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் – யுகியோ மிஷிமா), இரண்டு உலகச்சிறுகதைத் தொகுப்புகள் (எருது, சுல்தானின் பீரங்கி), ஒரு கவிதைத் தொகுப்பு (நரகத்தில் ஒரு பருவகாலம் – ஆர்தர் ரைம்போ) ஆகியவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். இப்பணிகளுக்காக விகடன் விருது, இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருது மற்றும் ஆத்மாநாம் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

ஒரு காஷ்மீரிக்கதை உட்பட பத்து அயல்மொழிச் சிறுகதைகள் அடங்கிய மூன்றாவது தொகுப்பு இது. ஒரு சில இந்திய ஐரோப்பிய மொழிகளைத் தவிர பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்ள நமக்கிருக்கும் ஒரே தொடர்புவழி ஆங்கிலம்தான். இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளையும் கார்த்திகைப் பாண்டியன் ஆங்கிலம் மூலமாகவே பெயர்த்துத் தந்திருக்கிறார். மொழியாக்கம் செய்வதற்கான மூலக்கதைகளை தெரிவு செய்ய இரண்டு அளவுகோல்களை வைத்திருப்பதாக அவர் கூறுகிறார். ஒன்று, தமிழில் அதிகம் அறியப்படாத படைப்பாளியின் கதையாக இருக்க வேண்டும். இரண்டாவது, கதையின் வடிவம் அல்லது உள்ளடக்கத்தில் புதுமை இருக்க வேண்டும். புதிய குரல்களை, பொருண்மைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்து பார்க்க வேண்டும் என்கிற அவருடைய உத்வேகத்தை இத்தொகுப்பிலுள்ள கதைகள் சரியாகவே பிரதிபலிக்கின்றன.
முதல் கதையான ‘தொலைநோக்கி’ (ரஷ்யா), கடைசிக்கதையான ‘காவி’ (இந்தியா), தொகுப்பின் நடுவிலுள்ள ‘துண்டிக்கப்பட்ட தலையின் கதை’ (மொராக்கோ) ஆகிய மூன்று கதைகளுமே அரசியலை, அதிகாரத்தின் வன்முறையை, அதை எதிர்கொள்ளும் திறனற்ற சாமானியர்களின் பதைபதைப்பைத்தான் முன்வைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கதையும் வெவ்வேறுவிதக் கூறுமுறையைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கேட்கிற கதையளவிற்கே சொல்கிற குரலின் ஏற்ற இறக்கங்களுக்கும், சொல்லாமல் இடைவிடுகிற மௌனங்களுக்கும் அர்த்தமுண்டு என்பதை உணர்த்துபவையாக அமைந்திருக்கின்றன இந்தக்கதைகள்.

‘பெஞ்சமின் ஸெக்கின் கதை’ என்கிற போஸ்னியச் சிறுகதை அசாதாரணமான விவரிப்பு முறையைக் கொண்டிருக்கிறது. ஒரு சிறுவனின் பகற்கனவு என்கிற ஒற்றைப்புள்ளியில் சுருக்கி விடக்கூடிய சிறிய அனுபவத்தை முழு வாழ்விற்குமான ஒன்றாக விரிக்கும்போது கிடைக்கும் அபூர்வமான தரிசனமாக அமைகிறது இக்கதை. இதைப் படித்து முடித்ததும் போர்ஹேஸின் “Secret Miracle” மற்றும் அம்புரோஸ் பியர்ஸின் “An Old Occurance in Owl Creek” ஆகிய இரண்டு கதைகளும் நினைவுக்கு வந்தன. இம்மூன்று கதைகளுக்கும் உத்திரீதியாக சிறு ஒற்றுமை இருக்கிறது என்றபோதும் வெவ்வேறு உணர்த்துதல்களை முன்வைக்கின்றன.
ஒரு வாய்மொழிக்கதையின் எளிமையோடு, கவித்துவமான விவரணையும் அதே சமயத்தில் உளவியல்ரீதியிலான ஆழமான அவதானிப்புகளையும் கொண்ட ‘கோமாளி’ என்கிற எகிப்தியக்கதை என்னை வெகுவாகப் பாதித்தது. இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதையென இதையே சொல்வேன். ‘அந்த நிறம்’ என்கிற பிரிட்டிஷ் கதை மெய்யாகவே மிகச்சிறிய கதை. அச்சில் ஒன்றரைப் பக்கம்தான் வருகிறது. ஆனால் படிப்பவரின் மனதில் அது ஒரு கவிதையின் கனத்தை ஏற்றி வைத்து விடுகிறது.

ஒரு அழகிய நிறமாலையை ஒத்த உணர்வுகளின் கலவையைக் கொண்டதாகத் தொகுக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதைகள் வாசிக்கத் தடங்கல் ஏதுமில்லாத மொழியாக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ‘பொதியூட்டப்பட்ட துப்பாக்கி’, ‘மகிழுந்து’ போன்ற தூயத் தமிழ் வார்த்தைகளை நவீனச் சிறுகதைகளின் நடுவே, அதுவும் வேற்றுமொழிக் கதைகளின் இடையில் வைத்துப் பார்க்கையில் அவை சற்றே வித்தியாசமாகத் தொனித்தாலும் கூட தொடர்ந்த வாசிப்பில் எதுவும் துருத்திக் கொண்டு தெரிவதில்லை.

இக்கதைகளை அவற்றின் ஆங்கில வடிவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க எனக்கு வாய்க்கவில்லை. வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்ப்பதைக் காட்டிலும் அர்த்தத்தொனிகளை வேறு மொழிக்கு இயல்பாகக் கடத்துவதிலேயே ஒரு மொழியாக்கத்தின் பெறுமதி அடங்கியுள்ளது என்று நான் நம்புகிறேன். தவிரவும், ‘முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு என்று எதுவுமில்லை. போதுமென்று ஒரு கட்டத்தில் கைவிடப்பட்டவை மாத்திரமே உண்டு’ என்கிற ஏ.கே.ராமானுஜத்தின் கூற்று ஒன்று உண்டு. அவ்வகையில் மூலத்தினின்றும் மூன்றாவது மொழிக்குப் பெயர்க்கப்பட்டிருக்கும் இக்கதைகள் பல வகைகளிலும் அலாதியானதொரு வாசிப்பனுபவத்தைத் தருபவையாக அமைந்திருக்கின்றன. கார்த்திகைப் பாண்டியனுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்!

க.மோகனரங்கன்
23.11.2018