Thursday, 29 November 2018

பிஹாரியின் 'சதாசாயி -ஓர் அறிமுகம்

பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரைக்குமான ஹிந்திக் கவிதைகள் சதி கால(அ) சிருங்கார கால கவிதைகள் என அழைக்கப்படுகின்றன. மிகப் பெரிய வீச்சு கொண்டிருந்த இந்திய பக்தி இலக்கியத்தினின்றும் ஒரு கிளையாகப் பிரிந்து காதலுணர்வை முதன்மையாகப் போற்றி பாடிய துளசி, சூரி,நந்ததாசர், ரஹூம், கானாதந்தர் போன்றவர் வரிசையில் முக்கியமானவர் பிஹாரி ஆவார்.

1595-ல் குவாலியரில் பிறந்த பிஹாரி தனது ஆரம்பக் கல்வியை சமஸ்கிருத அறிஞரான தனது தந்தையிடம் கற்றார். தாயின் மறைவிற்குப் பிறகு பந்தல் கோட் மாகாணத்திலுள்ள அர்ச்சாவிற்கும் அதன்பின் பிருந்தாவனத்திற்கும் பிஹாரியின் குடும்பம் இடம் பெயர்ந்தது. தனது திருமணத்திற்குப் பிறகு மனைவியுடன் மதுராவிற்குச் சென்ற பிஹாரி அங்கே தனது ஆன்மீக குருவான தாஹரிதாசரைச் சந்திக்கிறார். அவர்மூலம் மொகலாய இளவரசன் ஷாஜஹானின் அறிமுகம் கிடைக்க ஆக்ராவிற்குச் செல்கிறார். மொகலாய அரசவையில் தனது பாடல்களுக்கான அங்கீகாரத்தையும், வெகுமதிகளையும் பெற்றதோடு பிஹாரி உருது மற்றும் பெர்சிய இலக்கியங்களிலும் பரிச்சயம் பெறுகிறார். ஜஹாங்கீரின் மரணத்திற்குப் பிறகான அரசியல் சூழல் காரணமாக திரும்பவும்  மதுராவிற்கு வந்த பிஹாரி, மன்னன் ஜெயசிங்கனின் அழைப்பை ஏற்று அம்பர் சமஸ்தானத்திற்குச் சென்றார். அங்கு தனது புகழ்பெற்ற நூலான 'சதாசாயி'யை எழுதித் தொகுத்தார். 'சதா' என்றும் பொருள்படும். தொகுப்பிலுள்ள பாடல் ஒவ்வொன்றும் இரண்டு வரிகளைக்கொண்ட பாக்கள் ஆகும். தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு பிருந்தாவனத்திற்கு திரும்பிய பிஹாரி தனது 69 வயதில் 1664-ல் மரணமடைந்தார்.

 ரீதிகால கவிஞர்கள் பக்தியிலிருந்து புலணுணர்வுகளுக்கும் அகமனதிலிருந்து புற அழகின் வசீகரத்திற்கும் தங்கள் பார்வையை மாற்றிக் கொண்டவர்கள் இயற்கையின் அழகு. பருவகாலங்கள், இசையின் இனிமை ‍போன்றவை குறித்தும் பாடியிருந்தாலும் அவர்களுடைய பெரும்பாலான பாடல்கள் இயற்கையாகவே காதல்,கலவி, வசீகரிக்கும் பெண்களின் அழகு போன்ற சிருங்கார ரசத்தின் அடிப்படையான உணர்வுகளைச் சுற்றியே பாடப் பெற்றுள்ளன.

பிஹாரி காதலை மிக உயர்ந்த தளத்தில் வைத்துப் போற்றுகிறார். அது அவருக்கு வெறும் காமம் சார்ந்ததல்ல. பொங்கிப் பெருகும் இளமையின் விழைவின் முன் மற்ற அனைத்துமே நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுபவையே என்று கருதினார். பிஹாரி காதலைத் தூய்மையான, ஆரோக்கியமான உணர்வாகப் போற்றியவர்.'நுட்பமான மனநிலையுடைய மேலான ஞானமுடையவர்களுக்குக் காதலுணர்வும், அழகும் ஆயிரம் முறைகள் மூழ்கியும் ஆழம் காண முடியாத கடலைப் போன்றவை. ஆனால் அறிவேதுமற்ற முட்டாள்களுக்கோ அவை சுலபமாக தாண்டிவிடலாம் எனத்தோன்றும் ஆழமில்லாத குட்டை மட்டுமே என்று கூறும் பிஹாரி காதலையும், அழகையும் ஓர் எல்லைக்கு மேல் உயர்த்தி அவற்றை பண்பற்ற உணர்வுகளிலிருந்து பிரிந்து உன்னதமான அனுபவமொன்றிற்கு நகர்த்திவிடுகிறார் அவரது காதலுக்கு எல்லைகள் ஏதுமில்லை அது போற்றுதல், தூற்றுதல் இரண்டிலிருந்தும் விடுபட்டது.

பொதுவாகவே சிருங்கார காலக் கவிஞர்கள், பருவமெய்திய பெண்களின் நீள்விழிகள், ஓரப் பார்வைகள், முகிழ்க்கும் மார்புகள். சிறுத்த இடை, இடுப்பில் விழும் மடிப்புகள் என ஆவல் ததும்ப பாடுபவர்கள் பிஹாரியிலும் இத்தகைய சித்தரிப்புகள் நிறைய உண்டு தவிர சோம்பல், ஆவல், கிளர்ச்சி, இனிமை. பெருமிதம், கர்வம், துயரம்,விரக்தி என வேறுவேறு சூழ்நிலைகளில் மாறுபட்ட மனநிலைகளையுடைய பெண்களின் வர்ணணைகளை பிஹாரி திறமையுடனும் சுருக்கமாகவும் முடிவுற்ற இனிமையுடன் சித்தரித்திருக்கிறார்.

பெண்களைப் பற்றிய வர்ணணைகளில் முகத்திற்கு நிலவு, கண்களுக்கு மான், மீன், குவளை, புருவத்திற்கு வில், தொடைகளுக்கு வாழை என மரபான உவமைகளையே பிஹாரி பயன்படுத்துகிறார். போக, ஹிந்திக் கவிஞர்கள் வழக்கமாகப் பின்பற்றும் பெண்களை உச்சி தொடங்கி உள்ளங்கால்வரை வருணிக்கும் உத்தியை பிஹாரியும் கடைப்பிடித்திருக்கிறார். பிஹாரியின் வர்ணனைகளின் சிறப்பு அதன் சுயத்தன்மையிலில்லை மாறாக அவரது புத்திசாலித்தனமான பிரயோகங்களிலேலே இருக்கிறது எனலாம்.

கோடை,வசந்தம்,கார்,பனி முதலிய இந்தியப் பருவ காலங்களும் பூக்கள், செடி கொடிகள் பற்றிய வர்ணனைகளும் பிஹாரியின் பாடல்களில் இடம் பெற்றிருந்தபோதிலும் வெகு அரிதாகவே இயற்கை இயற்கைக்காகவே பாடப் பெற்றிருக்கிறது மற்றபடி இயற்கை மணவறைத் தோழியாகவே அவர் கவிதைகளில் இடம்பெறுகிறது காதலும், அழகுமே மணமக்களாக முதலிடம் பெறுகின்றன. பிஹாரி ஆழ்ந்த சமயப் பற்றுள்ளவராக இருந்திருந்தாலும் சதாசாயியில் அவர் புனைந்துள்ள குறைந்த எண்ணிக்கையிலான பக்திப் பாடல்களிலும் தனியான சமயநோக்கு ஏதும் தென்படுவதில்லை. என்றாலும் கிருஷ்ணன் அவரது இஷ்ட தெய்வம் எனத் தெரிகிறது.

சில அறிஞர்களின் பார்வையில், பிஹாரியின் பாடல்கள் ஆழம், ஆன்மாவின் தெளிவு, அர்த்தச் செறிவு முதலிய அம்சங்களில் குறைவுபட்டதாகத் தோன்றுகின்றன. அவை புதுமையானதாகவோ சுயத்தன்மையுடையதாகவோ அல்லாமல் பல தருணங்களில் வார்த்தைகளை புத்திசாலித்தனமாக கையாளும் திறமையினால்தான் சிறப்பு பெறுகின்றன என்று அவ்வறிஞர்கள் கூறுகின்றனர். அவற்றில் தன்னியல்போ, நினைனைக் கிளர்த்தும் அம்சமோ, உணர்வு வயப்பட்ட சிந்தனைகளால் அடையப் பெறும் மேன்மையோ இல்லை. எனவே இப்பாடல்கள் களங்கமற்ற காதலின் உன்னத நிலைக்கு உயருவதற்குப் பதிலாக வெறும் சிற்றின்பப் பாடலாகவே நின்றுவிடுகின்றன என்றும் அவ்வறிஞர்கள் குற்றம் சாட்டுவர்.

வெளிப்பாட்டுத் திறமைகளில் அவருக்குள்ள கட்டுப்பாடு மற்றும் அப்பாடல்களில் அமைப்பாக்கத்திற்கும் அவற்றின் தன்னியல்பின் சமநிலை ஆகிய இரண்டு அசாதாரணமான பண்புகளினால்தான் பிஹாரியின் பாடல்கள் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அதனுடைய பிரகாசத்தையும் சக்தியையும்  இழக்காமலிருக்கிறது. மாயாஜாலக்காரனொருவன் புரியும் தந்திர வித்தைகளாக பிஹாரி தனது வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. மாறாக ஆபரணத்திற்காக முத்துக்களைப் பதிக்கும் நகை வேலைபாட்டுக்காரனைப் போல் கச்சிதமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறார்.

பிஹாரியின் 'சதாசாயி'க்கு அறுபதிற்கும் மேற்பட்ட உரைகள் உள்ளன. சமஸ்கிருதம், பெர்சியன், உருது, குஜராத்தி, சமஸ்கிருதநூலான 'ஆர்யசப்தசதி' தெலுங்குப்பாடல்களான 'கதாசப்தசதி'தமிழின் 'அகப்பாடல்கள்'முதலியவற்றோடு பிஹாரியின் பாடல்களை ஒப்புமைப்படுத்தி நாம் வாசிக்க முடியும். இப்பாடல்கள் ஆங்கிலத்தில் Penguin Classic பதிப்பித்துள்ள The Satasai  என்ற நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை. ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் கே.பி.பகதூர். பிஹாரியின் பாடல்களிலிருந்து பல்வேறு அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடல்கள் இங்கே தமிழில் தரப்பட்டுள்ளது.

குறிப்பும், மொழிபெயர்ப்பும் :
 க. மோகனரங்கன்

தோழி கூறியது

பெரியவர்களுடன் அமர்ந்திருந்த
ராதாவைக் கண்டுவிட்ட
குறும்புக்கார கிருஷ்ணன்
என்ன செய்தான் தெரியுமா?
"சரி என்று மட்டும் சொல், அன்பே!
உனது தாமரைப் பாதத்தில் விழவும்
செய்வேன்" என்பதை
குறிப்புணர்த்த தனது நெற்றியை
அல்லி மலர்கொண்டு வருடி நின்றான்.
சம்மதத்தைத் தெரிவிக்க
புத்திசாலி ராதா தன்னுடைய
கண்ணாடி பதித்த மோதிரத்தை
சூரியனுக்கு உயர்த்திப்பிடித்தவள்
தனது கையை
மார்புகளினடியில் மறைத்துக்கொண்டாள்
"சூரியன் குன்றுகளினடியில்
அஸ்தமிக்கும் பொழுதில்
அன்பே! நான் வருவேன்"
என்பதன் அடையாளமாய்.

தலைவன் தன் நண்பனுக்குச் சொன்னது

என்னைக் கண்டவுடன்
ஏதோ வெட்கப்படுவதுபோல்
தனது கைகளை உயர்த்தியவள்
சேலைத் தலைப்பால்
தலையை மூடிக்கொண்டாள்.
வேண்டுமென்றே
அடிவயிறு அதன் மூன்று மடிப்புகளுடன் தெளிவாகத்
தெரியும்படி
பின்
தெருவினுள் திரும்பி மறையும் முன்
அவளது தோழி அறியாவண்ணம்
என்னை வெகுநேரம் ஆவலுடன் நோக்கினாள்.

அவளது தோழிகளில் ஒருத்தி சொன்னது

பலகணியிலிருந்து
காதலர்கள் ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டனர்
அவர்களுடைய பார்வைகள்
குறுக்கே கட்டப்பட்டதொரு
கயிறு போலாக
அதன் வழியே
அவர்களுடைய இதயங்கள்
கழைக் கூத்தாடியைப்போல விரைந்தன
ஒன்றையொன்று சந்திக்க.
             
               
தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்கு சொன்னது

ஒர கண்ணாடியின் மீது
ஆழமாக மூச்சுவிடும்போது
அது தெளிவற்றுத் ‍தெரிவதுபோல
நறுமணமிக்க
மஞ்சள் சந்தணப்பூச்சு
அவளது மேனியின்
இயற்கையான பிரகாசத்தை
அதிகரிப்பதற்கு பதிலாக
மங்கச் செய்துவிட்டது.

தலைவன் அவளது தோழியுடம் கூறியது

நீலக்கல் பதித்த
கருப்பு மோதிரத்துடன் ஜொலிக்கும்
இளஞ்சிவப்பு நகத்துடன் கூடிய
அவளது சுட்டு விரலின்
கணநேரத் தரிசனம்
திரிவேணி சங்கமத்தை கண்டு
முக்தியடைந்த பக்தனைப்போல்
என் ஆன்மாவை
பரவசப்படுத்துகிறது.

அவளது தோழி தலைவனிடம் கூறியது

அவளின்
வாசமுடைய
மிருதுவான கன்னம்
அதில் ஒட்டிக்‍கொண்டுவிட்ட
ரோஜா இதழை
வேறுபடுத்தி காண முடியாதபடி
இளஞ்சிவப்பு வண்ணமுடையது

தலைவன் தலைவியிடத்து கூறியது

தொங்குகின்ற உறியில்
தயிர் கலயத்தை வைப்பதற்காக
உனது கரங்களை
உயர்த்தும் போது,
எவ்வளவு அழகாகயிருக்கிறாய்
பார்ப்பதற்கு?
அதை
வைக்கவும் வேண்டாம்
எடுக்கவும் வேண்டாம்
நிற்கும் நிலையில்
அப்படியே இருப்பாய்
அன்பே!
மயக்கமூட்டுமுனது அழகை
பார்த்துப் பார்த்து
தீரும் வண்ணம்.

தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்குச் சொன்னது

பெரியோர்களுடன்
அமர்ந்திருக்கும் கணவன்
தன் குழந்தையை முத்தமிடக் கண்டவள்
தானும் அதற்கு ஏங்கியவளாக
அக்குழந்தையை வேண்டித்
தன்னிடம் அழைத்து பதிலுக்கு
முத்தமிட்டவள்
தணியாத ஆவலில் வேர்த்து நனைய
வேட்கையில் மேனி சிலிர்த்து
ஒரு அர்த்தமுள்ள பார்வையை
தனது கணவனை நோக்கி வீசினாள்.

தலைவன் சொன்னது

ஓர்
மூக்குத்தி வளையத்திலாடும்
முத்தே!
நீ மிகவும் அதிஷ்டசாலி
தாழ்ந்த சிப்பியிலிருந்து
உதித்து வந்த போதிலும்
உன்னால்
அவளது உதடுகளை
அச்சமின்றி தொடமுடிகிறது
உயர்ந்த குடியில்
பிறந்தவன் என்றாலும்
நானொரு முறைகூட
முத்தமிட முடியவில்லை

தலைவன் அவளிடம் கூறியது

சற்று நோக்குதலின் இன்பங்கள்
பரவசமூட்டும் துடிப்புகள்
உணர்ச்சி மிகு தழுவல்கள்
முனகல்கள் சிரிப்புகள்
உரசல்கள் மற்றும் கசங்கல்கள்
இப்படிப்பட்ட கலவிதான்
விடுதலையைத் தருகிறதெனக்கு
வேறு எதைப்பற்றியும் நான்
கவலைப்படுவேனில்லை.

தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்குச் சொன்னது

வார்த்தை ஏதுமின்றி
எண்ணெய் விளக்கை
அணைத்தான்
சம்மதத்தின் அடையாளமாய்

அவளது தோழி சொன்னது

தான் கேட்பதற்கு
என்னிடம் ஏன் ஒளிக்கிறாய்
தோழி!
உனது காதலரின் நெற்றியில்
ஒட்டியிருக்கும் பொட்டை வைத்து
எல்லோரும் ஊகிக்க முடியும்
அவரிடம் உனது ஆடைகளை மாற்றிக்கொண்டு
ஆணாக நீ இயங்கியதை

தோழிகளின் ஒருத்தி மற்றவளுக்குச் சொன்னது

அவர்களுடைய
வீடுகளைப் பிரிக்கும் கவரிலுள்ள
துளையின் வழியே தம் கைகளை
ஒருவருக்கொருவர் பற்றிக்கொண்டவர்கள்
இருவரும் சேர்ந்து உறங்கியது போன்ற
ஆனந்தத்துடன் அவ்விரவினை கழித்தனர்

தலைவி தன் தோழியிடம் கூறியது


உறங்குகிறான் என்றெண்ணி
குனிந்தவனை முத்தமிடுகையில்
என் குறும்புக்கார காதலன்
விழித்துப் புன்னகைக்க
வெட்கினேன்
அச்சமேதுமின்றி தன் தோளோடு
அவன் சேர்ந்தணைக்க
எனது பாசாங்குகளணைத்தையும் விட்டுவிட்டு
அவனது கழுத்தை விரைந்து
கட்டிக் கொண்டேன்

தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்குச் 
சொன்னது

தன் காதலனின் மார்பில்
தலைவைத்துதத் துயின்றவன்
அவன் வேறுபெண்ணோடு
உறவு கொள்வதாக
கனவு கண்டு விழித்ததும்
அவனுடன் கோபித்துக்கொண்டு
முதுகை காட்டியவாறு திரும்பிக் கொண்டான்.

தலைவி தன் தோழிக்கு கூறியது

தான் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
அதிக அழகாகத் தெரிகிறார் அவர்
சாகசமிக்க நீச்சல் வீரரைப்போல
எனது பார்வை
அவரது அழகின் பெருங்கடலில்
மீண்டும் மீண்டும்
தாவி மூழ்குகிறது
ஆனால் அதன் ஆழத்தை
அது ஒருபோதும் தொட முடியவில்லை

தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்குக் கூறியது

அவளின்
நெற்றியை அலங்கரிக்கவேண்டி
திலகமிடுவதற்காக
அவளது முகவாயை
உயர்த்தியவன் கைகள்
உணர்ச்சிமிகுதியால் நடுங்கிட
அதை தேர்செய்ய முடியவில்லை அவனால்
இப்போது
அந்த கோணலான அடையாளத்தைக்
கொண்டு
பெருமிதத்தோடு அவள் போகிறாள்.

தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்குச் சொன்னது

அவளுடைய காதலன்
அங்கிருக்கும்போதெல்லாம்
அவனுடன் கண்ணாமூச்சி விளையாட
அலுப்பதேயில்லை அவளுக்கு
ஒவ்வொருமுறை
ஒளிந்துகொள்ளும் போதும்
ஒருவரைஒருவர் தொடும்போதும்
உணர்ச்சிமிகுதியால்
தழுவிக் கொள்ள முடியுமே!


தலைவி கூறியது

அன்பிற்குரிய கிருஷ்ணனின்
வருகையை முன்னறிவிப்பதுபோல்
எனது வலதுதோள் துடிக்கிறது
அதற்கு நான்
வெகுமதி அளிப்பேன்
அவன் வந்தால் தழுவிக்கொள்ளும்போது
எனது இடதுகையை தூரவிலக்கிவிடுவேன்.

அவன் தனது தோழிக்கு சொன்னது

ஏன்
எனக்கு மாத்திரம்
உபதேசிக்கிறாய்?
கிருஷ்ணனின் குழலிலிருந்து புறப்படும்
அந்த மந்திர இசையை
கேட்ட மாத்திரத்தில்
தமது குடும்ப கெளரவத்தை
காற்றில் பறக்கலிடாதவள்
கோகுலத்தில்
எவளிருக்கிறாள்?

தலைவன் அவளது தோழிக்கு சொன்னது

காட்டில்
பூக்களை சேகரிக்கும்போது
உச்சியிலிருக்கும் மலர்களை பறிப்பதற்காக
அவள் தனது கைகளை உயர்த்துகையில்
கச்சையிறன்றும் ததும்பி நின்னி
மார்புக் காம்புகளின் மீது
எனது பார்வை நிலைத்தது
நழுவி விழுந்த
சேலைத் தலைப்பினூடே
அவளது அழகிய தோள்கள் வெளிப்பட
இடுப்பிற்கு மேல்
மூன்று மடிப்புகளை கண்ட மாத்திரத்தில்
என்னிதயத்தை
அவளிடம் இழந்துவிட்டேன்
எப்போதைக்குமாக.

தலைவி தலைவனிடம் கூறியது

வெற்றிலையின் சிவப்பு
உதடுகளை பார்ப்பதற்கு அழகாக்குகிறது
விளக்கின் மை
கண்களுக்கு இனிமை தருகிறது
என்பதுபோன்ற
ஒன்றிற்கொன்று பொருந்திப் போகிற
விஷயங்களை எல்லோருமே அறிவார்கள்
ஆனால் அன்பரே!
உமது புருவங்களில்
வெற்றிலைக் கரையும்
உதடுகளில் விளக்கு மையும்
எப்படி வந்தது?

அவளது நம்பிக்கைக்குரியவள் சொன்னது

தோழி!
எத்தனை முறை உன்னிடம் கூறியிருக்கிறேன்?
படுக்கையில்
காதலரிடம் கோபித்துக்காண்டு
முகத்தை திருப்பிக் கொள்ளாதே என்று.
தலையணை அருகே
தூவியிருந்த ரோஜா இதழ்கள்
வழவழப்பான உனது கன்னத்தை
கீறிவிட்டதே!

தோழி தலைவியிடம் கூறியது

மழையிங்கு
எல்லோர் இதயத்தையும் வேட்கையால்
நிரப்புகிறது.
மிகுந்த பிடிவாதமுடைய பெண்ணும்கூட
இப்போது
பிணக்கை காத்துநிற்க முடிவதில்லை
தோழி!
இன்னமும் நீ ஊடி நிற்பதில்
பயன் எதுவுமில்லை.
அப்படிப்பட்ட பிரிவுகள் தளர்வதால்
கட்டில் கயிற்றின் முடிச்சுகள்
இறுகும் பருவமிது.

தோழி தலைவிக்கு கூறியது

அடி, முட்டாள் பெண்ணே!
சேலைத் தலைப்பால் நீ
துடைத்தெடுக்க முனைவது
சுண்ணாம்பின் கறையல்ல
அது
உன் மூக்குத்தியில் பதிந்துள்ள முத்து
உதட்டின்மீது உண்டாக்கும்
மினுக்கம்தான்.

தலைவன் கூறியது

அவளது
கூர்ந்த மார்பகங்களில்
ஏற முயன்று களைத்துப்போன
என் பார்வை
கொள்ளையிடும் அவனின் முகத்தழகை
காணத்தவித்தது
ஆனால் இடையில்
கன்னக்குழியில் தடுக்கிவிழுந்து
அதிலேயே சிக்கிக் கொண்டது.

தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்குச் சொன்னது


பிரிவின் வேதனையில்
வார்த்தை யொன்றும்
எழுதமுடியாமல்
வெற்றுத்தாளை அவனுக்கு
அனுப்பி வைத்தாள்
அதையும்
கவனமாகப் படிப்பவனைப்போல்
தனக்கு தானே
பாவனை செய்துகொள்கிறான்.

தலைவன் அவளது தோழியிடம் கூறியது

பிரகாசிக்கும்
நட்சத்திர ஒளியை
விடிந்தது என்று தவறுதலாக நினைத்து
நடக்கும் வழிப்போக்கன்
வேடன் வலையில் சிக்கி
குழியில் விழுவதுபோல
அவளது
கண்ணைப் பறிக்கும் பிரகாசம்
என்னை வழிநடத்த
அவளின் புன்னகைச் சுருக்கில்
கழுத்திறுக்கப்பட்டவன்
கிடக்கிறேனிப் போது
அவளுடைய கன்னக்குழிவில்.

அவளது தோழி தலைவனுக்கு கூறியது

ஒரு கவிதையின்
புரிபடாத உட்பொருள்
ஆழ்ந்த வாசிப்பில் மட்டுமே
வெளிப்படுவதுபோல
நறுமணமுடைய
வெண்ணிற ரவிக்கையின் கீழிருக்கும்
மலர்ச்சியுற்று அவளது மார்புகளை
கூர்ந்த நோக்குடைய
கண்கள் மட்டுமே காண்பதற்கியலும்

தலைவன் தன் தோழனிடம் கூறியது

ஒரு
பூஜ்யம்
எண்ணிக்கையை
பத்து மடங்கு கூட்டுமென்பதை
அனைவரும் அறிவர்
ஆனால்
வட்டமானதொரு பொட்டு இட்டவுடன்
கூடும் அவளது அழகிற்கு
எல்லை என்று ஏதுமில்லை

Monday, 22 October 2018

புதிய பிரமைகளைத் தேடி



வாழ்வு என்கிற பெயரில் வழிவழியாக நாம் உருவகித்து வைத்திருக்கிற பிரமைகளை, நுட்பமான கேள்விகளின் வாயிலாக கலைத்து மாற்றுவதோடு அல்லாமல் இக்காலத்திற்கேற்ற புதிய பிரமைகள் உருவாக்கி அளிப்பவராகவும் இருக்கும் போகன் நவீன தமிழ்க்கவிதையின் இளம் தலைமுறை அடையாளங்களில் ஒருவர். இளமைக்கேயுரிய வேகத்தையும் வேறொன்றை நாடும் வேட்கையையும் இவருடைய கவிதைவரிகளில் காணலாம்.

 நூல்களாக அச்சில் வெளிவருவதற்கு முன்பாகவே முகநூல் வாயிலாக இவர் கவிதைகள் பலருக்கும் பரிச்சயம். ஓரிரு வரிகள் கொண்ட குறுங்கவிதை களிலிருந்து சிலபக்கங்கள் நீளும் நெடுங்கவிதைகள் வரையிலும் ஒரே நாளில் ஏழெட்டு கவிதைகள் பதிவிடுவதை பார்த்ததுண்டு. நிறைய எழுதும்போது வகை மாதிரி வடிவங்களில் அகப்பட்டுக் கொண்டு தன்னைத்தானே பிரதிசெய்யத் தொடங்கி எழுத்தின் சாரம் நீர்த்துப் போய்விடக்கூடிய அபாயம் அதிகம். ஆனால் ஏராளமாக எழுதியும் வடிவத்திலும் உணர்வின் வண்ணங்களிலும் அவரால் வேறுபாடுகள் எளிதாக காட்டிவிட முடிகிறது என்பது வியப்பே.

 அவருடைய முதல்தொகுப்பி்லுள்ள முக்கியமான கவிதைகளில் ஒன்று ‘சுழி’ அது பின்வருமாறு தொடங்குகிறது.

தாமிரபரணி ஆற்றில்
மழைக்காலத்தில்
என்னென்னவோ
மிதந்துவருகிறது
மரக்கிளைகள்...
பூ...
செத்தை...
அசங்கியம்...
கண்களை அசையாமல்
வானத்துக்கு காட்டிக்கொண்டு போகும் மாடு..
(எரிவதும் அணைவதும் ஒன்றே : பக்.15)

போகன் கவிதை மொழியும் இப்படியாக நுரைத்து போகும் புது வெள்ளம் போன்றதே, இதன் ஓட்டத்தில் அழகு, அசிங்கம், காதல், காமம், துயரம் மகிழ்ச்சி, வலி இன்பம் என நாலாவித உணர்வுகளும் அதன் இயல்பான கச்சாத்தன்மை மிதந்து வருவதை காணலாம்.

எந்த ஒரு கவிஞனுக்கும் அவனுடைய யோசனைகளும், நினைவுகளும் அலையவென்று மானசீகமானதொரு மேய்ச்சல் நிலம் இருக்கும். அதன் விஸ்தீரணமே அக்கவிதைகளின் வீச்சை தீர்மானிப்பதாக அமையும். அவ்வகையில் நோக்கும்போது போகன் தனது கவிதைகள் ஊடாக உருவகித்துக் காட்டும் அகநிலம் வித்தியாசமானது. சற்று விபரீதமானதும் கூட. மேலெழுந்தவாரியான அமைதிக்கும் திருப்தியுணர்வுக்கும் அப்பால் கொந்தளிப்பும், நிம்மதியின்மையுமே இவரது கவிதைகளின் அடியோட்டமாக இழைகிறது எனலாம்.

பொதுவாக புதிதாக ஆற்றில் இறங்குபவர்கள் கரையோரமாக, பாதுகாப்பான எல்லைக்குள்ளாகவே நீந்துவதுதான் வழக்கம். ஆனால் போகன் அதை பற்றியெல்லாம் கவலைப் படாமல் ஓட்டத்தின் மையத்தை நோக்கி தாவுகிறவராகவே இருக்கிறார். அவ்விடத்தில் உடுதுணி மாத்திரமல்ல. சமயத்தில் ஆளே இழுபட்டு போய்விடக்கூடிய ஆபத்தும் உண்டு. இந்த சாகச உணர்வும் அது சார்ந்த அடைதல்களும் சரிவுகளும் இவருடைய கவிதைகளின் இயல்பாக அமைந்து விட்டிருக்கின்றன.
கலை என்பதன் அடிப்படையே ‘மாறுபட்ட பார்வை’ என்கிற கோணத்திலிருந்துதான் பிறக்கிறது. விஷயங்களை காண்பதிலும், முன்வைப்பதிலும் பிறரிடமிருந்து எவ்வளவுக்கு வேறுபடுகிறான் என்பதை பொருத்தே ஒரு கலைஞனின் திறன் மதிப்பிடப்படுகிறது. ஆக ஒரு கவிஞனின் விலகல் அல்லது கோணல் என்பது அவனுடைய தனித்துவமாக எழுத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது எனலாம். இதை ‘வக்ரோக்தி’ என்று சிறப்பித்துக் கூறுகிறது வடமொழி இலக்கணம்.

வெள்ளை நாடா தெரியும்
கிழிந்த பாவாடை சிறுமியும்
அவள் கோல்் இழுத்து கூட்டிப் போகும்
குருட்டு தகப்பனும்
மழையில்  எங்கோ
சிரித்த வண்ணம் அவசரமே இன்றி போகிறார்கள்
அருகில் ஒரு நாய்க்குட்டி
வாலைச் சுழற்றியபடியே
ஏறக்குறைய அவர்கள் கால்களுக்குள்
விழுந்து விழுந்து
எழுந்து ஓடுகிறது
பாய்லரிலிருந்து எழும்
தேநீர் புகை பரந்து
இன்னொரு நாய்க்குட்டி போல்
அவர்கள் பின்னால் போகிறது
எனக்கேனோ கடை தெருவில் இருந்து எழுந்து
இயேசுநாதர்கள் பின்னால் போகும்
சீடர் பரம்பரை அது நினைவுபடுத்துகிறது

தகப்பன் எப்பொழுதும் சிரித்தபடி தான் இருப்பார்
சிரிப்பல்ல
குருடர்களுக்கு உரிய முகத் தசை இழுப்பு
என்பார் மருத்துவ நண்பர்
ஆனால் இம்முறை அது சிரிப்பே தான் என்பதில்
எனக்கு கொஞ்சம் நிச்சயம் உண்டு
அது இல்லாவிட்டால்
நான் இந்த மழைக் காலத்திற்குள்
செத்துப் போய் விட மாட்டேனா?
(நெடுஞ்சாலையை மேயும் புள் : பக்.15)

நெகிழ்வான ஒரு காட்சி சித்திரமாகத் தொடங்கி விரியும் இக்கவிதையில், அந்த நெகிழ்ச்சி உணர்வை அவ்விதமாகவே வாசிப்பவர்களும் அடைய தடையாக குறுக்கிடுகிறது, ‘அது சிரிப்பல்ல குருடர்களுக்கு உரிய முக தசை இழுப்பு’ என்கிற ஒருவரி. அந்த குறுக்கீடு அல்லது கோணலிலிருந்து தான் இக்கவிதையின் கோணம் பிறிதொன்றாக துவங்குகிறது.
நிலையானது என நாம் நம்புகிற இந்த வாழ்க்கை விபத்தொன்றினாலோ, நோயினாலோ, நொடியில் கலைந்து போய் விட கூடிய சாத்தியங்கள் கொண்டது. அத்தகைய தருணங்கள், அவை தரும் பதற்றங்கள் அதன் காரணமாக உருவாகும் மனச்சோர்வு, அச்சமூட்டும் கற்பனைகளைச் சற்று அழுந்தவே விவரிப்பதால் உருவாவதே போகனின் மொழி. அமானுஷ்யம் என நாம் கருத சாத்தியம் உள்ள உணர்வுகள் போகனின் கவிதைகளில் யதார்த்தமாக விரிகிறது.

சற்றேப் பதம் மீறிக்
கடுத்துவிட்ட
வெந்நீரின் சுகந்தம் எழுப்பி
குளிரால் உறைந்த அறையை
இதமாய் அலம்புகிறது.
சதா கோபக்கார புருஷனால்
பீடிக்கப்பட்டு துக்கிக்கும்
பக்கத்து வீட்டுப் பெண்
அபூர்வமாய் விடுபட்டு
குளியலறையிலிருந்து
ஒரு மலையாளப் பாடலை பாடுகிறார்
நீண்ட நாள் காணாமல் போயிருந்த
வாலில் வானம் காட்டும் குருவி
சிணுங்கும் சாரலையும் மீறி
மீண்டும் வந்து
துணிக்கொடியில் அமர்ந்துகொண்டு
ஆடி பார்த்து கொண்டிருக்கிறது
ஒருவன்
தற்கொலை செய்யவிருக்கும் நாள்
இப்படி தொடங்கக் கூடாது
என்று நினைக்கிறான் அவன்
 (எரிவதும் அணைவதும் ஒன்றே : பக்.14)

படிக்கும் நமக்கும் கூட ஒரு நல்ல கவிதை இப்படி முடியக் கூடாது என்றுதான் தோன்றுகிறது. மேலெழுந்தவாரியான பார்வைக்கு உடலின் நோய்மையை, மனதின் பீதியை அவை உருவாக்கும் அவநம்பிக்கையை, திரும்பத் திரும்ப பேசுவதன் வழியாக வாழ்க்கையின் வியர்த்தத்தை, அதன் அபத்தத்தை, முன்வைப்பதாக தோன்றும் இவரது கவிதைகள் நேர்மாறாக அவற்றின் ஆழத்தில் வாழ்வின் அபூர்வத்தை, அரிதாகவேணும் அது நல்கும் ஆன்ம வெளிச்சத்தை அடிக்கோடிட்டு காட்டுபவனகவே அமைந்துள்ளன. பின்வரும் கவிதையை அதற்கு ஒரு உதாரணமாக சுட்டலாம்.

ஒலியில்லா
ஒரு கண்ணைச் செய்வது
ரொம்ப கஷ்டம்
என்பதை பரிணாமமும் உடல் கூறும் படித்தவர்கள் அறிவார்
கடவுள் ஒரு கண்ணைச் செய்ய
மில்லியன் வருடங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டான்
ஒளி தனியாகத் தன்னை அறியஇயலாது
என்று புரிந்துகொள்ள அவனுக்கு கொஞ்சம் தாமதமாயிற்று
ஆனாலும் இவர்கள் அதை செய்துகொண்டே இருக்கிறார்கள்
கடவுளைவிடவும் சீக்கிரமாக
கடவுளைவிடவும் நேர்த்தியாக
செய்த கண்ணை
பிறருக்கு கொடுப்பது
அதைவிட ரொம்பக் கஷ்டம்
ஆனாலும் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்
அந்தப் பக்கம் வருகிற ஒவ்வொருவருக்கும்
நீங்களோ மறுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்
காலில் போட்டு மிதிக்கி்றீர்கள்
போதாதென
முகத்தில் காறி வேறு துப்புகிறீர்கள்
எனினும்
துடைத்துவிட்டு மீண்டும்
தடவி தடவி அவர்கள்
வேறொரு கண்ணை செய்ய ஆரம்பிக்கிறார்கள்
(தடித்த கண்ணாடி அணிந்த பூனை : பக்.19)

கண்களால் நாம் சாதாரணமாகப் பார்த்து முடிந்தவைகளுக்கப்பால் ஒரு உண்மை மறைந்திருக்கிறது. உள்ளத்தால் மட்டுமே அறிய முடிய கூடிய அதை உணர செய்வது என்பதுவும் ஒரு நல்ல கவிதையின் தன்மை அவ்வகையில் இது போகனின் நல்ல கவிதைகள் ஒன்று.
சமகால உரைநடை எழுத்து மற்றும் சம்பிரதாய மான பேச்சு வழக்கிலிருந்து தனக்கான வெளிப்பாட்டு மொழியை உருவாக்கி கொண்டிருக்கும் போகன் தனது தர்க்கபோதம் மற்றும் காட்சிப் படிமங்கள் வாயிலாக தனது கவித்துவத்தை உருவாக்குகிறார். பரிச்சயமழிப்பு, முரண்தர்க்கம், எதிரிடை இணைவுகள் போன்றவை வெறும் உத்திகளாக தனித்து துருத்திக்கொண்டு தெரியாமல் விவரணை மொழியோடு வெகு இயல்பாக இயைந்து நிற்கின்றன. இதனால் உருவாகும் புத்துணர்ச்சியும் பிறிதொன்றில்லாதத் தன்மையும் இவர் கவிதைகளுக்கு தனி வசீகரத்தை தருகின்றன.
உடலின் தாபத்தை காமமென்றும் உள்ளத்தின் தவிப்பை காதலென்றும் பகுத்து எளிதாகப் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் எதார்த்தத்தில் இத்தகைய கார்டீசியப் பிளவு சாத்தியமாவதே இல்லை. ஒன்றின் ஓங்குதலில் மற்றொன்று ஒடுங்கிக் கிடக்கும் தருணங்கள் மாத்திரமே உண்டு. தன் கவிதைகளில் இன்னமும் சற்று நகர்ந்து சென்று, உடல் மீதான வேட்கையை வாழ்வின் மீதான பற்றுதலாக, மரணத்திற்கான எதிரிடையாக முன்நிறுத்துவதைக் காணமுடிகிறது.

வெட்டிக் கொல்ல வேண்டும்
அல்லது
ஒரு பெரிய ஆறுபோல
உன் தொடைகளில்
குருதி வழிய
மிக வலுவாக
உன்னைப்
புணர வேண்டும்
என்று தோன்றுகிறது
வேறு தருணங்களில்
செத்துப் போகவேண்டும்
அல்லது
ஒரு சிறிய சவரக் கத்தியால்
ஆணுறுப்பை அறுத்துக் கொள்ளவேண்டும்
என்று கூட
……
 (எரிவதும் அணைவதும் ஒன்றே : பக்.69)

ஆனையுரித்துத் தின்னும்
யாளிகள்
ஏன் எப்போதும்
குறிகள் விறைத்துக் கொண்டிருக்கும்
ஆண்களாகவே இருக்கின்றன
என்று
நேற்று
அந்தப் பழமை வாய்ந்த கோயிலுள்
வைத்துத் தோழி கேட்டாள்
கொல்வதில் நிறைய காமம்
உள்ளது
என்று
சொன்னதோடு அப்போது
நிறுத்திக் கொண்டேன்
…………’
 (எரிவதும் அணைவதும் ஒன்றே : பக்.96)

வாழ்க்கை மிக அருகில்
மரணத்தைப் போலவே இருக்கிறது
புனலூர்ச் சாலையில்
விலாவெலும்புகள் தென்னிய
அடிமாடுகள் வரிசை
சிறு குழந்தைகள் போல
குதித்தெழும் மார்புகள்
பற்றி கவலையுறாது
தலைவாரும் இளம்பெண்ணை
மவுனமாக கடந்து செல்கிறது’.
 (நெடுஞ்சாலையை மேயும் புள் : பக்.44)

இந்த எதிர்வும்கூட மேற்கத்திய உளவியல் முன்வைக்கும் பார்வையினின்றும் பிறப்பதுவே. நம் மரபு இம்முரணை ஒன்றை மற்றதின் நிரப்பியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ காண்பதன் வழி நேர்மறையாக இதை எதிர்கொள்கிறது எனத் தோன்றுகிறது. போகன் தனது வாசிப்புத்தேடலின் போக்கிலோ அல்லது ஆன்மிக நாட்டத்தின் ஒரு பகுதியாகவோ நம் மரபை சற்றுத் தேடி படித்திருக்கிறார். என்றபோதிலும் அவரது கவிதைகளில் அதன் தத்துவார்த்தமான சுவடுகளையோ, மொழிரீதியிலான பாதிப்புகளையோ அதிகம்  காணமுடிவதில்லை. ‘சிறுகை அளாவிய கூழ்’ என்று ஒருவரி மட்டுமே விதிவிலக்காக கண்ணில் பட்டது. இதை ஒரு விமர்சனமாக அல்ல அவதானிப்பாக மட்டுமே முன்வைக்க முடியும். ஏனெனில் எழுத்தில் எதைத் தேர்வது என்பது கவிஞனின் தனிப்பட்ட சுதந்திரம். தவிரவும் அத்தகைய சுதந்திரமும் கூட முழுவதுமாக அவன் வசமில்லை. அவனால் முழுமையாக நிர்வகிக்க முடியாத உள்ளுணர்வும், ஆழ்மனமும் கூட அத்தேர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இருக்கும் போது தந்தையை தவிர்க்கவும் விலக்கவும் செய்துவிட்டு, அவர் இல்லாமல் போன பிறகு தேடும் மகனின் தவிப்பு என்பது ஒரு ஆதாரமான உணர்வு. இளமை கழிந்து நடுவயதிற்குள் நுழைகையில் ஒவ்வொரு ஆணும் கடந்துவரவேண்டிய அடையாளச் சிக்கல் அது. காஃப்காவிற்கு பிறகு நவீனத்துவ இலக்கியத்தில் இந்தத் தத்தளிப்பிற்கு செவ்வியல் அந்தஸ்து கிடைத்துவிட்டது. நம் மரபில் தந்தை என்கிற அடையாளம் என்பது கடவுளரை நிகர்த்த ஒன்று. எனவே அதை எதிர்க்க முனைவது என்பது பாவகரமான காரியங்களில்  ஒன்றாகிவிடும். தமிழில் புதுமைப்பித்தன்தான் அந்தக் கணக்கை முதலில் துவங்கி வைக்கிறார் என நம்புகிறேன். சுகுமாரனின் கவிதை ஒன்றில் வரும் ‘கழுதைப்புலி’ என்கிற படிமம் அந்நாளில் தந்த அதிர்ச்சியும் அதிகம்தான். போகனின் கவிதைகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட தருணங்களில் அப்பாவைப்பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.

கொஞ்ச நாட்களாக
அப்பாவுடன் அதிகம்
பேசிக் கொண்டிருக்கிறேன்
அப்பா இறந்து வருடங்களா்யிற்று
மனைவி கவனித்து
மருத்துவரிடம் போகலாமா
என்கிறாள் கவலையுடன்
உயிரோடிருந்த போது
அப்பாவும் நானும்
ஒருவருடம் முழுக்க
ஒரேவீட்டில் இருந்து கொண்டு
பேசாமல் இருந்தோம்
இப்போது நானும்
என் மகனும்
இருப்பது போல...’
(எரிவதும் அணைவதும் ஒன்றே : பக்.51)

நேற்று திருவனந்தபுரம் ஜெனரல் ஆஸ்பத்திரியில்
இங்கே முடிவெட்டுகிற கடை
எங்கிருக்கிறது
என்று கேட்ட முதியவரை விட்டு
விரைந்து விலகி ஓடினான்
அப்பா கடைசியாய்
மரணப் படுக்கையில் விழும் முந்திய நாள்
எழுந்து போய்
முடிவெட்டிக் கொண்டார்
ஒரு சினிமா பார்த்தார்
என்ன சினிமா என்று பெயர் கேட்டபோது
மறந்து விட்டது என்றார்
அது ஒரு தெலுங்குசினிமா என்று
பிறகு அவன் கண்டுபிடித்தான்’
 (நெடுஞ்சாலையை மேயும் புள் : பக்48)

அப்பாவைப் போலவே இருந்த
மனிதருக்கு
பேருந்தில் இடம்தர மறுத்துவிட்டேன்’
 (நெடுஞ்சாலையை மேயும் புள் : பக்.44)

தந்தையைப் பற்றிய நினைவு அதன் நீட்சியின் ஒரு குற்றஉணர்வாகவும், நோய்த்தன்மையாகவும் மாறுவதோடல்லாமல் பிறகு அதுவே அடையாள மீட்சியாகவும், ஆறுதலாகவும் ஆகும் ஒரு பயணத்தை இவருடைய கவிதைகளிலி்ருந்து நாம் உருவகித்துக் கொள்ளமுடிகிறது.
நான் ஏன் நல்லக்கவிஞன் இல்லை என்பதற்கு நான் நல்லவன் இல்லை என்பதைத்தவிர வேறுகாரணம் சொல்லுங்கள்’ என்று கேட்கும் போகன் சங்கரின் கவிதைகளில் அழுத்தமாகத் தெரியும் ஒரு பண்பாக அதன் ‘சினிக்கல்’ தன்மையைக் குறிப்பிடலாம் அந்த ஆங்கிலச் சொல்லிற்க்கு எல்லாவற்றிலும் குறை காணக்கூடிய, இன்பட்டத்தை அவ்வளவாக விரும்பாத, நன்மையில் நம்பிக்கையில்லாத, சிடுசிடுப்புத்தன்மையுடைய என்றெல்லாம் அகராதி பொருள் சுட்டுகிறது. இக்குணங்கள் ஒருவரின் சொந்த வாழ்க்கையில் இருந்தால் அது குறையாகத் தோன்றக் கூடும். ஆனால் இலக்கியத்திலோ அது நிறையாகவே அர்த்தப்படும்.

மிக பரிசுத்தமான சுகந்தம் வீசும்
ஒரு பெண்ணை நேற்று சந்தி்த்தேன்
எல்லாப் பரிசுத்தத்திற்குப் பின்னாலும்
மிக நேர்த்தியான
ஒரு கழிநீர் வடிகால் அமைப்பு இருக்கிறது
என்றா்ள் அவள்’
 (தடித்த கண்ணாடி அணிந்த பூனை : பக்.50)

ஒரு மழைக்குப்பிறகு
ஒரு கூடலுக்குப்பிறகு
ஒரு கவிதைக்குப்பிறகு
சூழும் அமைதியின் பரிசுத்ததை
தாங்க முடியாமல்தான்
வெளியே வந்து
இந்த சேற்றைப்பூசிக் கொள்கிறேன்
(தடித்த கண்ணாடி அணிந்த பூனை : பக்.72)

 நமக்கு எப்போதும் வழங்கப்படும் எளிய சமாதானங்களுக்கும், ஒளி பொருந்திய உண்மைகளுக்கும், பின்னால் இருக்கும் நிம்மதியின்மைன்யை, நிழலை பார்க்கக் கூடிய கண் என்பது காட்சியைக் குறையாகவேக் காணும். அதனாலேயே பலசமயங்களில் நம் மனசாட்சியை தொந்தரவு செய்வதாகவும் அமையும். கலையின் அடிப்படையான பண்புகளில் ஒன்று அது.

புனைவியின் சாத்தியங்களையும், கதைக்கேயுரிய மனிதர்களின் முகங்களையும் கவிதையின் தருணங்களுக்குள்ளாக வரைந்து பார்ப்பதன் வழியாக, கவிதையின் வடிவ இறுக்கத்தை சற்றே கிழ்த்தவும் நீட்சி யடையச் செய்யவும் முயன்று பார்த்திருக்கிறார் போகன். அவ்வகையில் காட்சி அனுபவம் தரும் குறுங்கதைகளை போல விரியும் சில நீளமான கவிதைகள் அவருடைய தொகுப்புகளில் உண்டு.

அழுகிய வாதாம் பருப்பு வாசனை’ எனத் தொடங்கும் கவிதை
 (தடித்த கண்ணாடி அணிந்த பூனை : பக் 38-43)

‘1995’ என்ற தலைப்பிட்டகவிதை
 (தடித்த கண்ணாடி அணிந்த பூனை : பக் 86-87)

கிருஷ்ணன் தம்பி’ எனத் தொடங்கும் கவிதை
 (நெடுஞ்சாலையை மேயும் புள் : பக் 46-48)

அளவுகள்’ என்ற தலைப்பிட்டகவிதை
 (நெடுஞ்சாலையை மேயும் புள் : பக் 90-92)

கவிதையில் கதை சொல்லும்போது உருவாகும் சாதகபாதகங்களை இக்கவிதைகளை முன்னிறுத்தி நாம் யோசித்துப் பார்க்கலாம்.
கறாரான மொழிப்பிரக்யோ, சீரான காட்சித்றுதன்மையோ  கொண்டவை அல்ல போகனின் கவிதைகள். உள்ளடக்க ரீதியிலான உத்தேசமான பகுப்புகளுக்கும் கூட அடங்காமல் திமிறியும், வழிந்தும் நழுவுபவை அவை. காற்றின் போக்கிற்கு ஏற்ப பற்றி ஏறும் தீயைப் போல அந்தத் தருணத்து உணர்வெழுச்சிக்குத் தக மொழியில் தொற்றி நீளுபவையாகவே இவருடைய கவிதை வரிகள் அமைகின்றன.

நீங்கள் பிறந்ததிலிருந்து வாழும் வீட்டில்
நீங்கள் அறியாத
ஒரு அறையை
உங்கள் காதலி
கண்டுபிடிக்கிறாள்’
(நெடுஞ்சாலையை மேயும் புள் : பக்.57)

 ஒரு நல்ல கவிதை செய்வதும் அதுவே. நாம் பிறந்ததிலிருந்து உடனிருக்கும் மனதில் நாம் அதுகாறும் அறிந்திராத ஒரு அறையில் நம்மை விழிக்கச் செய்கிறது. புனைவின் சாயல்களை வாழ்வின் தருணங்களில் கூட்டிப் பார்க்கும்போது ஒரு மாய அழகு பிறக்கிறது. அது போகனின் கவிதைகளில் பல இடங்களிலும் மிளிர்கிறது.