அவள் தனது கைப்பையில் காதுகுடையும்
குச்சி ஒன்றினை வைத்திருப்பதைக் கண்டான். அவளுடைய காதுகளில் அவ்வவ்போது அரிப்பு உண்டாகும்.
அச்சமயங்களில் சுத்தம் செய்து கொள்ள வசதியாக இக்குச்சியை வைத்திருப்பதாக அவனிடம் கூறினாள்.
தனது காதுகளிலும் அடிக்கடி நமைச்சல் ஏற்படுகிறது,
அவற்றை அவளால் சுத்தப்படுத்தவியலுமா என வினவினான்.
அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த ஈடுபாடு
கொண்டிருந்தனர். ஏற்கெனவே பல காரியங்களைச் சேர்ந்து செய்திருக்கின்றனர் என்றாலும்,
ஒருவர் மற்றவர் காதுகளைச் சுத்தம் செய்தது கிடையாது.
உண்மையில் அவள் அந்தக் குச்சியை தன்னைத் தவிர்த்து
வேறு எவர் காதுகளிலும் பயன்படுத்தியது இல்லை. இன்னொருவர் காதை சுத்தம் செய்வது என்பது
– ஒரு தொழில் முறையிலான செயல் என்பதை ஒதுக்கிவிட்டு பார்த்தால் – மிகவும் அந்தரங்கமான
ஒன்று என்று அவள் எண்ணினாள். அவளைத் தவிர்த்து அவளது காதுகளை தூய்மை செய்த வேறு நபர்
என்று பார்த்தால் அது அவளுடைய தாய் மட்டுமே. இருவருக்கும் இடையிலான உறவில் நம்பிக்கையோ,
உணர்ச்சிவேகமோ குறைவுபட்டிருக்குமெனில் அவர்களால் ஒருவர் காதை மற்றவர் சுத்தம் செய்யவியலாது
என்றே அவளுக்குத் தோன்றியது.
“இப்போதேவா?” என்றவள் கூச்சத்துடன் சிரித்தாள்.
இம்முறை திறந்த, வெளிச்சம் நிறைந்த, மக்கள்
நடமாட்டம் கொண்ட பொதுஇடம் ஒன்றில் சந்தித்துக் கொள்ளலாம் என அவர்கள் முடிவு செய்தனர்.
இம்முடிவை அவள்தான் வற்புறுத்தி எடுக்கவைத்தாள். இந்ததடவை அவனது இடத்திற்கோ, அவளது
இடத்திற்கோ செல்வதைத் தான் விரும்பவில்லை என்று அவனிடம் கூறிவிட்டாள். அச்சமயத்தில்
அவர்களுடைய உறவு மிகவும் உணர்ச்சிகரமான கட்டத்தில் இருந்துவந்தது. அவர்கள் எப்போது
தனித்து விடப்பட்டாலும் அடுத்த நொடியே ஒருவர் மற்றவரது அணைப்புக்கு தாவிவிடுவார்கள்.
அதனால் அவர்களால் வேறெந்த வேலையையும் செய்ய முடியாது போனது.
பதிலுக்குப் புன்னகைத்தவன் அவளுடைய கைகளை எடுத்து
வைத்துக்கொண்டு அதை அழுந்தப்பற்றியவனாக அவளது கண்களைப் பார்த்தவாறே, மெதுவாகவும் சற்று
விஷமத்தனத்துடனும் சொன்னான். “ஆம் இப்போதே” அவன் அவளைச் சேர விரும்பும்போதெல்லாம் கூறும்
“நான் இதை உள்ளே வைக்கிறேன்” என்ற அதே தொனியில் இதையும் சொன்னான்.
இனம் புரியாத உணர்வுக்கு ஆட்பட்டவளாக அவள் வெட்கினாள். அடுத்த
மேசையிலிருந்த இரு பெண்கள் ஒருவனைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் மேசைகளுக்குக்கிடையே
மூன்று தப்படிகள்தான் இடைவெளி இருக்கும். எனவே அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்
தெளிவாகக் கேட்டது.
அவன் அவளுக்கு எதிரே அமர்ந்திருந்தான். அது
ஒரு சிறிய மேசை. அவனது தலையை வலதுபக்கம் மேலிருக்குமாறு மேசைமீது வைக்கும்படிச் சொன்னாள்.
அவனுடைய தலை மிகவும் பெரியது. ஏறக்குறைய மேசையில் பாதியை அடைத்துக்கொண்டது. அது அவளுடைய
பணியை எளிதாக்கியது. அவனது காது துளை முழுவதையும் அவளால் பார்க்கமுடிந்தது. அவனுடைய
காது நல்ல சதைப்பற்றுடனும் பெரியதாகத் திறந்தும் இருந்தது. நீங்கள் காதல்வயப்பட்டிருக்கும்
ஒருவரைப் பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்திருந்தாலும் அவர்களுடைய அந்தரங்கமான உறுப்புகளை
பார்த்திருந்தாலும் கூட, ஆச்சரியமளிக்கும் வகையில் நீங்கள் ஒருபோதும் அவர்களுடைய காதுகளை
கவனித்திருக்க மாட்டீர்கள் என்பது எத்துணை விநோதமானது? வெளிச்சம் மங்கலாகத் தெரிந்ததால்
எல்லாமே சற்று தெளிவின்றிக் காட்சியளித்தது. அவள் தான்செய்வது அவனுக்கு வலிக்கிறதா
எனக் கேட்டாள். “இல்லை” என்றான்.
அவள் வலதுகாதைச் சுத்தம் செய்து முடித்ததும்,
அவன் தலையை மறுபக்கமாக திருப்பி வைத்தான். அவள் அவனுடைய காதுகளை துடைத்துக் கொண்டிருக்கும்போது
எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எனவே, அவர்களால் பக்கத்து மேசையில் பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும்
கேட்கமுடிந்தது. ஒரு பெண்மணி மற்றவளிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் “இவ்வுலகில் என்னதான்
நடந்து கொண்டிருக்கிறது? முழுமனதாலும் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.” அவர்கள்
எவ்விதமான வெளிப்படையானக் காரணமுமின்றி சிக்கலுக்குள்ளாகி விட்ட ஒரு உறவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவள் அவனுடைய இடதுகாதை சுத்தப்படுத்துவதில் அதிககவனம் செலுத்துகையில், அவளுடைய கண்பார்வை
தெளிவற்றுக் குழம்பி அவளது கை வழுக்கியது. “ஓ” அவன் மெதுவாகக் குரல்எழுப்பினான். ஏதோ அந்த வலியும்கூட
காதலின் ஒரு பாவனைதான் என்பதுபோல. அய்யோவென்று திடுக்கிட்டவள் “மன்னியுங்கள்” என்றாள்.
காதின் உட்புறதசையில் இரத்தத்துளிகள் துளிர்த்திருந்தன. அதை அவனிடம் கூற அவள் துணியவில்லை.
பதிலாக “இனிமேல் இதை என்னால் செய்யமுடியாது” என்று மட்டுமே சொன்னாள்.
எழுந்து உட்கார்ந்தவன், தன் சுண்டுவிரலால் காதைச்
சுற்றிலும் தடவிப்பார்த்தான். அந்த உணர்ச்சியால் நிறைவடையாதவனைப்போல அவன் கண்கள் இடுங்கியது.
அவளைச் சற்றே கேலியாக நோக்கியவாறு சொன்னான் “இது அதை உள்ளிடுவது போன்ற ஒன்றுதான் இல்லையா?”
அதன்பிறகு அவர்கள் பிரிவதற்கு அதிகநாட்கள் ஆகவில்லை.
அவர்களுடைய உறவின் முறிவு மிகவும்கசப்பான காட்சியுடன் நடந்துமுடிந்தது. அவனைப் பற்றிய
வெறுப்பான உணர்வுகளிலிருந்தும் தன்னைக் குறித்த சுயபச்சாதாபத்திலிருந்தும் மீண்டுவர
அவளுக்கு வெகுகாலம் ஆயிற்று. அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற சேதி அவள் காதில் விழுந்தபோது
அவள் உணர்ச்சி எதையும் காட்டவில்லை. அசட்டையாகவே இருந்தாள். அவளுடைய வாழ்விற்கு முழுவதும்
தேவையற்றவனாக அவன் ஆகிப்போயிருந்தான்.
(குரங்கு வளர்க்கும் பெண் தொகுப்பிலிருந்து)