Monday, 2 September 2019

கல் அழியும், சொல் அழியாது


இன்று விடுமுறை என்பதாலும், சந்தித்து நீண்ட நாளாகி விட்டதே என்பதாலும் நண்பரொருவரை பார்த்துவிட்டு வரலாம் எனப் புறப்பட்டுச் சென்றேன்.  வீட்டின் முன் ஒரு கார் நின்றிருந்தது வாசலில் செருப்புகள் கலைந்து கிடந்தன.  உள்ளே போகலாமா, திரும்பி விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் போது நண்பரே வெளியில் வந்துவிட்டார் ’ஏன் இங்கயே நிக்கிறிங்க உள்ளே வாங்க’ என்று அழைத்துப் போனார்.  கூடத்தில் ஏற்கனவே நான்குபேர் அமர்ந்திருந்தனர் ஐந்தாவதாக எனக்குமொரு இருக்கை போடப்பட்டது.  வந்திருந்தவர்கள் அரிமா சங்கத்தினர். நண்பரும் அதில் உறுப்பினர், மாவட்ட அளவிலான பொறுப்பில் இருந்தார்.  நகரத்தில் ஒரு இரத்த வங்கி உருவாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அதற்கான திட்டவரைவின் படி ஒரு பெருந்தொகை திரட்ட வேண்டியிருந்தது அதன் பொருட்டு நன்கொடை வேண்டி யார்யாரை அணுகலாம் என ஒரு பட்டியல் தயாரிப்பது குறித்தே அவர்கள் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர் நண்பர் ஒரு பெயரை முன்வைத்தார்.  ’சாந்தமூர்த்தி சார்கிட்ட முதல்ல போகலாம் அவர் எவ்வளவு கொடுக்கிறார்ன்னு பார்த்துகிட்டு, பிறகு மத்தவங்ககிட்ட கேட்கலாம்’. யாருக்கும் அதில் மாற்றுக் கருத்து இருக்கவில்லை அவர் நகரத்தின் பிரமுகர்களில் நாயகமானவர் அல்லது அப்படித் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்புகிறவர் என்றும் சொல்லலாம் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதி, லாரி போக்குவரத்து, நூற்பாலை என பல தொழில்கள் அவருக்கு. உபயதாரர் நோட்டீஸ் அடித்து விநியோகிக்கும் தெருமுனை பிள்ளையார்க் கோவில்விழாவிலிருந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்று நடத்தும் அரசுவிழாவரைக்கும் நன்கொடை திரட்ட, முதலில் அவர் வீட்டுப்படிதான் ஏறுவார்கள். மேடையில் தொடர்ந்தாற்போல மூன்று நிமிடத்திற்கு மேல் பேசமாட்டார் என்றாலும், நகரில் நடக்கும் விழாக்களில் பாதிக்கும் மேல் அவர்தான் தலைமை, முன்னிலை, வாழ்த்துரை.  ’கொஞ்சம் விளம்பரப் பிரியரோ’ என்று நண்பரைக் கேட்டேன். ’அப்படியும் சொல்ல முடியாது இவரைக் காட்டிலும் பணக்காரர்கள் நாலைந்துபேர் இதே ஊரில் இருக்கிறார்கள்.  அவர்கள் யாருக்கும் இவரைப் போல கொடுக்கிற மனசு இல்லை’ என்றார்.

ஆறுமாதம் கழித்து நடந்த அந்த இரத்த வங்கித் திறப்பு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெரியவர் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.  பிறகு நடந்த பிரத்தேயக விருந்தில் பெரியவருக்குப் பக்கத்தில் நண்பரும் அடுத்ததாக நானும் அமர்ந்திருந்தோம் ’ஐயா, நானும் இந்த ஊருக்கு வந்த நாளா நல்லதுகெட்டதுக்குன்னு நன்கொடை புத்தகத்தை தூக்கிகிட்டு அலைஞ்சிருக்கேன் உங்க தயவும் தாராளமும் யாருகிட்டயும் இல்லிங்க’ நண்பர் சொன்னதைக் கேட்டு பெரியவர் தன்மையாகச் சிரித்தார் ’தம்பி நான் பொறக்கப்போ இந்த வசதியோட பொறக்கல போறப்போ இதுலிருந்து ஒத்த ரூபாயக்கூட எடுத்துக்கிட்டும் போகப் போறதில்ல. உங்களை மாதிரி நாலுபேர் சேர்ந்து ஒரு நல்ல காரியம் செய்யும் போது ஏதோ நம்மால் முடிந்தது' என்று அமரிக்கையாக சொல்லவும் நண்பர் வெகுவாக நெகிழ்ந்துபோனார். அவர் விடைபெற்று கிளம்பும் வரை கூடவே இருந்த நண்பர், கார் வரையிலும் உடன் சென்றார். கதவைத் திறந்து காரில் ஏறப்போனவர், ஏதோ எண்ணியவராக நின்றார். நண்பரின் தோள் மீது கைவைத்தப்படி கேட்டார்,

’தம்பி ? சின்ன வயசுல நீங்க தெருவுல நடந்துபோனா உங்களைத் தெரிஞ்சவங்க என்ன அடையாளம் சொல்லி கூப்பிடுவாங்க?’

’எங்க அப்பா பஞ்சாயத்து யூனியன்ல வேலை பார்த்தாருங்க ஐயா! அதனால் ஒவர்சீயர் பையன்னு சொல்லுவாங்க’

’என்னை எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா?’

நண்பர் பதிலேதுவும் சொல்லாமல் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்

’சாராயக்காரர் பேரன்’

’எங்க தாத்தா எப்பவோ தனக்கு வேணுமின்னு காச்சினதை, குடிச்சது போக தெரிஞ்சவங்களுக்கும், உறவுக்காரங்களுக்கும் கொடுத்திருக்காரர். வேண்டாதவங்க யாரோ மொட்டக் கடுதாசி போட்டு, கோர்ட் கேஸ் வரைக்கும் போயி போலீஸ் ரெக்கார்டுல பேராயிடுச்சி’

சட்டை பையிலிருந்து கண்ணாடியைத் துடைத்து அணிந்து கொண்டவர் ஒரு நிமிடம் போல மௌனமாக இருந்து விட்டு தொடர்ந்தார்.  அதனால எங்கப்பாவுக்கு ரொம்ப நாள் கல்யாணம் தடங்கலாகிப் போய் கடைசியாதான் எங்கம்மாவைக் கட்டிக்கிட்டார் அந்த அவப்பேர் எங்கப்பா காலம் போயி என் காலத்துக்கும் விடாமத் தொடர்ந்து வந்துச்சு இவ்வளவு பெரிய ஆளாகி மாலை மரியாதைன்னு நான் சபையில் தலைநிமிந்து நிற்கும் போது, கூட்டத்துல மூலையிலிருந்து ஒருத்தன் பார்ப்பான், பார்வையில முள்ளோட ’உங்க தாத்தனை எனக்குத் தெரியாதான்னு?. அவன் கண்ணு கேட்கும், சிரிப்பு கேட்கும், கும்பிட்ட கை கேட்கும்.  என் தலை தானாத் தொங்கிப் போகும்.  அப்படி ஒரு நாள் குனிஞ்சு நின்னப்போ முடிவு பண்ணினேன்.  இந்த முள்ளு என் பசங்களையோ, பேரப் பிள்ளைகளையோ குத்திக் கிழிக்க விடக்கூடாதுன்னு அன்னையிலிருந்து எம் பேரை மாத்தி எழுதனனும்னு ஒரு வெறி. முன்னூறு ரூபாய்க்கு அடிக்கிற துண்டு நோட்டீஸ்ல இருந்து மூணு    லட்சம் பேரு படிக்கிற பத்திரிக்கை வரைக்கும் எல்லா இடத்திலயும் என் பேர் வரணும்ன்னு திட்டம் போட்டு வேலை செஞ்சேன் பள்ளிக்கூடம், விளையாட்டுப் போட்டி, கோவில் கும்பாபிஷேகம், அரசாங்க கமிட்டி எல்லாத்துலயும் உறுப்பினரா சேர்ந்தேன். பணம் செலவழிச்சேன், பதவி வாங்கினேன். இன்னிக்கு இந்த ஊர்ல குறைஞ்சது ஒரு ஆயிரம் கல்வெட்டிலயாவது என் பேர் இருக்கும்’ பெருமை பொங்க சிரித்தவரை நண்பரின் அருகில் நின்றவாறு வியப்புடன் நோக்கினேன்.

’என் பாட்டன் பெயரை  இந்த ஊரோட ஞாபகத்துலர்ந்து அழிச்சி, என் பெயரை காலத்துக்கும் கல்லுல நிறுத்திட்டேன்னுதான் நினைக்கிறேன்’ ஏறி உட்கார்ந்தவர் கையசைக்க வண்டி நகர்ந்தது. வெகுநேரம் வரைக்கும் அவருடைய சொற்களை நான் நினைவில் அசைப் போட்டபடியிருந்தேன்.  நம்மில் மிகப்பலரும் நமக்கு வாய்த்த வாழ்க்கையை, நமக்குத் தோன்றியபடியோ அல்லது வாய்ந்தபடியோ வாழ்ந்து முடிக்கிறோம்.  வெகு சிலர்தான் வரலாறு தம்மை எவ்விதமாக நினைவு வைத்திருக்க வேண்டும் என்று கவனத்தோடு தங்களுடைய வாழ்வை நேர்கொள்கிறார்கள். அவர்கள் தம் உடல் அழிந்தபிறகும் உலகில் தமது பெயர் நிலைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.  தங்களுடைய இந்த சிறிய வாழ்க்கையினூடாக, பல பெரிய காரியங்களை செய்து முடிக்க வேண்டும் என்று முயல்கிறார்கள். தமக்கான திசையைத் தெரிவு செய்து நடக்கும் அவர்கள், அதன் வழியாக தம் விதியை தாமே எழுதிக் கொண்டுவிடமுடியும் எனவும் நம்புகிறார்கள்.  அந்த நம்பிக்கைகள் பலவற்றையும் அடித்துக் கொண்டோடும் காலவெள்ளத்திற்குத் தப்பி வரலாற்றில் பிழைத்திருப்பவை இற்சில பெயர்களே.  அதில் ஒரு பெயராக சங்க இலக்கியத்தில் காணப்படுவது தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்கிற நீளமான பெயர். சிறுவனான பாண்டியன் நெடுஞ்செழியன் தனது அரசை அபகரிக்கும் நோக்கோடு குறுநில மன்னர்கள் சிலரோடு சேர்ந்து தன்னை தாக்கவரும் சேர, சோழ அரசர்களை எதிர்நின்று வெல்லாவிடில் எனக்கு இவையெல்லாம் நேரட்டும் என வெஞ்சினம் உரைப்பதாக அமைந்தது பின்வரும் புறநானூற்றுப் பாடல்

நதேகக் கனரே நாடுமீக் கூறுநர்
இளையன் இவன்னெ உடையக் கூறி
புடுமணி இரட்டும் பாவடிப் பணைத்தான்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
புடையமை மறவரும் உடையம் யாம் என்று

உறுகுப்பு அஞ்சாது உடல் சினங் செருக்கிக்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருங்சமம் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய
என்னிழல் வாழ்நர் செல்நிழல் காணாது

கோடியன் எம்  இறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழித் துhற்றும் கோலேன் ஆகே
ஒங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைகிய பார்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாதுவரைகஎன் நிலவரை
புரப்போர் புன்கண்கூர
இரப்போர்க்கு ஈயா இன்மையான் வரவே

பாடல் எண் .  72
பாடியவர்  .  தலையாலங்கானத்து செருவென்ற
                 பாண்டியன்  நெடுஞ்செழியன்

திணை  .  காஞ்சி
துறை . வஞ்சினக் காஞ்சி

இப்போரில் நான் தோற்றால் இத்தகைய பழிகளெல்லாம் எனக்கு வந்து சேரட்டும் எனப் பாண்டியன் ஒரு பட்டியலிடுகிறான் இப்பாடலில் அதன் முடிவாக அமைவது, மாங்குடிமருதனைத் தலைவராகக் கொண்ட புலவர்கள் என் நாட்டினைப் பற்றி பாடாது போகட்டும் என்கிற வரி. ஒரு அரசனின் கொடைகளும், வெற்றிகளாலும் அவனது கீர்த்தி எழுகிறது. ஆனால் ஒரு புலவன் பாடுவதாலேயே அது நிலைக்கிறது.  ஒரு செய்தியாகப் பின்வரும் தலைமுறைகளுக்கும் சென்று சேர்கிறது.  அதனாலேயே வாளுக்கும், வில்லுக்கும் அஞ்சாத அரசர்களும் கூட புலவனின் சொல்லுக்கு அஞ்சினர்.  ஒரு அரசனாக மாத்திரமன்றி ஒரு புலவனாகவும் இருந்ததால் தானோ என்னவோ சொல்லின் நீடித்த இருப்பு குறித்து நெடுஞ்செழியனால் உணரமுடிந்தது போலும்.

*

அன்று பேருந்துநிலையத்திற்கு வழக்கத்தைவிட முன்னதாகவே வந்துவிட்டேன்.  நான் செல்ல வேண்டிய பேருந்து வருவதற்கு இன்னும் நேரமிருந்ததால், சுற்றிலும் பார்வையை ஒடவிட்டேன்.  வழக்கமான பரபரப்பும், இரைச்சலும் சற்றே மட்டுப்பட்டிருப்பதை  கவனிக்க முடிந்தது.  கடைகளின் வரிசை முடிந்து, குடிநீர் தொட்டி மறித்து நிற்கும் கிழக்கு மூலையில் ஒரு போலீஸ் ஜீப் நின்றிருந்தது ஒரு அதிகாரியும், நான்கைந்து காவலர்களும் நின்றிருந்தனர்.  கையில் நீண்ட கழியுடன், பேருந்திற்கு காத்து நிற்பவர்களை உற்றுப் பார்த்தபடி இருந்தார்கள். சற்று தள்ளிப் பேருந்துகள் வெளியே செல்லும் பிரதான வாயிலருகே ஒதுங்கினாற்போல ஒரு வெள்ளை வேன் நின்றிருந்தது.  அதன் ஜன்னல்கள் கம்பிவலையிடப்பட்டிருக்க, காவல் என்ற எழுத்துக்கள் சிவப்புநிறத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது.  அசாதாரணமான ஏதோ ஒன்று நிகழவிருப்பதான அனுமானம் கூட்டத்தினருக்கு மேலிட்டிருக்க, காவலர்களுக்கு பின்புறமாக வெகுவாக தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.  காவலதிகாரி மணிக்கட்டை திருப்பி தன் கடிகாரத்தில்  நேரம் பார்த்தவர், தொப்பியை கழற்றி வியர்த்த தலையைத் துடைத்துக் கொண்டார்.  காவலர்கள் அவர் ஏதேனும் சொல்லக்கூடும் என்பதாக அவர் முகத்தையே நோக்கியவாறு அசிரத்தையாக நின்றிருந்தனர்.  அப்போது நான் நின்றிருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இடதுபுறம் திடீரென ஒரு சலசலப்பு எழுந்தது.  பேருந்து ஒன்றின் பின்புறமிருந்து சட்டென்று வெளிப்பட்ட ஐந்தாறுபேர் தம் கையில் சுருட்டிபிடித்திருந்த நாளிதழ்களை தரையில் வீசி எறியவும், அவர்களில் ஒருவன் அதில் ஒரு தீக்குச்சியை உரசி எரிந்தான்.  நொடியில் பற்றிய தீ திகுதிகுவென எரிய, இன்னொருவன் மேலும்சில கற்றை நாளிதழ்களை அத்தீயில் வீசும் முன், சுதாரித்து கொண்டு ஒடிவந்த காவலர்களில் ஒருவர் அதைப்பிடுங்கிக் கொண்டார்.  இன்னொரு காவலர் பக்கத்திலிருந்த டீக்கடையிலிருந்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து எரியும் தீயில் ஊற்றி அணைத்தார். இவையெல்லாம் ஒரிரு நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது பிறகு அக்குழுவினர் மீதமிருந்த நாளிதழ்களை வீசிவிட்டு கையை உயர்த்தி கோஷமிட்டனர் முன்தினம் அந்நாளிதழ் வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை முன்னிட்டே இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது என்பதை அவர்களுடைய  அந்த முழக்கங்களிலிருந்து  புரிந்து கொண்டேன் காவலர்கள் அவர்களை நடத்திச் சென்று வரிசையாக வேனில் ஏற்றினர்.  வேன் புறப்படும் வரையிலும் ஜன்னல் பக்கமிருந்து அவர்கள் முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் காலை அலுவலகத்தில் அந்நாளிதழை எடுத்துப் புரட்டினேன் முதல் பக்கத்திலேயே வலது ஓரத்தில் அந்நிகழ்வைக் குறித்து ’வன்முறைக் கும்பல் வெறியாட்டம் போலீஸ் மெத்தனம்’ என்று இரண்டு பத்தி செய்தி கட்டம் கட்டி வந்திருந்தது அன்றாட அரசியல் நிகழ்வுகளை கூட சாதிய மேலாண்மை நோக்குடன் திரித்து நோக்கி, குயுக்தியாக செய்திகளை வெளியிடுவதையே வாடிக்கையாகக் கொண்டது அந்நாளிதழ் வாசகர் கடிதம் என்ற போர்வையில், வெவ்வேறுப் போலிப் பெயர்களில் தன் சார்புக் கருத்துகளை பிரசுத்து மகிழ்வதும் அதன் வழக்கம்.  எனவே தீவிரமான மொழி, இன, சித்தாந்தப் பற்றுக்கொண்ட சில சிறுகுழுக்கள் அந்நாளிதழுக்கு எதிராக இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் அவ்வப்போது ஈடுபடுவது உண்டு. அரசிற்கோ, பெருநிறுவனங்களுக்கோ தமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக நிகழ்த்தப்படும் இதுபோன்ற மக்கள் திரள் ஆர்பாட்டங்கள் ஜனநாயகத்திற்கு வலு சேர்ப்பவை.  அவை பெரிய அளவில் வெற்றி பெறாது போனாலும் கூட, குறியீட்டு அளவில் முக்கியமானவையாக கருதப்படும்.  அதே சமயம் ஆளும் கட்சியோ அல்லது ஏதேனும் பெரு நிறுவனங்களோ தமது அதிகாரம் அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி மக்களின் கருத்து வெளியீட்டு உரிமையை தடுக்க முயற்சித்தால் அது ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறையாகவே நோக்கப்படும்.  ஒரு நிலப்பரப்பை, மக்கள் ஒட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கம் ஆட்சி செய்கிறது என்பதால் மட்டுமே அது ஜனநாயக நாடாகிவிடாது.  அங்கு எல்லாவிதமான கருத்து வெளியீட்டிற்கும் வழிவகைகள் இருந்தால் மட்டுமே அந்நாட்டில் மெய்யாகவே ஜனநாயகம் நிலவுவதாகக் கொள்ளமுடியும்.  கருத்துச் சுதந்திரம் என்பது நாம் விரும்பும் கருத்தை வெளியிடுவதற்கான உரிமை மட்டுமில்ல, நாம் வெறுக்கும் கருத்தை எதிர்கொள்வதற்கான சகிப்புத் தன்மையையும் உள்ளடக்கியதே ஆகும்.  கலிலியோ தொடங்கி அசாஞ்சே வரையிலும் தமது கருத்து வெளியீட்டிற்காக அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி அவதியுற்றவர்கள் பட்டியல் வெகு நீளமானது.

எல்லா அதிகாரமையமும், தனக்கு எதிரான கருத்தாக்கங்களை அடுக்குமுறை மூலமாகவே எதிர்கொள்ள முயலுகின்றன.  இதில் முடியாட்சி, மக்களாட்சி, சர்வாதிகார ஆட்சி, மதசார்பு ஆட்சி, மதசார்பற்ற ஆட்சி, ஏகாதிபத்திய ஆட்சி, கம்யூனிச ஆட்சி என்ற வேறுபாடு எதுவும் கிடையாது.  உண்மையில், எந்த அரசும் தமக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்கள், அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து மிகையாக அலட்டிக் கொள்வதில்லை. மாறாக தம் மக்களின் மூளையில் எளிதாகத் தொற்றிப் பரவும் கருத்தாக்கங்கள் குறித்தே பெரிதும் அஞ்சுகின்றன. அவை மருந்திற்கு கட்டுப்படாத, நுண்ணுயிரிகள் போன்றன. ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, இலட்சம் கோடியென பல்கிப் பெருகுபவை. அவை பயணிக்கும் திசையையும், வேகத்தையும் ஒற்றறிந்து தடுப்பது எந்த படையினருக்கும் அசாதாரணமான காரியம்.  ஆகவேதான், எல்லா காலத்திலும் ஆளுபவர்கள் ஏதோதோ காரணங்களை முன்னிட்டு, அச்சிடப்பட்ட புத்தகங்களை கண்டு அஞ்சி அவற்றை தடை செய்து வந்துள்ளனர். உண்மையான ஆயுதங்கள், ஏவுகணைகளோ, வெடிகுண்டுகளோ, துப்பாக்கிகளோ அல்ல புத்தகங்கள்தான். சக்கரங்கள் கண்டுபிடிப்பப்பட்டதற்கு சற்றும் குறையாத புரட்சிகரமான கண்டுபிடிப்பு அச்சுக்கலை.

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, பிரபல மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவத்தை வாசித்தேன்.  சுகுமாரன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருந்தார். அதில் உலகம் முழுவதிலும் பல்வேறு காலங்களிலும், மொழிகளிலும் தடைசெய்யப்பட்ட, எரியூட்டப்பட்ட புத்தகங்களின் நீண்ட வரிசையை அவற்றின் வரலாற்றுப் பின்புலத்தோடு விளக்கியிருந்தார்.  தனிமனிதர்களுக்கு கேளிக்கை இன்பம் நல்குவதற்காக உருவாக்கப்படும் பொழுது போக்கு சாதனமாகிய ஒரு நூல், எவ்வாறு மாற்றத்தை விளைவிக்கும் அரசியல் செயல்பாடாக மாற்றமடையக் கூடும் என்பதை அவ்வுரையில் சச்சிதானந்தன் தெளிவுபடக் கூறுகிறார்.  அழித்தொழிக்க எத்தனிக்கப்பட்ட புத்தகங்களின் நெடிய வரிசையொன்றை வரலாற்றின் தொல்பழங்காலம் தொட்டு எடுத்து முன்வைக்கும் சச்சிதானந்தனின் கண்களில், மிகச் சமீபத்தில், சில பத்தாண்டுகளுக்கு முன்னாக எரியூட்டப்பட்ட யாழ்நூலகச் சம்பவம் ஏன் தென்படவில்லை? என்பதாக, அக்கட்டுரையின் இறுதியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஒரு குறிப்பை எழுதியிருந்தார் சுகுமாரன். அதை சச்சிதானந்தனின் கவனக்குறைவு என்று குறையிரப்பதை விடவும், அச்சம்பவத்தை ஒரு வரலாற்றுக் குற்றமாக, கலாச்சார அழித்தொழிப்பாக உலகத்தின் மனசாட்சி முன் நிலைநிறுத்த முடியாமல் போன நம்  இயலாமையை நொந்து கொள்வதே சாலவும் பொருந்தும்.  ஏறத்தாழ இலட்சத்திற்குமதிகமான புத்தகங்கள் அப்போது எரியூட்டப்பட்டது.  எரிந்தது வெறும் காகிதங்களும், மிஞ்சியது கரும் சாம்பலும் மட்டுமில்லை, ஒரு கலாச்சாரத்தின் நினைவுச் சேகரம் முழுவதையும் வெந்தணலில் இட்டு அழித்த கொடூரம் அது.   மொழிப் பற்றும், இனஉணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனின் நினைவிலும் ஒரு கொடுங்கனவாய் பதிந்து போன துயர நிகழ்வு அது.  ஒரு மனிதத் தொகையின் நினைவினின்றும் அதன் பண்பாட்டு, கலாச்சாரப் பதிவுகளை அழித்து விடுவதன் வாயிலாக, அவர்களை வெறும் எண்ணிக்கைகளாக மாற்றிவிட முடியும்.  பிறகு அவர்களை வெகு எளிதாக வேறு எந்த தொகையுடனும் கூட்டவோ, கழிக்கவோ செய்யலாம்.  பெரு வணிக நிறுவனங்களும் பன்னாட்டு நிதியங்களும் உலகளாவிய அவற்றின் வலை பின்னல்களும் அந்நிலையை நோக்கியே நம்மை நகர்ந்ததுகின்றன.  இதற்கு மாறாக மொழி தனது நினைவுச் சேகரங்கள் வழியாக நம்மை தொடர்ந்து பண்பாட்டுடனும், வரலாற்றுடனும் பிணைத்து வைக்க முயலுகிறது.  அவ்வகையில், யாழ்நூலக எரிப்புச் சம்பவத்தை மையமாகக் கொண்டு சு.வில்வரத்தினம் எழுதிய கவிதை, மிக முக்கியமானதொரு பண்பாட்டு ஆவணமும் ஆகும்.

தன் தகுதிக்குரிய இடத்தையும், புகழையும் பெறாமலேயே மறைந்து போன துரதிர்ஷ்டசாலியான தமிழ் எழுத்தாளர்களில் வில்வரத்தினமும் ஒருவர்.  சில வருடங்களுக்கு முன்னர் விடியல் பதிப்பகம் வெளியிட்ட அவரது மொத்த கவிதை தொகுப்பை தவிர, அவருடைய பிற நூல்கள் எதுவும் இப்போது அச்சில் இருப்பதாகத் தெரியவில்லை. இக்கவிதையின் தனிச்சிறப்பு இதில் தொனிக்கும் உணர்ச்சித் தீவிரம்தான் காய்ந்த சருகில் பற்றும் தீ போல இக்கவிதையில் சொற்களை உண்டு செறித்து மேலெழும் உணர்வைக் காணலாம்

சங்கப் பலகையிலே
சரிக்கட்டி வைத்த தொட்டில்
தொட்டிலிலே கண் வளர்ந்திருந்தவை
குழலும்தான், யாழும்தான், முழவும்தான்,
மனித முயல்வின் திறன் முழுதும்தான்.
தொட்டிலுக்குக் காவலாய்
ஆயகலைகளின் தாய்
மடியிலே மழலையென வீணை
வீணையை மெலிதாய் மீட்டியதென்ன
மேவும் மாலைப் பொழுதும் சாய
பிறை வெண் குருத்தைச் சப்பியபடி
பிளிறியெழும் கரிய இருள்
இருளின் அடர்வு
ஊதுபத்தி அவியும் சுடரின்
புகை, குமைச்சல்,
துர்வாடையின் அடைவு
துட்டாத்மாக்களின் அடைவு
துட்டாத்மாக்களினதேதான்
உள்ளக் கமலங்களை ஒங்கி மிதித்தபடி
கொள்ளிக் கண் பரிகலங்கள்
கலை வளரும் தொட்டிலுக்குத்
தீ மூட்டிவிட்டு
கோட்டையின் கபாடங்களுக்குள் மறைந்துகொள்ள
தீ மூண்டெரிக்கிறது.

எரிகின்ற தீயிடை குழலும்தான், யாழும்தான்
முழவும் தான், மனித முயல்வின்
திறன் முழுதும்தான்
பிள்ளைத் தமிழின் பிடிசாம்பரள்ளிப் போய்
மாவலியில் கரைப்பமென
வாடி போட்டிருந்தவரின் வஞ்ச மனத்தகத்தே
போலும் தீ மூண்டெரிகிறது
தீயின் வீச்சம் திசைகளைச் சுட்டது
வீசு மீட்டியிருந்த தாயின்
நாத மணித்தளிர் விரல்களைச்
சுட்ட போதங்கு
மாசில் வீணை நரம்புகள் கேவின,
குழலும் குழல்வழிப் பல்லியமும் தேம்பின,
முழவின் ஏங்கின மனிதமுயல்வின் திறனெலாம்
தாயவள்,
தமிழ்தம் உணத் தந்த கலைத்தெய்வதம்,
பூண்டிருந்த வெள்ளைப் பணியெல்லாம் புகைபடர
ஆய கலைகளெல்லாம் அவனைச் சூழ நின்று
பாலுக் கிரந்தழுத பரிபாடலை நான்
எப்படிப் பாடுவேன்?
பாடத்தான் வேண்டும் ?
காற்றிலேறி, கனைகடலை, நெருப்பாற்றை
மலைமுகடுகளைக் கடந்து
செல் எனச் செல்லுமோர் பாடலை
கபாடபுரங்களை காவுகொண்ட பின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்
உரமெல்லாம் சேரப் பாடத்தான் வேண்டும்
ஏடு தொடங்கி வைத்து என்னம்மை
மண்ணிலே தீட்டித் தீட்டி எழுதுவித்த
விரல் முனையைத் தீயிலே தோய்த்து
திசைகளின் சுவரெலாம் எழுதத்தான் வேண்டும்
எழுகின்ற யுகத்தினோர் பாடலை.

தமிழ் புதுக்கவிதைகளின் செம்பாகமும் வேரற்ற நீர்த் தாவரம் போன்றவை.  தம் மொழியின் சாரத்தை உள் வாங்கிப் பூக்கும் தெம்பற்று அந்நிய தத்துவம், அரைகுறை கோட்பாடு என அங்குமிங்குமாய் அல்லாடிக் கொண்டிருப்பனவே அவற்றுள்ளும் மிகுதி.  வில்வரத்தினத்தினத்தின் கவிதைகள் இத்தன்மைக்கு நேரெதிராக அமைந்தவை.  அவருடைய சிறிய கவிதை ஒன்றின் எளியவரிகூட ஒரு தொன்மையான மரபின் வாரிசு அவர் என்பதை அழுத்தமாக நினைவுறுத்தும்.  இக்கவிதையை எனக்குப் பரிந்துரைத்த நண்பர் ’தமிழ்தம் உணத் தந்த கலைத் தெய்வதம்’ என்று ஒருவரால் எழுத முடிந்திருக்கிறதே இதற்குமேல் வேறென்ன வேண்டியிருக்கிறது என உருகிப் போய் கேட்டார்.  தமிழ், அமுதம் என்ற இரு சொற்களும் முழங்கி ’தமிழ்தம்' என ஆட்சி பெறுகையில் மேலெழும் உணர்வெழுச்சியே நண்பரின் தழுதழுப்பிற்கு காரணமாயிருந்தது. மரபுச்செழுமை, வரலாற்றுப் பெருமிதம், அறச்சீற்றம், ஆற்றாமை கண்ணீர், கழிவிரக்கம், உளக்கொதிப்பு, உத்வேகம் என மாறி மாறி மேலிடும் உணர்வுகளால் வரையப்பட்ட இக்கவிதையை வாசித்து முடிக்கையில், சொல் ஏதுமற்று மயானம் கலையும் உறவின் துயரமாய் நம் நெஞ்சைக் கவ்வும் வேதனையை உணர்கிறோம்.

 வரலாற்றினை ஊன்றிக் கற்பவர்கள் அதன் ஒரு அம்சத்தை, அதனுடைய மீள நிகழும் தன்மையைக் கவனிக்கத் தவறமாட்டார்கள்.  ஏறக்குறைய ஒரே தன்மையிலான நிகழ்வுகள், வெவ்வேறு காலங்களில், வேறுவேறு இடங்களில், வேறு பல கதாப்பாத்திரங்களோடு திரும்ப திரும்ப நிகழ்ந்திருப்பதை ஒருவர் அவதானிக்க முடியும்.  இங்கு பாண்டியன் நெடுஞ்செழியனின் சொற்களிலும், வில்வரத்தினத்தினுடைய வரிகளிலும் வெளிப்படுவது ஒரே வகையிலான உணர்வுதான்.  வலியோரின் சூழ்ச்சிக்கும், அடக்குமுறைக்கும், அநீதிக்கும் எதிராக நிற்க நேரிடுகையில் எளியபொருவனிடத்தே எழும் கொதிப்பும், ஆற்றாமையும், வெஞ்சினமும் தான் இவ்வற்றுள் தொனிக்கிறது.  கட்டுவித்த சில கோவில்களையும் வெட்டுவித்த சில ஏரிகளையும் தவிர, சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எச்சமென்று இன்று எதுவும் மிஞ்சியிருக்கவில்லை.  ஈழத்தில் எரிக்கப்பட்ட புத்தகங்களுக்கு பதிலாக இன்று வரையிலும் ஏழாயிரம் பக்கங்கள் எழுதிச் சேர்க்கப்பட்டுவிட்டன.  காலம் கழிகிறது.  கல் அழிகிறது.  மொழியின் நினைவில் சொல் மாத்திரம் நின்று எரிகிறது. 

நன்றி
தக்கை, கபாடபுரம்