எவ்வளவுதான் நீவினாலும்
சரி செய்ய முடியாத
பழந்துணியின்
சுருக்கங்களைப் போல
வருத்தங்களால்
சோர்ந்துவிட்ட வுன்
மனதை மாற்ற
வழி அறியாது
குழம்பி நின்றவன்
உரையாடலின் நடுவே
அபத்தமாக எதுவோ
சொல்லி வைத்தேன்
நிழல்கள் கலைய
சட்டென்று வெளிச்சமான
முகத்துடன்
கண்களை தழைத்தபடி
சிரிக்கத் தொடங்கினாய்
நிமிடத்திற்கும் மேலாக
நீடித்த சிரிப்பில்
புரையேற உன்
விழியோரத்தில் திரண்டது
ஒருதுளி நீர்
தொட்டு அதைத்
துடைக்க முடியாத தவிப்பில்
எனக்குள் அப்போது
வெட்டுண்டு தவித்தது
ஒரு கை
உதிர்ந்தும் உலராத
அந்த வொரு
துளியால்
தளும்பிக் கொண்டிருக்கிறது
இப்போதுமென் கடல்
வளர்ப்பு மிருகம்
பால் குடிப்பதற்காகவோ
எலிகளைப் பிடிப்பதற்காகவோ
அல்ல, கடவுள்
பூனைகளைப் படைத்தது
இதந்தரு
மடியிலிருந்தபடி
ஐ விரல் தொடுகைக்கு
பட்டின் மென்மையை
உணரத்தரும்
சருமத்தின்
மிருதுவினின்றும்
மீளவியலாது
கை ஆழப்புதைகையில்
மெல்லக் கனவிலாழும்
பெண்களின் கண்களில்
மினுங்கும்
அந்தப் பொன்னொளிர் திட்டுகள்
ஆடவர் நாம்
ஒருபோதும் காணவியலாத
சுவர்க்கத்தின்
ஒளிநிழலாட்டங்கள்
மழையற்ற மழை
நான்
மட்டும்
நனைகிற
மழை
மழையாகவே
இல்லை
அதில்
குளிர் இல்லை
ஈரம் இல்லை
கசியும்
கருணை இல்லை
மறைந்த ஒன்றை
உயிர்ப்பிக்கச் செய்யும்
மந்திரமும் இல்லை
ஆகவே
அது
மழையேயில்லை
தோலுரிந்த கவிதை
பிடித்த
புத்தகத்தின்
பிரித்த
பக்கத்தில்
கண்கள்
கவிய
வரிகளின் நடுவே
புல் மடங்குகிறது
பச்சைப் புதர் ஊடே
பாம்பென
அர்த்தம் நழுவுகிறது
வேலிச் செடியில்
ஆடும்
வெற்றுச் சட்டையென
இக்கவிதையில்
மினுங்குகின்றன
No comments:
Post a Comment