Sunday, 1 July 2018

க.மோகனரங்கன்- புதிர்களை ஆராயும் கலைஞன்

எல்லோரும் அதைக் காதல் என்றும் சிரமம் என்றும் குறிப்பிட்டார்கள். சங்க இலக்கியம் இரண்டையும் ஒற்றாகத்தான் பாவிக்கிறது. வள்ளு வருக்கு காமம் கெட்ட வார்த்தை இல்லை. இடையில் யாரோ ஒரு குற்ற மனப்பான்மைக்காரன், காதலை உயர்சாதி என்றும் காமத்தை அ-உயர் சாதி என்றும் வகுத்தான். ஒழுக்கவான்கள் சமூகச் சட்டம் செய்து ‘இது இது குற்றம்’ என்றார்கள். கலைஞர்கள் எல்லாக் காலத்திலும் இந்தக் குற்றவாளிகள், மீறியவர்கள் எனப்பட்டவர்கள் பக்கமே தம் நட்புக் கரம் நீட்டியபடி இருக் கிறாக்கள். கலைஞர்கள் ஒருபோதும் நீதிபதிகளாவது இல்லை.
யுத்தகளத்தின் புகைமூட்டங்களுக்கு இடையிலும் புல் முளைக்கத்தான் செய்கிறது. பெண்கள், ஆண்கள் என்று தம்மை உணரும் எல்லா ஜீவிகளிடமும் காதல் என்ற உயிர் எழுச்சி ஏற்படவே செய்யும். முறை, தக்கது, தகாதது காதலுக்கு இல்லை. கொடி படரக் கூடாத மரம் என்றெல்லாம் விதிகள் ஆண், பெண் உறவுக்குத் தெரிவதில்லை. ஆண், பெண் உறவில் இருக்கும் இந்தப் புதிர்த் தன்மை கலைஞர்களுக்குப் பெரும் கிளர்ச்சி தருகிறது. இதன் ஊற்றை, மையத்தை, மர்மத்தை அறியவும் எழுதவும் அவர்கள் முயல்கிறார்கள். காதலை, காதலர்களை எழுதுவது தெலைந்துபோன சாவியைத் தேடுவதாக இருக்கிறது. ஆனாலும், எழுத் தாளர்கள் இந்தச் சவாலை ஏற்பதில் பின்வாங்குவதில்லை. க.மோகனரங்கன், தான் அறிந்த சில விஷயங்களைத் தனக்குத் தெளிவு ஏற்படுத்திக்கொள்ள வேண்டி எழுதி இருக்கிறார். அவை வாசிக்கத் தக்க கதைகளாக உருப்பெற்றிருக்கின்றன.
க.மோகனரங்கன், தமிழின் முக்கிய மான கவிஞர். நல்ல விமர்சகர். ‘அன்பின் ஐந்திணை’ என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில், 13 கதைகள் இருக்கின்றன. சிறுகதைகளின் நுவல் பொருளைத் தொகுத்துக்கொள்வோம்.
சேட்டு என்கிற, கதை சொல்லியின் நண்பன் பள்ளி தோன்றிய நாளில் இருந்து ஆற அமர படித்து, ஒன்பதாம் வகுப்பு வருகிறான். தனம் கடந்த மூன்று வருஷமாக ஒன்பதாம் வகுப்பில். சேட்டு வுக்கு தனத்தின் மேல் காதல். தனத்துக்கு கல்யாண ஏற்பாடுகள். சேட்டு பூச்சி மருந்தைத் கையில் ஏந்துகிறான். இதெல் லாம் காதலின் சத்திய சோதனைகளில் ஒன்று. பூச்சி மருந்தைக் தனத்திடம் காட்டுகிறான். அவள், உயிரின் மேன்மை யைப் பற்றிப் பேசி நடக்கிறாள். பூச்சி மருந்து பிடித்த கையில் மதுவை ஏந்துகிறான் சேட்டு.
இன்னொருத்தன் பெயர் சேகர். அவனுக்கு ஒரு ஒன்பதாம் வகுப்புப் பெண் மீது காதல் (ஒன்பதாம் வகுப்பு காதல் கண்டம் போலும்) பிரச்சினை வீட்டுக்குத் தெரிந்து அமர்க்களம். பெண், அப்பா அம்மா பார்த்த பையனைத் திருமணம் செய்துகொண்டு, திருமதி ஆகி, மழையைப் பெய்யச் சொல்லும் கற்பரசியும் ஆனாள். சேகர் சக மாண வர்களின் அறைகளில் தேவதாஸானான்.
கருணாநிதிக்கு எதிர்வீட்டுப் பெண் ணின் மேல் காதல். அவன் அப்பாவுக்குத் தெரிந்து, அவள் வீட்டுக்குள் புகுந்து அவள் கூந்தலைப் பிடித்து இழுத்து அடித்திருக்கிறார். ஏழைப் பெண். எதுவும் செய்யலாம். அன்று மாலையே அந்தப் பெண் தூக்கில் தொங்கினாள். சேதி கேட்டு கருணாநிதி, பூவோடு அவளைப் புதைத்த இடத்தில் மலர் தூவ வந்திருக்கிறான். பேருந்தில் ஏறும் முன்பு பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு ஏறி இருக்கிறான். வழியிலேயே கருணாநிதி யின் உயிரும் பிரிந்திருக்கிறது.
இன்னொரு வேறுவிதமான கதை. டிரைவர் சண்முகத்தோட மனைவி ஜோதி. செல்வத்துடன் தொடர்பு. சண்முகத்துக்குத் தெரிந்தது விவ காரம். ஊர் பார்க்க சண்முகம் அவளை அடித்து துவைத்தான். வீட்டுக்கு எதிரில் இருந்த மரத்தின் கீழ் அழுது கொண்டிருந்தவளை நம் கதைசொல்லியும் பார்க்கிறான். பின்னர் ஒருசமயம் ஜோதியின் முன் போய் நிற்கிறான். ஏன்? காதல்தான்! ஜோதி இவனை வேண்டாம் என்கிறாள். ஏன், நான் என்ன, அந்தச் சண்முகத்தையும், செல்வத்தையும்விட எந்த விதத்தில் குறைச்சல் என்கிறான் கதைசொல்லி. அதற்கு அவள் சொல்லும் பதில்: ‘‘நீ என் புருஷனைவிட, நான் ஏதோ குருட்டு ஆசையில் சேர்த்துக்கிட்டு அவமானப்பட்ட அந்த செல்வத்தைவிட ஏன், என்னைவிடவும் நீ உசத்தி. அதனால்தான் வேண்டாம்கிறேன். புரியுதா?’’
இப்படியாகச் சில கதைகள். க.மோகனரங்கன், இவற்றை ‘அன்பின் ஐந்திணை’ என்கிறார். இது ஒரு நுட்பம். சங்க இலக்கியம், காதல் வகைமைகள் அனைத்தையும் அன்பின் ஐந்திணைக்குள் அடக்க வில்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய திணை களில், அதாவது நிலங்களில் வாழ்ந்த மனிதர்களின் காதலைச் சொன்ன தோடு; அந்தக் காதல்கள் கற்பு எனப்பட்ட மணவாழ்க்கைக்குள் செலுத் தப்பட்டபோதுதான் அன்பின் ஐந்திணை ஆயின. அல்லாத காதல்கள் கைக்கிளை மற்றும் பெருந்திணை என்றே பெயரிடப்பட்டன.
மொழி கருத்துச் சாதனமாகிப் பின்னர் கலைச் சாதனமானபோது, கவிதைகள் பரவலாகக் காதலின் அனைத்துச் சாகைகளிலும் எழுதப்பட் டன. கைக்கிளை, பெருந்திணை என்பவை வாழ்க்கையின் பெறு பொருள். ஆகையால் அவை புறக்கணிக் கப்படவில்லை. கவிதைகள் தொகுக் கப்பட்டு அகம் என்றும் புறம் என்றும் பிரிக்கப்பட்டபோது, சமூகத்தில் நிலவிய பொய்யும் வழுவும் கண்ட பெரியோர்கள் காதலை நன்னெறியாகிய குடும்ப நெறிக்குள் செலுத்த கைக்கிளையையும் பெருந்திணைப் பாட்டுகளையும் புறக் கணித்தார்கள்.
கைக்கிளையும் பெருந்திணையும் செய்த குற்றம் என்ன? ஒரு குற்றமும் செய்யவில்லை. சேட்டும், சேகரும், கருணாநிதியும் செய்த குற்றம் என்ன? காதலித்ததுதான்!
குலம், வயது, தகுதி, பொருளாதாரம் முதலான பல வகைகளில் இழிந்தவர்கள், ஏவலர்கள் காதலிப்பதையும் அவர் களின் காதலுக்கு அந்தஸ்து தருவதை யும் மேலோர் விரும்பவில்லை. அவர்கள் காதல் கைக்கிளையும் பெருந்திணையுமாயிற்று. கை = சிறுமை, அல்லது ஒருதலைக் காமம் என்று கைக்கிளையையும், பொருந்தாக் காமம் என்பது பெருந்திணையையும் குறித்தது.
எல்லாக் காதலும், பெருமை பெற்ற அம்பிகாபதி அமராவதி காதலும் கூட, கைக்கிளையில்தான் தொடங்கி இருக்க முடியும். பார்த்து, பேசி, பழகிய பின் வந்து சேரும் இடம் காதல் என்றால்; சேருமட்டும் அதன் பெயர் என்ன? பொருந்தாக் காமம் என்பது எப்படிச் சரி? காதலர்க்கு மனம் பொருத்திய பின், பிறர் அதை பொருந்தாதது என்பது என்ன வகையில் சரி?
க.மோகனரங்கனின் கதைகள், இந்தப் பார்வையில் முக்கியமானவை. சிறு பையன்களின் காதல்கள் சரியா என்று பெரிய பையன்கள் கேட்பது புரிகிறது. சிறு பையன்களின், பெண்களின் உயிரே போயிற்றே அதற்கென்ன பதில்? இதுகுறித்த பரவலான ஒரு உரையாடலைத் தொடங்க வேண்டும் என்கிற கவலை எழுத்தாளர்களுக்கு உண்டு. மோகனரங்கனும் அவர் பொறுப்புக்கு இதைச் செய்திருக்கிறார். கைக்கிளை பெருந்திணை என்று அக்காலத்துப் புறக்கணிப்பு போல இக்காலத்திலும் தமிழ்ச் சமூகம் அதைத் தொடர வேண்டுமா என்கிற கேள்வி புறக்கணிக்கக் கூடியதல்ல.
இரண்டாயிரம் பெண்கள் படிக்கிற பள்ளி. அறுபது ஆசிரியர்கள். ஐந்து பேர் ஆண் ஆசிரியர்கள். இடைவேளையின்போது டீ குடிக்கப் போவார்கள். ஒருவர் - அவர் பேர் மணிவாசகம். தனியாக இன்னொரு கடைக்குப் போய் டீ குடித்துவிட்டுத் திரும்புவார். ஏன்? ‘இந்தக் கடையில் முட்டை போண்டா போடுறானே’ என்பார். அந்த அளவு சைவர். பட்டினி கிடப்பார்கள். ஆனால் ஆசார அநுஷ்டானங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவரைப் பற்றி ஒரு வதந்தி. வீட்டு வேலைக்காரப் பெண்மணியோடு தொடர்பு வைத்திருக்கிறாராம். ஆசிரியப் பணிக்கான கவுரம் பிரச்சினையானது. மணிவாசகம் சார் அவளைத் தேடிக் கொண்டு குப்பத்துக்கே செல்கிறார். இரவுக் காட்சி சினிமாவில் அவர்களைப் பார்த்தார்கள் என்று பேச்சு. கிராமப் பள்ளி. பெண்கள் பள்ளி. தலைமை ஆசிரியர் மணிவாசகம் சாரைப் பணி மாறுதல் செய்கிறார். போகும்போதுதான் மணிவாசகம் மனம் திறக்கிறார்.
உடல் நலம் குன்றி அவர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். அந்த வேலைக்கார அம்மா கையால் தண்ணீர்கூடக் குடிக்காத சார், அவள் கொடுத்த மாத்திரைகளையும் துப்பிய சார், கண் திறக்க முடியாது மயங்கிக் கிடந்தபோது அவள் உதவியை ஏற்றுக்கொள்ளும்படி ஆயிற்று. அங்கிருந்து ஆரம்பித்தது எல்லாம்.
மோகனரங்கன் எழுதுகிறார்:
புத்திக்கும் மனசுக்கும் இடையே எழும்பி நின்ற சுவர், எப்புள்ளியில் எவ்விதம் நெக்குவிட்டுக் கசிந்தது என்று நிதானிக்கும் முன்னரே, சரிந்து விழுந்த மிச்சமுமின்றி அடித்துச் செல்லப்பட்டு விட்டிருந்தது...
மணிவாசகம் சார், கதை சொல்லியிடம் சொல்கிறார்.
‘‘டாக்டரிடம் காட்டி ஊசி மருந்தெல் லாம் போட்டு தேறி எழுந்திருக்க நாலு நாள் ஆயிடுச்சு. அதுக்குள்ள எனக்குள்ள கலைச்சு அடுக்கின மாதிரி எல்லாமே மாறிப்போச்சு. உங்களுக்கு சின்ன வயசு. நான் பேசறது ஏதோ அற்ப சாக்கு மாதிரி தோணும். இப்ப இல்லன்னாலும் பின்னால் ஒருநாள் புரியும். அப்புறம், இந்த மாதிரி உறவெல்லாம் கடைசியில் இப்படி மனவேதனையில்தான் போய் முடியும்னு எனக்கு முன்னாலேயே தெரியும். எல்லாத்தையும் ஏத்துக்கிற பக்குவம் இப்போது எனக்குக் கிடைச்சுடுச்சு.’’
இந்தப் பக்குவம்தான் முக்கியம். இதை ஏற்படுத்துவதுதான் எழுத்தில் அகப் பயன். இதற்காகத்தான் இந்தக் கதைகளை மோகனரங்கன் எழுதி இருக்கிறார். உலகத்தின் பெரும் படைப்பாளிகள் எல்லோரும் இந்த அகச் சிடுக்குகளில் விரும்பியே போய் சிக்குகிறார்கள். சிடுக்குகளை எடுக்க முயற்சிக்கிறார்கள். இம்முயற்சிகளில் பல கதவுகள் திறக்கப்படுகின்றன. க.மோகனரங்கனும் திறந்திருக்கிறார்.
ஒரு கவிஞராக, விமர்சகராக, நாள் தவறாமல் படிக்கிற என் மரியாதைக்குரியவர் க.மோகனரங்கன். இனி அவர் கதைகளையும் வாசிக்கக் காத்திருப்பேன்.
‘அன்பின் ஐந்திணை என்கிற இந்தத் தொகுப்பை ‘ யுனைடெட் டைரட்டர்ஸ்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment