ஏன் எழுதுகிறீர்கள்?
நான் இயல்பிலேயே கூச்ச சுபாவமும், உள்ளொடுங்கிய மனப்போக்கும் கொண்டவன். பிறருடன் இருக்கும் தருணங்களில்கூட நான் அந்தரங்கமாக உணரும் தனிமையைப் போக்கிக்கொள்ளத்தான் எழுதுகிறேன் என்று தோன்றுகிறது. எழுத்தின் வழியாக என்னை அவ்வப்போது கலைத்து அடுக்கிக்கொள்ள முடி கிறது. மிக முக்கியமாக, எனக்கு விதிக்கப்பட்ட இந்த வாழ்க்கையின் எல்லைகளை ஓரளவுக்கேனும் மீறுவதற்கான உபாயமாக எழுத்து அமைகிறது.
எந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?
குறிப்பாகச் சொல்லும்படியான நேரம் எதுவுமில்லை. கவிதைகளைப் பொறுத்தவரையிலும் எதேச்சையாக ஒரு எண்ணமோ, காட்சிப் படிமமோ, வரியோ மனதில் உருக்கொள்ளும். அதைத் தொட்டு உடனே எழுதவும் வாய்க்கும். பல சமயங்களில் பாதியில் நிற்கும் வரிகளை நிறைவுசெய்ய வேறொரு பொழுதும் மனநிலையும் தேவைப்படுவதுண்டு. காகிதத்தில் எழுதி முடிப்பதற்கு முன்பாக மனதில் கிறுக்கி அழிப்பதற்குக் கணக்கெதுவும் கிடையாது. எழுத ஒப்புக்கொள்ளும் கட்டுரைகளை அவற்றின் கெடு தேதி நெருங்கும்போது உட்கார்ந்து அவசர அவசரமாக எழுதுவதே வழக்கம்.
உங்களது எந்தப் படைப்பு உங்கள் எழுத்து வாழ்க்கையைப் பூர்த்தியாக்கியது எனச் சொல்வீர்கள்?
நான் முழு நேர எழுத்தாளன் அல்ல. அதிகம் எழுதிவிடவுமில்லை. தவிரவும், எழுதி முடித்துவிட்ட ஒரு படைப்பின் குறைகளும், போதாமைகளும் வேறு எவரையும்விட அதை எழுதியவனுக்கே அதிகமாகத் தெரியும். பெரும்பாலும் எழுதப்போவதைக் குறித்த அதீதமான நம்பிக்கையும், எழுதியதைப் பற்றிய அதிருப்தியுமே ஒரு எழுத்தாளனின் பொதுமனோபாவமாக இருக்கும். இவற்றையெல்லாம் மீறி ஒரு எழுத்தாளனுக்கு அவனது ஆக்கங்களின் ஏதோவொன்றின் மீது தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கும். அவ்வகையில் ‘உறங்காப் பத்து’ என்ற நீள்கவிதை எனக்குப் பிடித்தமானது.
எழுத்தில் நீங்கள் சோர்வாக உணர்வது எப்போது?
மனித மனதின் அளப்பரிய கருணையை மாத்திரமல்ல; சமயங்களில் அது எவ்வளவு கீழ்மையிலும், குரூரத்திலும் தன்னை மூழ்கடித்துக்கொள்ளும் என்பதையும் சேர்த்துப் பார்க்கத் தான் இலக்கிய வாசிப்பு கற்றுத்தந்திருக்கிறது. என்றாலும், ஏதுமறியாத குழந்தைகளின் மீது பிரயோகிக்கப்படும் வன்முறையை அறியவரும்தோறும் மனம் பேதலித்துவிடும். முன்பென்றால் அது தொலைவில் எங்கோ நடந்த துர்சம்பவம் என கடந்துவிடலாம். இப்போதோ எங்கு நடந்தவையும் நம் முன் காட்சிகளாக, அவ்வளவு எளிதாக விடுபட முடியாதபடிக்கு இணையவெளியில் முன்வைக்கப்படுகின்றன. பாலச்சந்திரன், அய்லான், ஆசிபா ஆகியோரின் புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தபோது பாவம், புண்ணியம் இவற்றுக்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்கிற கசப்பிலும் சோர்விலும் மனம் மூழ்கிப்போயிருக்கிறேன். இவற்றையும்கூட தங்களுடைய அரசியல் சார்பில் நின்று நியாயப்படுத்திப் பேசுகிற சில மனிதர்களுக்கு நடுவேதான் நாம் வாழ வேண்டியிருக்கிறது எனும்போது இன்னும் கூசிப்போகிறேன். அப்போதெல்லாம் ஒரு வரியும் வாசிக்கவோ எழுதவோ தோன்றாது.
எழுதுவது பற்றி உங்களுக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது?
எண்ணற்ற எழுத்தாள நண்பர்களிடமிருந்து மதிப்பீடுகளைக் கற்றேன். இலக்கியத்துக்குப் பெருவழியல்ல, ஒற்றையடிப்பாதையே உகந்தது. அதையும் நடந்து நடந்து நாமே உருவாக்க வேண்டும் என்கிற தெளிவு அவற்றுள் முக்கியமானது.
இலக்கியம் தவிர்த்து - இசை, பயணம், சினிமா, ஒவியம் - வேறு எது இல்லாமல் உங்களால் வாழ முடியாது?
இசை, சினிமா, ஓவியம் இவற்றிலெல்லாம் கேள்வி ஞானத்தைத் தாண்டி பெரிய ஈடுபாடு இல்லை. இலக்கியத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பயணங்களில் ஆர்வமிருக்கிறது. குடும்பம், வேலை என்கிற வட்டத்தைவிட்டு பெரிய அளவில் பயணிக்கக்கூடிய சூழல் இல்லை என்றாலும் கிடைக்கக்கூடிய சின்னச் சின்ன வாய்ப்புகளைத் தவறவிடுவதில்லை. ஒருமுறை ஹம்பியிலிருந்து கிளம்பி கோப்பால் அருகே சிறுகிராமத்திலிருக்கும் கோயிலைப் பார்க்கச் சென்றுகொண்டிருந்தோம். காரை விரைவாகச் செலுத்தச் சொன்னார் வசந்தகுமார். சூரியன் மறைவதற்குச் சற்று முன்பாக அக்கோயிலை அடைந்தோம். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலிருந்த கம்பிவேலியின் கதவில் பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. ஏமாற்றத்துடன் நாங்கள் நின்றுகொண்டிருக்கையில், தலையில் புல்லுக்கட்டுடன் அவ்வழியே ஒரு பெண்மணி வந்தார். அவர் தந்த யோசனையின்படி இடுப்புயரமே இருந்த வேலித் தடுப்பைத் தாண்டிக் குதித்து உள்ளே சென்றோம். மூன்று கட்டமாக சரிந்திறங்கிய கல் படிக்கட்டுகளின் அடியில் நீர் தேங்கியிருக்க மேலே கற்றூண்களின் மேல் கட்டப்பட்ட சிவன் கோயில். அதன் அமைப்பை முழுவதுமாக உள்வாங்கி வியந்து நிற்கும்போதே மெல்ல மெல்ல வெளிச்சம் மறைந்து இருள் சூழ்ந்தது. சற்றே தாமதித்திருந்தாலும் தவறவிட்டிருக்கக்கூடிய அழகைக் கண்ட அந்த அந்தியை இன்றளவும் மறக்கவியலாது.
இதை இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என நீங்கள் நினைக்கும் புத்தகம் எது?
கம்பராமாயணம். 6 காண்டங்கள், 118 படலங்கள், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள். 3 லட்சத்துக்கும் கூடுதலான சொற்களோடு எழுதப்பட்டிருக்கும் தமிழின் ஆகப்பெரிய கவிதை நூல். அதன் கவித்துவ உச்சம், உணர்ச்சித் தீவிரம், நாடகீய தருணங்கள், சொல்லாட்சித் திறன் போன்றவற்றிலிருந்து ஒரு கவிதை வாசகனாக எனக்குக் கற்க நிறைய இருக்கிறது. வாய்க்கும்போது முழுவதுமாய் ஒரு முறை படித்துவிட வேண்டும்.
இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?
அரசை, மத நிறுவனங்களை, மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளைப் புண்படுத்துகிறது என்ற காரணத்துக்காக தடைவிதிக்கப்பட்ட நூல்கள் பற்றிய குறிப்புகள் வரலாறு நெடுகிலும் பதிவாகியுள்ளது. ஆனால், இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா என கேட்டால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்வேன். ஏட்டுக் கல்வி அற்ற எளிய மனிதர்கள் பலர் மிகுந்த நீதியுணர்வோடும், அறம் குறித்த தன்நிச்சயத்தோடும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். இரண்டு மூன்று மொழிகள் கற்ற பண்டிதர்கள் சிலர் மனிதநேயம்கூட இல்லாமல் வெறுப்பைக் கொட்டி எழுதிவருவதையும் பார்த்ததுண்டு. இயல்பிலேயே கண்ணியமும் மனச்சான்றும் அமையப் பெற்றவர்களை வேண்டுமானால் மேலும் பண்படுத்துவதாக இலக்கியம் அமையுமே தவிர அத்தன்மைகளைக் கொண்டிராதவர்களை இலக்கியம் உணர்வுபூர்வமாகத் தீண்டுவதில்லை என்றுதான் எனக்குப் படுகிறது.
தமிழ் இந்துவில் வெளியான பேட்டி
http://tamil.thehindu.com/general/literature/article24120016.ece