Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Monday, 23 August 2021

புனல் பொய்யாப் பொருநை (கலாப்ரியா கவிதைகள்)

பல வருடங்களுக்கு முன்பு முதல் முறையாகப் பேளூர், ஹனபேடு சிற்பங்களைக் காண நண்பர்களோடு சென்றிருந்தேன். முதலில் சென்ற சென்னகேசவர் ஆலயத்தைப் பத்து பதினைந்து நிமிடத்திற்குள்ளாகச் சுற்றி வந்துவிட்டு இவ்வளவுதானா என்பதைப்போல் ஓர் ஓரமாக நின்றுகொண்டேன். தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான பிரகாரங்களையும் ஒரே கல்லால் வடிக்கப் பெற்ற சிலைகளையும் பார்த்துப் பழகிய கண்களுக்கு நட்சத்திர வடிவிலமைந்த அந்தச் சிறிய கோயிலும் அதனுள் செதுக்கப்பட்டிருந்த சிறிய சிற்ப வேலைப்பாடுகளும் பெரிதாகத் தோன்றவில்லை.

ஒரு தூணருகே முழந்தாளிட்டு, கொண்டு சென்றிருந்த சிறிய கைக் காமிராவால் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த நண்பரை பொறுமையிழந்து பார்த்துக்கொண்டிருந்தேன். வேலை முடிந்து நிமிர்ந்த நண்பர், ஒதுங்கி நின்றிருந்த என்னைச் சைகை செய்து அழைத்தார். காமிராத் திரையில், அதுவரை மடங்கி அமர்ந்து தான் எடுத்திருந்த ஒரு நடனமங்கையின் சிற்பத்தைக்காட்டினார். நான் பிரம்மித்துப் போனேன். அக்கோவிலையும் அதன் அபாரமான வேலைப்பாடுகளையும் காண்பதற்கான கண் அதன் பிறகுதான் எனக்குத் திறந்தது. கருவறையைச் சேவிப்பதை விடுத்துப் பார்க்கத் தொடங்கினால், சுவர்களைத் தொட்டுத் தூண்கள், உள்விதானம், மேற்கூரை எனத் திரும்பும் பக்கமெல்லாம் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள். யானைகள், குதிரைகள், யாளிகள், விதவிதமான பறவைகள், புராண இதிகாசக் கதைகள் சித்தரிக்கும் காட்சிகள், இசைக் கலைஞர்கள், வீரர்கள், நடன மங்கைகள், பணி மகளிர் போன்றோரின் பல்வேறு பாவனைகள், அவர்கள் கைக்கொண்டிருக்கும் கருவிகள், அணிந்திருக்கும் வேலைப்பாடு மிக்க நகைகள் என நுணுகி நுணுகி செய்யப்பட்ட சிற்பங்கள். கண்படும் இடமெல்லாம் காணச் சலியாத கலைநயம் மிளிர்ந்துகொண்டிருந்தது. 

அதன் பிறகும் இருமுறை அக்கோயில்களைக் காணச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவற்றுள் புதிதாக ஏதோ ஒரு கோணத்தையும் அழகையும் கண்டு பரவசப்பட முடிந்தது. பதினோராம் நூற்றாண்டு வாக்கில் ஹொய்சாளப் பேரரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோயில்களில் சிறப்புத் தன்மைகொண்ட சோப்புக் கற்களால் சிற்ப வேலைப்பாடுகளைச் செய்துள்ளனர். கரும் பளிங்கு நிறத்திலான இக்கற்களை நீரில் பலநாட்கள் ஊற வைத்திடும்போது அவை மென்மையுற்று நயமான செதுக்கு வேலைகளைச் செய்வதற்கு உகந்ததாக மாறிவிடுகின்றன என்கிற விவரங்களுடன் இக்கோயில்கள் திராவிடக் கட்டிடக் கலைக்கு உதாரணமாகவும் கொள்ளப்படுகின்றன என்கிற தகவலையும் இணையத்தில் தேடுகையில் கூடுதலாக அறிய முடிந்தது.

முன்பும் பலமுறை கலாப்ரியாவின் கவிதைகளைத் தனித் தனித் தொகுப்புகளாக அவ்வப்போது படித்ததுண்டு என்றாலும், இப்போது அவருடைய கவிதைகள் முழுவதையும் சேர்த்து இரண்டு பெரும் தொகைகளாகத் திரும்பவும் ஒருசேர வாசிக்கும்போது எனக்கு மேற்சொன்ன பேளூர் ஹளபேடு சிற்பங்களின் கூட்டு வரிசையே நினைவில் எழுந்தது. அவற்றின் ஏமாற்றும் எளிமை கொண்ட நுண்மையான சித்தரிப்புகளுக்காக மட்டுமல்லாமல் அவை திராவிடக் கலைக்கான உதாரணம் என்கிற அடிக் குறிப்பிற்காகவும் சேர்த்து.

’நான்
சுயம் வரித்திருக்கிற
வாழ்க்கை
என் தவிர்ப்புகளின் மீது
உருவானது’
(சுயம் வரம்)

என்று எழுதிய கலாப்ரியாவின் ஆரம்பக் காலக் கவிதைகள் அதன் அதிர்ச்சியூட்டும் சர்ரியலிசப் படிமங்களுக்காகவும், இடக்கரடக்கல் ஏதுமற்ற கொந்தளிப்பான மொழிக்காகவும் அதிகமாகக் கவனிக்கப்பட்டது. ஒரு காட்டாற்று வெள்ளம்போலத் தனக்கான பாதைகளையும் பரப்பினையும் தமிழ்க் கவிதை வெளியில் அது வரித்துக்கொண்டது.

தான் எழுதத் தொடங்கிய தருணம் பற்றி நினைவுகூர்ந்து சொல்லும்போது “நான் அதிக முறை சொல்லியிருக்கும் ஒரு பெண் மீதான காதல் ஒரு காரணமென்றாலும் மொழி மீதான தீவிரமான பிடிப்பே அதிகபட்சக் காரணம் என்று இப்போது தோன்றுகிறது.” என்கிறார். விளையாட்டும் வேடிக்கையுமாகக் கழியும் பதின் பருவத்தில் சட்டெனச் சந்திக்க நேரிடும் ஏதோவொரு கடுமையான மனநெருக்கடியின் வழியாகவே பலரும் தீவிர வாசிப்பிற்கும் அதன் தொடர்ச்சியாகச் சிலர் எழுதவும் வருகிறார்கள். கலாப்ரியாவுக்கு வாய்த்த கதவு இழந்த காதல். அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல, அல்லது முக்கியம் என்றால் அதன் வழியே இன்று அவர் கடந்து வந்திருக்கும் இந்தத் தொலைவு, எழுதிச் சேர்த்திருக்கும் கவிதைகளின் இந்தப் பெருந்தொகைகளுமே காரணம்.

“என் முதல் கவிதைத் தொகுப்பு ‘வெள்ளம்’ மிகக் குட்டியான அளவில் ஒரு ரூபாய் நோட்டை இரண்டாக மடித்தது போன்ற வடிவில் வந்தது. விலை 30 நயாப் பைசா. வண்ணதாசன் தான் தன் கைக்காசைப் போட்டு அச்சிட்டிருந்தார்.” என்று ஒரு நேர்காணலில் (உயிர் எழுத்து, ஆகஸ்ட்) சொல்கிறார். ஒரு ரூபாய் நோட்டை இரண்டாக மடித்தது போல என்ற வரியில் வெளிப்படுகிற அந்தக் காட்சித் தன்மை தான் அவருடைய கவிதைகளின் தனித்துவமாகப் பலராலும் சுட்டப்பெறுகிறது. இதைச் சொல்லிவிட்டு தொடர்ந்து மேலுமொரு வரியைச் சேர்க்கிறார். ‘அப்போது வண்ணதாசனுக்கு அவருடைய தொகுப்புகள் என்று எதுவும் வந்திருக்கவில்லை.’ இதில் வெளிப்படுவது வெறும் நன்றியுணர்வும் நட்பின் நெருக்கமும் மாத்திரமல்ல. சுயமான இரண்டு ஆளுமைகளுக்கிடையே பரஸ்பரம் நிலவிய அடுத்தவர் எழுத்துக்களின் மீதான மதிப்பும் கரிசனமும் கூடத்தான்.

‘வெள்ளம்’ தொகுப்பில் முதலாவதாக இடம் பெற்றிருப்பது ‘அவளின் பார்வைகள்’ என்கிற சிறிய கவிதை. அவருடைய பிற்காலக் கவிதைகளில் இன்னமும் துலக்கமாக வெளிப்படவிருக்கும் அவருடைய தனித்துவமான கூறுமொழியின் அடையாளத்தினை இதிலே காணமுடிகிறது.

காயங்களுடன்
கதறலுடன் ஓடி
ஒளியுமொரு பன்றியைத்
தேடிக் கொத்தும்
பசியற்றக் காக்கைகள்
(பக் – 85, கலாப்ரியா கவிதைகள் தொகுதி – 1)

ஒரு பெண்ணின் அலட்சியமான நோக்கினைக் கண்டு வெதும்பும் ஆண் மனதின் நோவினை அழுத்தமாக வெளிப்படுத்தும் இக்காட்சிப்படிமம், அதே சமயத்தில் வாசகனை அதிர்ச்சிக்கும் ஆளாக்கத் தவறுவதில்லை. அழுக்கிலும் சகதியிலும் புரளும் பன்றியையும் காக்கையையும் புனிதமான காதலுணர்விற்கு உவமிப்பதால் நம் மரபான மனதில் உண்டாகும் திடுக்கிடல் தான் அது.

நடன மங்கைச்
சிற்பம் மீது
காலிலிருந்து
மேல் நோக்கி
ஏறிக்கொண்டிருக்கிறது
கம்பளிப் பூச்சி ஒன்று.
(பக் – 426, கலாப்ரியா கவிதைகள் தொகுதி – 2)

இது அவருடைய பிந்தைய காலக் கவிதைகளில் ஒன்று. அந்தக் கம்பளிப் பூச்சி என்பது உண்மையில் சிலை மீது ஊர்ந்தேறும் ஒன்றே தானா? அல்லாமல் வெறித்து நோக்கும் நமது விடலை மனதின் பார்வையைதான் குறிப்புணர்த்துகிறதா? தீர்த்து சொல்லிவிட முடியாது.

நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் நாகரீகத்தை முன்னிட்டு நாம் வெளிக்காட்டாது ஒளித்துக்கொள்ள விரும்புகிற இச்சை உணர்வுகளை, அவை வெறும் உடல் சார்ந்த காமம் மாத்திரமல்ல குற்றம், மரணம், பசி, அழுக்கு, அசிங்கம் என நாம் நேர்கொண்டும் பாராமல் ஒதுக்கி வைக்கும் நிழலான விஷயங்கள் எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாக எழுதுவது என்பது கலாப்ரியாவிடம் இயல்பான ஒன்றாக இருக்கிறது. சமச்சீரான ஒரு முகம் அப்போதைக்கு நம் கண்ணைக் கவர்வதாக இருந்தாலும் எப்போதைக்குமாக நம் நினைவில் பதிவது அரிது. மாறாக ஒரு முகத்தில் இருக்கும் வடு, மச்சம் அல்லது மரு நம் நினைவில் அம் முகத்தை மறக்கவியலாத ஒன்றாக அழுத்தமாகப் பதியச் செய்துவிடுகிறது. தமிழ்க்கவிதையில் காட்சிகளைச் சித்திரமாகத் தீட்டிக் காட்டும் திறன் மிகுந்த கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கலாப்ரியா வேறுபடும் புள்ளி ஒன்றுண்டு. அது அவருடைய காட்சிப்படிமங்களில் வெளிப்படும் ஒருவித கோணல், ஒரு விலகல் அல்லது ஒருவகையிலான வக்கரிப்பு. அவ்வம்சம் அவருடைய காட்சிகளை வெறும் சித்தரிப்பு என்பதிலிருந்து நகர்த்தி அவற்றை வசீகரமான நாடகீய தருணங்களாக மாற்றுவதோடு அல்லாமல் நம்மையும் பார்வையாளன் என்பதிலிருந்து விடுவித்துப் பங்கேற்பாளனாகப் பலசமயங்களில் உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. இத்தன்மைக்குக் கச்சிதமான உதாரணமாகப் பின்வரும் கவிதையைச் சுட்டலாம்.

விடிவு

காலம் பார்த்துச் சொல்லும் ஜோசியர்
வாசலில் காய்கிற
நெல்லுக்குக் காவலிருப்பார்
வானம் பார்த்தபடி
பள்ளிக்குப் போகாமல்
பையுடன்
திண்ணை தேடும்
பயலொருத்தனைத்
தெருவில் கண்டு
காவலிருக்கப் பயமுறுத்தி
எண்ணெய் தேய்த்துக்
குளிக்கும் மனைவியை
ரகசியமாய் உற்றுப் பார்க்க
உள்ளே போவார்
(பக்கம் – 102 , கலாப்ரியா கவிதைகள் தொகுதி – 1)

முதலிரண்டு பத்திகளிலும் ஒரு அன்றாட நடப்பாக விரியும் காட்சி மூன்றாவது பத்தியில் நாடகீயமாக உருமாறுகிறது. சொந்த மனைவியை ரகசியமாக உற்றுப் பார்க்க உள்ளே போகிறவர் வாசிக்கிறவனிடத்தும் ஒரு இரகசிய குறுகுறுப்பை உண்டாக்கிவிடுகிறார். அடுத்தவரது அந்தரங்கத்திற்குள் எட்டிப் பார்க்கிற இதுபோன்ற அத்துமீறல்களை அலட்சியமாக முன்வைப்பது இவருடைய கவிதைகளின் உருவாக்கக் கூறுகளில் ஒன்றாகவே அமைகிறது.

‘அழகாக இல்லாததால்
அவள் எனக்கு
தங்கையாகிவிட்டாள்’
(பக்-85 , கலாப்ரியா கவிதைகள் தொகுதி – 1)

எனும் அவருடைய ‘சலுகை’ என்கிற இன்னொரு கவிதையையும் இத்தன்மைக்கு உதாரணமாகச் சுட்டலாம். இவ்வரிகளை அதன் நேரடிப் பொருளாக எடுத்துக்கொண்டு ‘விடலை மனதின் வக்கரிப்பு’ என்பதாகக் கொதித்தவர்கள் உண்டு. உண்மையில் நம் ஒவ்வொருவரின் அடி மனதிலும் உறைந்திருக்கும் விகாரத்தைத்தான் ஒரு கண்ணாடியென நம் முன் காட்டித் தருகிறது அது.

தெருவில் நிகழும் பலவற்றிலும் நாம் பார்க்கத் தவறிய, பார்த்தாலும் பாராதது போல ஒதுக்க விரும்பும் நம் மனதின் பாவனைகளையும் மறைவின்றிச் சேர்த்து எழுதுவதை வழக்கமாகக் கொள்கிறார் கலாப்ரியா. அது அவருடைய கவிதைகளுக்கு அசாதாரணமானதொரு கனத்தையும் கவன ஈர்ப்பையும் நல்குகிறது. ‘ஒரு உயரமான கோபுரத்தைப் பார்க்கும் பொழுது உடனடியாக நம் மனதில் எழும் எண்ணம் இது இப்படியே இடிந்துவிழுமானால் எப்படியிருக்கும்? என்பதாகவே இருக்கும்’ என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. மனதின் இந்த எதிர்மறை இச்சையை நாம் பெரும்பாலும் வெளிக்காட்டுவதில்லை. அது பண்பற்றதாகவும், கேலிக்குரிய ஒன்றாகவும் பார்க்கப்படும் என்கிற தயக்கமும் நமக்குண்டு. கலாப்ரியா இத்தகைய மனத்தடைகளை இயல்பாக மீறுகின்ற ஒருவராகவே தன் கவிதைகளில் வெளிப்படுகிறார். பின்வருவது அவருடைய பிற்காலக் கவிதைகளில் ஒன்று.

குளம் நீங்கி
தாமரைப் பூக்களை
கரையில் வைத்தவள்
தொடை ஒட்டிய
அட்டைகளை
ஒவ்வொன்றாய் பிய்த்து
குளத்திற்குள் போடுகிறாள்
வடிகிறது என் கவிதையெங்கும்
ரத்தம்.
(பக்கம் – 464, கலாப்ரியா கவிதைகள் தொகுதி – 2)

இக்கவிதையில் சுட்டப்பெறும் அட்டைகளும் அவற்றின் கடிவாய்களின்றும் வடிகின்ற ரத்தமும் எதைக் குறிப்புணர்த்துவதாக அமைந்துள்ளன என்பதை யோசிக்கையில், விவஸ்தை கெட்ட நமது பார்வை மீதும் அலைபாயும் எண்ணங்களின் மீதும் நமக்கே ஒருவித குற்றவுணர்வும் சுயவெறுப்பும் எழுவதை உணரலாம். நாம் அசிங்கம், அருவருப்பு, இலட்சணக் குறைவு என்று தள்ளி வைக்கிற விஷயங்களுக்கும் ஒரு அழகு உண்டு. அதை ‘பிபத்ஸம்’ என்கிறது காவிய அழகியல். அத்தன்மையைக் கலாப்ரியா அளவிற்கு நவீன கவிதையில் கையாண்டவர்கள் யாருமில்லை. இதைத்தான் மனத்தடை இல்லாமல் எழுதியவர் என்கிறார் விக்கிரமாதித்தியன். தன் அசிங்கங்களுக்கான அழகான கவிதைகளை எழுதியவன் என்கிறார் வண்ணதாசன். 

தமிழ் மரபின் நீட்சியாகச் சங்கக் கவிதைகளின் தொடர்ச்சியைக் கலாப்ரியாவிடம் காண்பவர்கள் உண்டு. காட்சி சித்தரிப்பு என்பதற்கும் அப்பால் இரண்டு கவிதைகளிலும் வேறொரு அம்சத்திலும் பொதுமை உண்டு. இரண்டுமே முழுக்கவும் உலகியல் தளத்தில் தமது கவித்துவத்தைக் கண்டடைய முயல்பவை.

அப்பாலைத் தத்துவத்திலோ அனுபூதி தன்மையிலோ அவ்வளவாக நம்பிக்கை கொள்ளாதவை. இவர் கவிதைகளில் இறைவழிபாடும், சடங்குகளும், சமயவிழாக்களும் இடம்பெறினும் அவை முற்றிலும் இகவாழ்வோடு உள்ளடங்கியதாகவே வெளிப்படுகின்றன. இத்தனைக்கும் கலாப்ரியா விரதமிருந்து மாலை போட்டுக்கொண்டு தொடர்ச்சியாகச் சபரிமலைக்கு யாத்திரை போகிறவரும் கூட.

‘எம்பாவாய்’ என்கிற தலைப்பில் அவருடைய சற்றே நீண்ட கவிதை ஒன்று உண்டு. நகரோரத்துக் குடிசைப் பெண்கள் ஆண்டாளின் வம்சங்கள் சொறி உதிர்க்கும் கறுப்பு நாயைத் துணைக்கழைத்து ஊரை விட்டு வெளியே கக்கூஸ் தேடிப்போவதை அருளிச் செய்த திருவெம்பாவை எனும் குறிப்போடு முடியும் அக் கவிதை மேலெழுந்தவாரியான நோக்கிற்குத் திருப்பாவையை நகையுணர்வுடன் நகல் செய்திருப்பதுபோலத் தொனிப்பினும் அதன் உட்கிடையாக உறைந்திருப்பது ஆற்றாமையும் விமர்சனமும்தான்.

ஆங்கிலக் கல்வி வாயிலாக உலகின் பிற பகுதிகளில் காணப்பெறும் இலக்கியத்தின் போக்குகளை அறியவந்த ஒருசாராரின் காரணமாகவே இந்திய மொழிகளில் நவீனத்துவம் சாத்தியமாயிற்று. அவ்வகையில் படித்த மத்தியத்தர வர்க்கத்தினருடைய கனவுகளையும், ஏக்கங்களையும், ஏமாற்றங்களையும், இயல்புகளையும், இயலாமைகளையும் பிரதிபலிப்பனவாகத் தமிழ் நவீன கவிதையின் செல்திசையும் தொடங்கியது. பிற்காலத்தில் பெண்கள், விளிம்புநிலையினர், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் குரல்களும் கூடி ஒலிக்கத் தொடங்கிவிட்ட போதிலும் கூட இன்னமும் அவற்றில் உயர்த்திப் பிடிக்கப்படுவது மத்தியத்தர வர்க்கத்தின் மதிப்பீடுகளே என்றால் அது மிகையாகாது. அவ்விதமாக நோக்குவோமாயின் தமிழ் நவீன கவிதையின் நிகழிடம் பெரும்பாலும் ஒரு அறை அல்லது தனியன் ஒருவனின் மனம். அவனது நினைவேக்கங்களும் நெஞ்சொடு கிளத்தல்களும் தான் பொதுவான கவிமொழி. கலாப்ரியா இதிலிருந்தும் பேரளவு விலகி நிற்கிறார். இவருடைய கவிதைகளின் நிகழிடம் பெரும்பாலும் தெரு அல்லது ஆள் நடமாட்டம் நிரம்பிய பொதுவிடம் ஏதேனும். இவருடைய கவிதைகளில் நினைவேக்கங்கள் நிறைந்திருப்பினும் அவற்றில் தனிமொழிக்கு பதிலாகப் பலகுரல் தன்மையும் அமைதிக்கு மாற்றாக இரைச்சலும் குறுக்கீடுகளும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். மனதின் தவிப்புகள் ஒருபுறம் இருப்பினும் உடலின் தாபமும் வலியும் இவர் கவிதைகளில் ஒத்திவைக்கப்படுவதில்லை. அவை சிறுமைக்குரிய ஒன்றாகவும் கட்டமைக்கப்படுவதில்லை. கல்யாணம் ஆகிப்போய் விடுமுறைக்குப் பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிற அக்காவைப் பற்றிய கோட்டுச் சித்திரமொன்று அவருடைய ‘சிறுத்தொண்டம்’ என்கிற கவிதையில் வருகிறது.

ஆனாலும்,
தனக்குப் பொங்கல்படி
தரமுடியாததை
மாமியார் சொன்னதாய்
சொல்லி
உன் மூளையில் முளைத்த
மீசையை
இரக்கமின்றிச் சுட்டெரிப்பாள்
என் தோழனே!
‘அக்காக்களால்
பிரியம் கொட்ட
முடிகிறதே தவிர
பால் தர முடிகிறதில்லை’
(பக்-150, கலாப்ரியா கவிதைகள் தொகுதி – 1)

மனம் நிறைந்தால் மாத்திரம் போதாது. உடலின் பசி தனி. அது தணிவதும் முக்கியம் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது இறுதி வரி.

இளமைக்கேயுரிய மூர்க்கத்துடனும் மீறலின் ஆவேசத்தோடும் இவர் எழுதிய எட்டையபுரம், சுயம்வரம், ஞானபீடம் முதலிய நெடுங் கவிதைகள் அன்றைய பொதுப் போக்கினின்றும் வெகுவாக விலகி, வேறுபட்டு நின்றமையால் அவை சோதனை முயற்சிகளாகக் கருதப்பட்டுத் தயக்கத்துடன் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அக்கவிதைகள்தான் அவற்றினுடைய முரண்பட்ட அழகியல் கூறுகள் காரணமாக இன்று இவருடைய சாதனைப் படைப்புகளாக மதிப்பிடப்பெறுகின்றன.

பிரமிள், நகுலன், தேவதேவன் என வேறு பலரும் நீள் கவிதைகளை எழுதிப் பெயர் பெற்றுள்ளனர். எனினும் அவர்களுடைய கவிதைகளின் ஒருமைப்பட்ட மையப் படிம அமைப்பாக்கத்தினின்றும் வேறுபட்ட சிதறுண்ட வடிவமும் இடைவெட்டாகக் கூடி ஒலித்திடும் பலகுரல் தன்மையும் கொண்டவை இவருடைய நெடுங் கவிதைகள். இவற்றை ‘நவீன காவியங்கள்’ என்கிற அடைமொழியால் சுட்டும் பிரம்மராஜன் இக்கவிதைகள் ‘ஒருபுறம் சரித்திரத்தையும் இன்னொரு புறம் தினசரி வாழ்வின் யதார்த்தத்தையும் இணைக்கின்றன’ என்கிறார். இம் மூன்று காவியங்களினுடைய நிகழ்புலமாகவும் அவற்றினூடாக நேரிடும் காட்சிகளாகவும் புனையப்பெற்றவை நவீன மயமாகிக்கொண்டிருக்கும் கிராமங்களும் அவற்றினுடைய மாறிக்கொண்டிருக்கும் வாழ்க்கைச் சித்திரங்களுமே ஆகும்.

‘பாரதியால் வேதபுரமாகக் கற்பனை செய்யப்பட்ட விஷயமே என்னால் எட்டயபுரமாக உணரப்பட்டது. அதைப் போன்றே இந்தியத் தன்மையுள்ளன் எந்த ஊராகவும் எட்டயபுரத்தை உருவகிக்கலாம்’ என்கிறார் கலாப்ரியா. அதே போல இவருடைய ‘சுயம்வரம்’ பற்றி விவாதிக்கையில் ‘இந்தக் கவிதை அடிப்படையில் மிகப் பழையதின் மிகப் புதிய சாயையாகத் தோன்றுவதன் இயல்பைக் குறிப்பிடவேண்டும்’ என்கிறார் நகுலன். இந்தக் கூற்று கலாப்ரியாவின் கவிதைகளை நெருங்கிக் காண கூடுதல் வெளிச்சத்தைத் தருகிறது.

இந்தத் தேவதாஸுக்காய்
யாராவது இவளை உடனே
மீட்டுதலில் உடையும்
வீணைத் தந்தியென
மிக மென்மையாய்க்
கொலை செய்யுங்கள்
இன்னொரு பிறவியில்
நீங்கள் ‘தேவதாஸ்’
ஆகும்போது
உங்கள் கடைசிக் காலத்தில்
வண்டியோட்டி
நன்றி கடன்
செலுத்துகிறேன்.
(பக்-90 ,கலாப்ரியா கவிதைகள் தொகுதி – 1)

என்பது போன்ற கலாப்ரியாவின் தொடக்கக் காலக் கவிதைகள் சிலவற்றில் தாகூருடைய தன்ணுணர்ச்சிப் பாடல்களின் சாயல்களைக் காணலாம். அவ்வாறான பாதிப்பை அவருமே ஒப்புக்கொண்டிருக்கிறார். என்றாலும் வெகுவிரைவிலேயே அவர் தன்னைச் சட்டை உரித்துக்கொண்டு தனக்கான சுயமான வெளிப்பாட்டு மொழியை வரித்துக்கொண்டுவிடுகிறார். தான் எழுத வந்த தொடக்கத்தில் நா.காமராசன், லா.ச.ரா, சி.மணி, ஞானக்கூத்தன், நீலமணி, கல்யாண்ஜி ஆகியோரின் மொழியால் கவரப்பட்டதாகக் குறிப்பிடும் கலாப்ரியாவின் கவிதைகள் மிகை எதார்த்த படிமங்களும், எதிர்முரண்களும், வன்முறையின் தெறிப்புகளும் கூடிய தனித்துவமான நடையால் முன்மாதிரியற்ற ஒன்றாகவும், பிறரால் எளிதில் பிரதி செய்ய முடியாததாகவும் அமைந்தன.

ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாததுபோலத் தோன்றும் உதிரிக் காட்சிகளை ஒற்றியெடுத்து ஒரு மைய உணர்வின் இழையால் கோர்த்திடும்போது உருப்பெறும் மலர்ச்சரம் போலான வடிவில் அமைந்த பனி, மூலை தேடி மூலை தேடி, எம்பாவாய், ஸ்ரீ பத்மநாபம், ரிஷ்ய சிருங்கம் போன்ற சற்றே நீண்ட கவிதைகள், பிறகு சோதனை முயற்சிகளாகச் செய்யப்பட்ட குறுங்காவிய வடிவங்கள் இவை எல்லாவற்றிலுமே பொதுவாக ஒரு விலகின பார்வையையும் விட்டேற்றியான வெளிப்பாட்டு மொழியையும் காணலாம்.

இவருடைய தொடக்ககாலக் கவிதைகளும் நீள் கவிதைகளும் குறுங்காவியங்களும் அடங்கிய முதலாவது பெருந்தொகைநூல் சற்றேறக் குறைய 40 ஆண்டுகளாக எழுதியவற்றை உள்ளடக்கியது. அச்சில் சுமார் 250 பக்கங்கள் கொண்டது. அநேகமும் அவர் மாணவராகவும் வங்கிப் பணியிலும் இருக்கையில் எழுதப்பட்டவை எனலாம்.பணி ஓய்விற்குப் பிறகான கடந்த பத்து பனிரெண்டு ஆண்டுகளில் எழுதிச் சேர்த்தவைதாம் சுமார் 600 பக்கங்கள் அடங்கிய இரண்டாவது பெருந்தொகை நூல். ஒப்பீட்டளவில் நோக்கினால் முதல் தொகுப்பைக்காட்டிலும் இரு மடங்கு கனதியானது. இது வெறும் அளவு மாற்றம் மாத்திரமல்ல அவருடைய கவிதைகளின் பண்பு மாற்றமும் கூடத்தான். இதற்கு ஒருபுறக் காரணமாக இவருடைய பணி ஓய்வை சுட்டலாம் என்றாலும் அது பௌதீகமானது, இரண்டாம்பட்சமானது மட்டுமே. முதன்மையான காரணம் என்று கலாப்ரியா முன்வைப்பது இணைய வழித் தொடர்பையே. அதன் வழியாகப் பல புதிய இளைஞர்களை வாசிக்க முடிந்தது. அவர்களிடமிருந்து பல புதிய செய்திகள் அறிய முடிந்தது. அது எழுதுவதற்குப் புதிய உத்வேகத்தை அளித்தது என்கிறார். முகநூலில் முனைப்புடன் எழுதியது அதற்கான உடனடி எதிர்வினைகள் ஆகியன தொடர்ந்து இயங்குவதற்கு ஊக்கம் தருவதாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

இக்கட்டத்திலான கவிதைகள் எண்ணிக்கையில் கூடுதலாகவும் அதே சமயத்தில் அளவில் சிறியனவாகவும் அமைந்தவை. அநேகமாக மனதில் எழும் ஒரு படிமத்தை முன்னும் பின்னுமாக விரித்தெழுத முனைப்புக் காட்டாமல் வெறும் படிமம் என்கிற அளவிலேயே சுருங்கச் சொல்லி அமைத்துவிடுகிறார். மொழியிலும் பெரிய விந்தைகளையோ, பழைய சீற்றத்தையோ இவற்றில் காணமுடிகிறதில்லை. என்றபோதிலும் விண் பருந்தொன்றின் தரை தாழல் போல அசாதாரணமான அவதானங்களை மிகவும் அநாயசமாகச் சிற்சில வரிகளில் பற்றிப் பறித்துவிட முடிகிறது.

சும்மா ஓட்டி ஓட்டி
ஆதூரமாய்
தடவி நிறுத்துகிறார்
அவளின் தையல் இயந்திரத்தை
சமீபத்தில் தனித்துப்போனவர்
(பக்-425 ,கலாப்ரியா கவிதைகள் தொகுதி – 2) 

‘வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டது’ என்கிற சொற்றொடரே ஒரு தேய்வழக்காக மாறிவிட்டிருக்கும் காலத்தில் ஒரு இயந்திரம் இல்லாமல் போய்விட்ட ஒரு மனித இருப்பைப் பதிலீடு செய்வது என்பது மிகவும் சிக்கனமாகச் சொல்லப்பட்டுவிடுகிறது இச் சிறிய காட்சி வழியே. எஸ்ரா பவுண்ட் சொல்லியிருக்கிறார், ‘ஒரு கவிஞனின் காரியம் ஒன்றே ஒன்றுதான். அது ஒரு நல்ல படிமத்தை உருவாக்குவது. அப்படி ஒன்றை அவன் உருவாக்கிவிட்டால் போதும். மீத வேலைகளை அதுவே பார்த்துக்கொள்ளும்’ அப்படிப்பட்ட அழகான பல படிமங்களை இவருடைய பிந்தைய காலக் கவிதைகளில் நிறையவே காணலாம்.

பகீரென்று இருக்கிறது
செண்பகப் பூவை
கடையில் குவியலாகப்
பார்க்கிற போது
(பக்-338, கலாப்ரியா கவிதைகள் தொகுதி – 2)

சில பூக்களைதான் நீங்கள் தொடுத்து சரமாகவோ மாலையாகவோ கட்டலாம். செண்பகப் பூ அப்படியான ஒன்றல்ல. ஒரு தனிப் பூவே அதன் அழகிற்காகவும் அதீதமான வாசத்திற்காகவும் தாங்கமுடியாதது எனும் போது அதைக் குவியலாகப் பார்ப்பது மனதை சமன்குலையச் செய்துவிடும் தானே? கலாப்ரியாவின் பல காட்சிப் படிமங்களுக்குச் செண்பகப் பூவைப் போலவே கடுத்த நெடியும் கண்ணைப் பிடுங்கும் அழகும் உண்டு. அதனாலோ என்னவோ அவற்றைத் தொடுத்துக் கட்ட முனையாமல் உதிரியாகவே மணக்கட்டும் என்று விட்டுவிட்டதுபோலச் செறிந்து கிடக்கின்றன இவருடைய பிற்காலக் கவிதைகள். சமவெளியினூடாகப் பரவிப் போகையில் வேகம் குறைந்து நிதானமாக நகரும் நதியை ஒத்தவையாக இவற்றின் நடை அமைந்திருக்கிறது. மொழியில் முந்தைய ஆவேசமும் அலட்சியமும் வடிந்து பிறிதொரு வகையில் கரிசனமும் கனிவும் கூடியிருப்பதைக் காணமுடிகிறது. மேலெழுந்தவாரியான ஒரு வாசிப்பிற்கு ஒப்பனைகளற்ற இக்கவிதைகள் வீச்சுக் குறைவானதாகத் தோன்றக்கூடும். ஆனால் அலையற்ற நீர்ப்பரப்பின் கண்ணிற்குப் புலப்படாத ஆழத்தை இவை தக்கவைத்துள்ளன என்பதே நிஜம்.

கண்களைக் கட்டிக்கொண்டு
கத்தி எறிபவன்
காட்சி முடித்து
கைத்தட்டல் வாங்கிக்
கண் அவிழ்க்கிறான்
இரவு கலவியை விட
இந்தப் பயப் பரவசம்
பரவாயில்லையென
எழுந்து நீங்குகிறாள்
அசையாது பலகையில்
சாய்ந்திருந்த அவன் மனைவி
(பக்-562, கலாப்ரியா கவிதைகள் தொகுதி – 2)

கலாப்ரியா தனது கவிதைகளினூடாக இடக்கரடக்கல் ஏதுமின்றிப் பட்டவர்த்தனமாக எழுதிப்போகும் பாலியல் சங்கதிகள் பலவும் எழுத்து மரபிற்கு வேண்டுமானால் மீறலாகத் தொனிக்கலாமே தவிரப் பேச்சு வழக்கில் இவையெல்லாமே இயல்பாகப் புழக்கத்திலிருப்பனவேயாகும். அவை நமது நடுத்தர வர்க்கத்து ஒழுக்கப் பாவனைகளுக்கப்பாலான வேறொரு யதார்த்தத்தைக் குறிப்புணர்த்துபவை. இத்தன்மையை முன்னிட்டே ‘இன்று தமிழ்க் கவிதையில் விலக்கப்பட்டவை, தவிர்க்கவியலாதவையாக மாறவும், வெளிப்படைத் தன்மை வரவேற்கப்படவும் கலாப்ரியாவின் கவிதைகளே காரணம்’ என்று சுகுமாரன் குறிப்பிடுகிறார். கிராமத்துக் கட்டுக் கதைப் போலத் தோற்றம் கொள்ளும் பின்வரும் கவிதையிலும் உட்கிடையாக ஒளிந்திருப்பது பாலியல் துய்ப்பு பற்றியதொரு குறிப்பே எனினும் சொல்லப்பட்ட விதத்தால் அது இயல்பான ஒன்றாக வாசக ஏற்பினை பெற்றுவிடுகிறது. அதிர்ச்சி மதிப்பு தொனிக்க நேரடியாக எழுதப்படும் கவிதைகளைக்காட்டிலும் பூடகமாகச் சொல்ல முனைகிற இதுபோன்ற புனைவுகளுக்கு நீடித்த விளைவு உண்டு.

புதிதாகக்
கதிரறுக்கப் போனவள்
இடது சுண்டு விரலை
அரிந்துகொண்டுவிட்டாள்
அப்படியே வரப்பின்
எலி வளைக்குள்
போட்டு மூடிவிட்டாள்
புது நீர்ப் பாய்ந்த
ஒரு காலையில்
மஞ்சள் செடியாய் அது
பிஞ்சு விட்டிருந்தது
பொறுத்திருந்து
தோண்டினாள்
ஐந்துக்கு ஆறாக
விரல்கள் கிடைத்தன
மாட்டிக்கொண்டு
சந்தோஷமாக இருந்தாள்
புதிதாக ஒருத்தி
கதிரறுக்கப் போகிறாள்
(பக்-486, கலாப்ரியா கவிதைகள் தொகுதி – 2)

இவருடைய பிற்காலக் கவிதைகளில் அவதானிக்க முடிந்த இன்னொரு விஷயம், தன் கண்ணில் படுகிற காட்சிகள் எல்லாவற்றையும் கவிதையாக்க முனைகிற துடிப்பு. அது முடியாதபோது உண்டாகிற தவிப்பு குறித்த பதிவுகளை நிறையக் காணமுடிகிறது. 'எழுதுவது குறித்த எழுத்து' என்ற வகைமையில் அடங்கும் பல கவிதைகள் பிந்தைய தொகுப்பில் உண்டு. பெயரும் புகழும் கூடக் கூடத் தன் படைப்பின் போதாமை பற்றியும் தன்னுடைய திறன் குறித்து அதிருப்தி உணர்வும் உள்ளுக்குள் கொள்ளாத கலைஞர்களே இருக்கவியலாது. அவ்வாறான கவிதைகளில் ஒன்றுதான் பின்வருவது.

காற்றில் மோப்பம் பிடிக்கும்
பசிக்காவிட்டாலும்
இலை தழை முறிக்கும்
தந்தம் நீளமாகயிருந்தால்
ஓய்வாயொரு நிமிடம்
தொங்கவிட்டுக்கொள்ளும்
தானே தன் தலையில்
மண்ணள்ளிப் போட்டுக்கொள்ளும்
எப்போதும் எதையும்
துழாவிக்கொண்டேயிருக்கும்
ஆனைத் தும்பிக்கை
படைப்பு மனம்?
(பக்-511, கலாப்ரியா கவிதைகள் தொகுதி – 2)

தமிழ்க் கவிதை வெளியில் அரைநூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வருபவர் கலாப்ரியா. இவ்விதமாகத் தொடர்ச்சியாக நீண்டகாலமாக எழுதி வருபவர்கள் என்று விக்கிரமாதித்தியன், தேவதேவன், கல்யாண்ஜி, தேவதச்சன், சுகுமாரன் என வெகு சிலரையே இவ்வரிசையில் வைத்துக் காண முடியும். கலாப்ரியாவினுடைய தனிப்பட்ட படைப்பு இயக்கம் என்பதை இப்போது திரும்பிப் பார்க்கையில் தமிழ் நவீனக் கவிதை வரலாற்றின் ஒரு பகுதியாகவும் அது மாறி நிற்பதைக் காணலாம். அருவியெனத் துள்ளலுடன் தொடங்கி வழி நெடுக நனைவித்தபடியே நிதானமாக நகரும் நதியை ஒத்தது கலாப்ரியாவின் பயணம்.

சில வருடங்களாக அவர் கட்டுரை, நாவல்கள், சிறுகதை என உரைநடையில் நிறைய எழுதத் தொடங்கிவிட்டபோதிலும் கவிதையின் மீதான அவருடைய தாபம் தணிந்துவிட்டாற்போலத் தோன்றவில்லை. ‘சமீபமாக நான் உரைநடையிலும் சில முயற்சிகள் மேற்கொண்டேன். அதற்கு எதிர்பாராத வரவேற்பு இருந்தாலும், எனக்குத் தோன்றியது நான் கவிதையை விடக்கூடாது என்பதுவும் விட முடியாது என்பதுவும். ஒரு பொறியாக முகிழ்த்து கவிதையாக உருவாகும் கணம் தருகிற உணர்ச்சிகள் அளவிட முடியாததாக இருக்கிறது. அதை மகிழ்ச்சி என்றோ வலி என்றோ வன்முறை என்றோ ஆட்படுதல் என்றோ அனுபூதி என்றோ சிற்சில சொற்களில் அடக்கிவிட முடியாது’ என்று தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார். இந்த விடமுடியாத நெடிய உறவு காரணமாக அவருடைய எழுத்தில் கூடும் அயற்சியையும் ஆழமின்மையையும் சிற்சில இடங்களில் நாம் காணமுடிகிறது என்றபோதிலும், இத்தனை வருடங்களாகப் பழகித் தோய்ந்த புலன்களின் கூர்மை காரணமாகத் தன்னியல்பாகக் கூடி வருகின்ற வரிகளில் நாம் வசமிழக்கின்ற தருணங்களும் பல உண்டு. எப்போதாவது நிகழ்கின்ற அத்தகைய அபூர்வத்தைப் பற்றிதான் பேசுகிறது, பின்வரும் கவிதை.

பாடத் தெரிந்த சினேகிதன்
கேளாமலே பாடுவதும்
ரேகை பார்க்கத் தெரிந்தவன்
தானாகவே பலனுரைப்பதும்
வாயுரைக்க வந்த மருத்துவன்
நோய் நாடித் தானே
வாய்ப்பச் செய்வதும்
எழுதுவது கவிதையாவதும்
எப்போதாவதுதான் நிகழும்.
(பக்-576, கலாப்ரியா கவிதைகள் தொகுதி – 2)

சங்க இலக்கியம், நீதி நூல்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தனிப்பாடல்கள், மரபுக் கவிதைகள், நவீனக் கவிதை என்று நீளும் தமிழ்க் கவிதை மரபில் எல்லாப் புற மாறுதல்களுக்கப்பாலும் ஒரு சாராம்சமாகத் தொடரும் அக உயிர்ப்பின் ஒரு துடிப்பை கலாப்ரியாவின் கவிதைகளிலும் நாம் கேட்க முடியும் என்பதே இதன் சிறப்பு.

Thursday, 27 August 2020

அன்னையிட்டத் தீ!

 ஆசி வேண்டிப் பணிந்த வேந்தனை நோக்கிப் புன்னகைத்த துறவி சொல்கிறார்: “முதலில் உன் தந்தை இறப்பார்; பிறகு நீயும் சாவாய்; இறுதியாய் உன் மகன் மரிப்பான்.” கேட்டதும் குழம்பித் திகைத்த மன்னனை உடன்வந்த அமைச்சர் ஆற்றுப்படுத்துகிறார். “இப்புவியிலேயே பெரிய சோகம் புத்திர சோகம் தான். அது தங்கள் வம்சத்திற்கு நிகழாது என்றே அவர் வாழ்த்தியுள்ளார்.” மனம் தெளிந்த மன்னன் மறுபடியும் ஒருமுறை அவரை வணங்கிச் செல்கிறான்.

பழுத்த இலை உதிரும் போது இயற்கையின் நியதி இதுவெனத் தேற்றிக் கொள்ளும் மனம் கூட பச்சைத்துளிர் ஒன்று வீழும்போது ஆற்றிக்கொள்ள இயலாமல் பரிதவித்துப் போகிறது. புத்த ஜாதகக் கதையொன்றில் தன் இளவயது மகனைப் பறிகொடுத்தத் தாய் ஒருத்தி வருகிறாள். ஒரே மகன் என்பதால் அவனை உயிர்ப்பித்துத் தருமாறு புத்தரிடம் அழுது அரற்றுகிறாள். அவளை அமைதிப்படுத்திய கௌதமர், மரணம் நிகழ்ந்திராத வீட்டிலிருந்து ஒருபிடி கடுகு வாங்கி வரப் பணிக்கிறார். அலைந்து திரிந்த பிறகும் அப்படியொரு வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் போகும் அத்தாய் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது என்று அறிய வருகிறாள். ஆனால் தனக்கு முன் தன்பிள்ளை போய்விட்ட தவிப்பை அவ்வுண்மை எவ்விதத்தில் தணிவித்திருக்கும் என்பது புதிர்தான். உணர்ச்சிகளின் கொந்தளிப்புக்கு முன் தர்க்கங்களுக்கு பெறுமதி ஏதுவுமில்லை.

முகநூலில் நான் விரும்பிப் படிப்பனவற்றுள் கவிஞர் பாதசாரியின் பதிவுகள் முதன்மையானவை. பற்றற்றதொரு நோக்கிலும் சுயஎள்ளல் தொனியிலும் அவர் எழுதிச் சேர்த்திடும் எண்ண விசாரங்கள், பல சமயங்களில் நம்முள் மென்னகையைத் தருவிப்பதோடு மட்டுமல்லாமல் நம்மை மன இறுக்கத்திலிருந்தும் விடுப்பதாகவும் அமையும். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அவர் எழுதியிருந்த ஒரு பதிவு, வழக்கத்திற்கு மாறாக, மனதைக் கனக்கச் செய்வதாக இருந்தது

ஓராண்டுக்கு முன் பணிவு ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டார். கடும் மனப்பிறழ்வில், ஓயாது பேசி, உறக்கத்திலும் பேசி, நிரந்தரமாக ஓய்ந்துவிட்டார். முடிவு நிகழ்ந்தது இப்போது தான் என்றாலும் இதற்கான மூலவித்து பல வருடங்களுக்கு முன்பாகவே ஊன்றப்பட்டுவிட்டது.

இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காலையில் ஆறு மணிக்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டுப் போய் தான் பணிபுரிந்து வரும் மருத்துவமனையின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் போது வந்த தகவல் இடியென இறங்கி அவரைச் சிதறடித்தது. வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்த அவருடைய ஒருவயது குழந்தை வாசலில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் விழுந்து மூழ்கிவிட்டது. கணவர் இவரை ஸ்கூட்டரில் கொண்டுவந்து பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு மறுபடியும் வீடு திரும்புவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எப்போதும் போல அவர்களோடு ஸ்கூட்டரில் முன்னால் நின்றுகொண்டு வராமல் அன்று பார்த்து வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருந்த பையனை கவனிக்காமல் மாமியார், நாத்தனார் கவனக் குறைவாக இருந்துவிட்டார்கள்.



கால் நூற்றாண்டு கடந்து, அந்த செவிலி பணிஓய்வு பெற்றவராக வீட்டில் உட்காரும் போது உள்ளத்தின் உள்ளே பதுங்கியிருந்த இனம்புரியாத, அறிவின் கரைதாண்டிய குற்றவுணர்வு, ஆழிப் பேரலையாக உருவெடுத்து அவருடைய மனநலனைச் சூறையாடிவிட்டது. இறந்த குழந்தைக்கு அன்று காது குத்தி, சடங்கு செய்வித்துப் புதைத்த நினைவுகள் அவர் மனதிலிருந்து நீங்கியிருக்கவில்லை.

ஒரு சாட்சி போல சம்பவத்தை விலகி நின்று விவரிக்கிற கவிஞர் கடைசியாக, ‘மனசாட்சி உள்ளவர் எவரும் குற்றவுணர்வுக்கு ஆட்படலாகாது, பட்டால் படுவினைத்துயர் அது காவு வாங்கும்’, என்று தமது பதிவை முடிக்கிறார்.

‘அனைத்து உயிரிகளிலும் அன்னை என்பவள் தான் மூர்க்கமானவள்’ என்றொரு ஆங்கில வழக்கு உண்டு. தன் குழந்தையின் பொருட்டு ஓர் அன்னை அடைய நேரிடுகிற துயரத்திற்கும் ஆவேசத்திற்கும் எல்லை ஏதும் இல்லை. அத்தகையதொரு அன்னையின் குரலாக ஒலிக்கிறது பின்வரும் புறநானூற்றுப் பாடல்.

“வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்ஓர் அன்ன இளையர் இருப்பப்
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால்கழி கட்டில் கிடபித்
தூவென் அறுவை போர்ப்பித் திலதே”

திணை – கறந்தை, துறை – வேத்தியல்
புறம் – 286, பாடியவர் – ஒளவையார்

‘வெள்ளாட்டுக் கிடாக்களைப் போல அவனையொத்த இளைஞர் பலர் இருந்தபோதிலும் அவர்களுக்கும் மேலாக என் மகனுக்கு வழங்கப்பட்ட கள், அவனை காலில்லாத கட்டிலாகிய பாடையில் கிடக்க வைத்து, தூய வெண்ணிற ஆடையால் மூடச் செய்திருக்கிறது.‘ இங்கு மகனைப் பறிகொடுத்த அன்னை அழுது அரற்றினாள் அல்ல. மாறாக அவளது சீற்றம், தணிந்த குரலில் ஆனால் தணியாத வெம்மையோடு வெகு சிக்கனமாக வெளிப்படுகிறது – இக்கவிதையில். இவ்வளவு கால இடைவெளிக்குப் பிறகு இப்போது படிக்கும் போதும் உறையாதிருக்கும் அத்துக்கம் இவ்வரிகளில் இன்னமும் கசிந்து கொண்டிருப்பதை உணரலாம். இதற்கு மாறாக மன்னரால் கள் வழங்கப்பட்ட தன் மகன், அவருக்காக வேண்டிப் போரில் மரித்திடும் பேறு பெறாமல் போயினானே என அத்தாய் வருந்துவதாகப் பொருள் கொள்பவரும் உண்டு. அது போரை ,வெற்றியை, வீரத்தை சிறப்பிக்கும் முகமாக வரித்துக்கொண்ட ஆண்மைய  நோக்கினின்று பிறப்பது. ஆனால், ஒரு தாயின் ஆற்றாமை எனக் காண்போமாயின் முதற்சொன்ன பொருளே சாலவும் பொருந்தி நிற்கும்.

என்னுடைய நண்பரொருவர் பயிற்சிபெற்ற உளவியல் ஆலோசகர். தொடக்க நிலையிலான மனநலப் பிரச்சனைகளுக்கு சம்மந்தப்பட்டவர்களோடு உரையாடி, அவர்களுடைய சிக்கலின் மூலத்தைக் கண்டறிந்து தகுந்த ஆலோசனைகள் வழங்குவது அவருடைய பணி. பெயர் , ஊர் முதலிய அடையாளங்களைத் தவிர்த்துவிட்டு அவர் சொன்ன ஒரு நிகழ்வு நினைவில் ஆழப் பதிந்துபோனது.

திருமண வயதிலுள்ள இளம்பெண் பொறியியல் படித்து முடித்து பெயர்பெற்ற பன்னாட்டு நிறுவனமொன்றில் கைநிறைய ஊதியத்துடன் பணிபுரிகிறாள் .பள்ளிப்பருவம் தொட்டு உடன் பயின்றுவரும் நண்பன் கல்லூரியின் இறுதிவருடத்தில் அவள் மீதான தன் காதலைச் சொல்கிறான். முதலில் தயங்கினாலும் அவனுடைய தொடர்ச்சியான வேண்டுதல்களுக்கு  இணங்கி சம்மதிக்கிறாள்.

சிலவருடங்கள் இனிமையாகக் கழிந்தது. திருமணம் குறித்து வீட்டில் பேச வேண்டும் என்கிற நிலை வரும்போது பையன் தயங்குகிறான். அவன் வீட்டில் அம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. அப்பெண்மணி முதலில் மகனின் முடிவைக் கடுமையாக எதிர்க்கிறார். பிறகு அவனுடைய மனவாட்டத்தைக் கண்டு சற்றே  இறங்கிவந்து ஒரு தீர்வை முன்வைக்கிறார். குல தெய்வம் கோவிலில் வைத்து பூ போட்டு பார்ப்பது. முடிவு சாதகமாக வந்தால் அம்மா சம்மதிப்பது, பாதகமாக வந்தால் மகன் விட்டு கொடுத்து விடவேண்டும். பையனுக்கு எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து விடுபட்டால் போதும் என்கிற நிலை. தலையாட்டுகிறான்.



ஒரு வெள்ளிக்கிழமைக் காலையில் சாமி சன்னதியில் அவர்கள் நினைத்துக்கொண்ட வெள்ளைப் பூவுக்கு பதிலாக சிவப்பு பூ கையில் வந்தது. பையன் தயங்கித் தயங்கி வந்து தன்னை மன்னித்துவிடுமாறு அப்பெண்ணிடம் அழாதகுறையாக வேண்டுகிறான்

“சுயமாக முடிவெடுக்கத் தெரியாத குழப்பவாதி சார் அவன்” என நண்பரிடம் குமுறினாள் அப்பெண். “பள்ளி நாட்களிலிருந்து அப்படிதான். எந்த வண்ணத்தில் உடை எடுப்பது, என்ன உணவிற்கு ஆர்டர் செய்வது, எந்தப் படத்திற்கு செல்வது எனச் சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட தயங்கித் தடுமாறுவான். நான்தான் அவனுக்காக முடிவெடுப்பேன். கைளைப் பற்றிக்கொண்டு நன்றி சொல்வான். ‘நீ இல்லாவிட்டால் நான் என்ன ஆவேனோ தெரியாது’ என்று குரல் ததும்ப அவன் சொல்லிய போதெல்லாம் நான் நெஞ்சு விம்ம நின்றிருக்கிறேன். இன்று என்னை வேண்டாம் என்று உதறிவிட்டுப் போக அவனால் எப்படி முடிந்தது என்று ஆத்திரம் ஒருபக்கம் வந்தாலும், மறுபக்கம் நான் இல்லாமல் அவன் எப்படி சமாளிப்பான் என்கிற கவலை தான் என்னைப் பெரிதாக வருத்துகிறது. வேலையில் கவனம் சிதறகிறது. வீட்டில் எல்லோரிடமும் எரிந்து விழுகிறேன். நண்பர்களைப் பார்ப்பதில்லை. வெளியே எங்கும் போவதில்லை. நான் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிப் போய்க்கொண்டிருக்கிறேன். இது என் சுபாவமேயல்ல.“ கண்ணில் நீர் வழியச் சொன்னவளை நிறைய பேசவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்த நண்பர் கடைசியாக அவளிடம் வினவுகிறார்.

“ஒருவேளை மனம் திரும்பி வந்தால் அவனை மறுபடியும் நீ ஏற்றுக்கொள்வாயா?”

என்ன சொல்வது எனப் புரியாமல் ஒருநிமிடம் மெளனமாக யோசிக்கிறாள்.

“என்னை வேண்டாம் என்று மறுத்த போதே அவன் மீதிருந்த காதலெல்லாம் வடிந்து விட்டது. இப்போது நான் இப்படி கிடந்து அல்லல்படுவதெல்லாம் அவன் பாவம் தனியே எப்படி சமாளிக்க போகிறானோ என்கிற பச்சாதாபத்தால் தான் என்று தோன்றுகிறது.”

நண்பர் அவளைக் கண்மூடி உள்மனதை உற்றுக் கவனிக்கச் சொல்லிவிட்டு, அவள் ஞாபகத்தை மெல்ல மெல்லப் பின்னகரச் செய்கிறார்.

“நீ அவனை எப்போது முதன் முதலாகப் பார்த்தாய்? நினைவுபடுத்திச் சொல்”

அவள் மெதுவாக நினைவின் தடத்தில் பின்னோக்கிப் பயணிக்கிறாள். கல்லூரி நாட்களையெல்லாம் கடந்து பள்ளிப் பிராயத்திற்குள் நுழைகிறாள்.

“ம். இப்போது கவனத்திற்கு வந்துவிட்டது” தலையை ஒருதரம் உதறிக்கொண்டவளாகத் தன் கண்களைத் திறவாமலேயே சொல்கிறாள்.

“அது நடந்தது மூன்றாம் வகுப்பில். நான் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் அவன் புதிதாக வந்துசேர்கிறான். அவனுடைய அப்பா விட்டுவிட்டுப் போன பிறகும் வாசலையே பார்த்து தேம்பிக் கொண்டிருந்தவனைப் பார்த்து, ‘பயப்படாதே’ என்று சமாதானப்படுத்தி பையில் வைத்திருந்த சாக்லேட்டில் பாதியைப் பிட்டு அவனுக்குத் தந்தேன்”. நண்பர் பிறகு அவளிடம் பொறுமையாக விளக்குகிறார். ‘உங்களிருவருக்குமிடையில் ஆழமான ஒரு உறவு இருந்திருக்கிறது, பொய்யில்லை. ஆனால், அது நீங்கள் புரிந்து கொண்டது போல காதல் அல்ல. சின்னஞ்சிறுவனாக அவன் அழுதுகொண்டு வகுப்பில் நின்றிருந்த முதல் கணத்திலிருந்து அவனிடம் பரிவுகாட்டியும் பாவனை செய்தும் நீ வகித்து வந்திருப்பது ஓர் அன்னையின் பாத்திரத்தைத் தான். வீட்டில் அவனுக்காக முடிவுகளை எடுப்பது அவனது அம்மா என்றால், வெளியே எல்லாவற்றையும் நீ பார்த்துக் கொண்டாய். இரண்டு இடத்திலும் அவனாக சிந்தித்து சொல்பட வேண்டிய நெருக்கடிகள் எதுவும் இதுவரையிலும் நேர்ந்ததில்லை. இப்போது அம்மாவா? நீயா? என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது அவனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அம்மாவின் நிழலில் ஒளிந்து கொண்டுவிட்டான். இப்போது நீ வருந்துவதும் கூட இழந்த காதலை எண்ணி அல்ல. உன்னுடைய இந்தத் துக்கம் மகனைப் பிரிந்த அன்னையுடையதைப் போன்றதே”



அவள் அதிர்ச்சியாக நண்பரை ஏறிட்டுப் பார்க்கிறாள். அவர் புன்னகையோடு மேலும் தொடர்கிறார். ‘உனக்குக் கிடைக்காமல் போவது எல்லாமே இழப்பு என்று எண்ணாதே! சில சமயம், அது அதிர்ஷ்டத்தின் தீண்டலாகக் கூட இருக்கும் என்று சொல்வார்கள். ஒருவேளை, அவனைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் ஆண், பெண் உறவின் உண்மையான பரிமாணத்தை, அதன் கொடுக்கல் வாங்கலை முழுமையாக அறிந்திராமலே போயிருப்பாய். ஆனால், இப்போது எதிர்காலத்தில் வரவிருக்கும் கணவனுக்கு உகந்த மனைவியாகவும், உனது சொந்த குழந்தைக்கு அம்மாவாகவும் இருக்கப் போகிற நல்வாய்ப்பு உன்முன் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் ”

வெகுவிரைவிலேயே அந்தப் பெண் அவ்வழுத்தத்தினின்றும் விடுப்பட்டவளாக தன் அன்றாடத்திற்கு திரும்ப வந்துவிட்டதாக நண்பர் சொல்லி முடித்தார். அதன் பிறகு பலமுறை நான் இதைக் குறித்து யோசித்ததுண்டு. மூன்றாம் வகுப்பில் படிக்கும் ஒரு எட்டு வயதான பெண் அந்த வயதிற்கேயுரிய குழந்தைத்தனத்தையும் தாண்டி தன்வயதுடைய ஒரு சிறுவனுக்கு தாய்மையின் பரிவைக் காண்பிக்க முடிந்திருக்கிறது. அது எவ்விதம் சாத்தியமாகிறது என்று வியந்து நின்றிருக்கிறேன். பரிணாமத்தின் தொடர்ச்சி இடையில் எங்கும் அறுந்துபடாமல் இருக்க இயற்கை வரித்துக் கொண்டிருக்கும் உத்திதான் போலும் இத்தாய்மை உணர்வு என்று தோன்றியது. தாயைக் குறித்து எண்ணிறந்த கவிதைகள் நாம் படித்திருப்போம் என்றாலும் தாய்மை என்கிற பிம்பத்தை பெரிய அளவில் ரொமான்டிசைஸ் செய்யாமலும், அதே சமயத்தில், அதன் அசலான ஆகிருதியை துல்லியமாகவும் நேரடியாகவும் விவரிக்கிறது ராஜாசுந்தரராஜனின் பின்வரும் கவிதை. இது அவருடைய மொத்தக் கவிதைகள் அடங்கிய “தாய்வீடு” தொகுப்பில் உள்ளது.

அம்மா

வெளிப்பட்டு வீறிச் செல்கிற நீராவி
ஒரு விசையாக மாறி
எந்திரங்களை உருட்டும்
கொதிகலன் நாள்பட நாள்பட இற்றுப்போகும்
வளர்ச்சிப் பாதையின் ஒரு கட்டத்தில்
செடிகளுக்கு
விதையிலைகள் வேண்டாதனவாகிவிடும்
குஞ்சுகள் கோழியாகும்
சேவல்கள் கூட வரும்
அடைகாத்த சிறகுகளில் இறகுகள் உதிர்ந்துவரும்
காற்றோடு போய்
அங்கங்கே வேரூன்றி விடுவன
வித்துகள்
சாவிலும் கூட
தாயோடு வருவன
அடிவயிற்றுத் தழும்புகள்


 

நம்முடைய கரிசனமும், வாஞ்சையும் நம் சந்ததிக்குத் தான் மிகுதியும் போய்ச் சேருகிறது. பெற்றோருக்கு அதில் பகுதி கிடைத்தாலே அதிகம் தான். அடைக்கப்பட முடியாதது பெற்றகடன். அதனால் தானோ என்னவோ தாய்மை பற்றின ஆக்கங்கள் அனைத்திலும் நிழலெனப் படிந்திருக்கும் ஒருவித சுய இரக்கத்தையும் குற்றவுணர்வையும் நாம் காண முடியும். பிள்ளைகளின் அந்த விலகலை உயிர் இயல்பு இதுவென பற்றற்றதொரு தொனியில் இக்கவிதை சுட்டுகிறது. இத்தொனியினாலேயே அவ்வுணர்வு மேலும் ஆழமாகிறது. ‘இனியும் பாலாகப் பாலாகத் துடிக்கும் மார்புக் குருதியின் நாடி’ என்றொரு வரி பாதசாரியின் கவிதையில் வரும். ஒரு பெண் தன் வாழ்வின் போக்கில் இயல்பெனக் கடக்கும் அந்த அனுபவம் எம் போன்ற ஆணுக்கு எவ்வளவு யோசித்தாலும் தீராத அதிசயம் தான். அதை வியப்பதன்றி வேறென்ன செய்யவியலும் அவர்களால்?

Tuesday, 25 August 2020

மாமதயானை

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவை முன்னிட்டு , ஜெயமோகனும் நண்பர்கள் சிலரும் திருப்பூர் அருகில் உள்ள ஒரு சிறிய பள்ளிக்குச் சென்றிருந்தோம் . செவித்திறன் இழந்த , வாய் பேசவியலாத குழந்தைகள் நூற்றுக்கும் அதிகமானோர் பயிலும் சிறப்பு பள்ளி அது .'குக்கூ' சிவராஜ் அப்பொழுது அங்கிருந்தார் அவருடைய முன்னீட்டில் 'யானை டாக்டர் 'சிறுகதையை அக்குழந்தைகள் வாசித்திருந்தனர். அந்த அனுபவத்தை தங்கள் கற்பனையின் துணை கொண்டு கோட்டோவியங்களாக வரைந்து வண்ணம் தீட்டி இருந்தனர். ஒரு வகுப்பறை முழுவதிலும் அவர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சித்திரங்களைக் கண்டதும் நாங்கள் நெகிழ்ந்து போனோம் .சிறிதும் பெரிதுமான அளவுகளில் கறுப்பு மட்டுமல்லாது சிவப்பு ,பச்சை ,நீலம் என எல்லாவிதமான நிறங்களிலும் மிளிர்ந்தன யானைகள் . அவை எல்லாவற்றிலும் தென்பட்டதொரு ஒற்றுமை , அவை அனைத்துமே ஏகதேசமாக குழந்தமையின் சாயலை கொண்டிருந்தன என்பதுவே அல்லது அச்சித்திரங்களின் எளிமையினால் பார்த்த எனக்கு அவ்வாறு தோன்றியிருக்கலாம். 

விழா அரங்கில் அக்குழந்தைகளின் முன் சிவராஜ் 'யானை டாக்டர் 'எழுதியவர் என்று ஜெயமோகனை அறிமுகப்படுத்தியபோது பலமாக கரவொலி எழுப்பிய அக்குழந்தைகளின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியும் உற்சாகமும் அளவில்லாதது . தன் எழுத்துக்காக எவ்வளவோ வாசக எதிர்வினைகளை ஜெயமோகன் கண்டிருப்பார் , அவை அனைத்தையும் காட்டிலும் இக்குழந்தைகளின் நன்றி பெருக்கு நிச்சயம் தனியான ஒன்றுதான். ஒருவேளை ஜெயமோகனின் வேறு ஒரு கதையை படித்து இருந்தால் , அவர்கள் இவ்வளவு தூரம் ஈர்க்கப்பட்டிருப்பார்களா என்பது ஐயமே ?  யானைதான் அக்குழந்தைகளின் குதுகுலத்திற்கு முதன்மையான காரணம் என்றும் தோன்றியது. பொதுவாகவே தம்மைக் காட்டிலும் அளவில் பெரியதான உருவம் எதைக் கண்டாலும்  குழந்தைகள் முதலில் அடையக்கூடிய உணர்வு திகைப்பு அல்லது அச்சம் என்பதாகவே இருக்கும் . அதற்கு நேர்மாறாக , ஒரு யானையைக் காணும் போது அவர்கள் உற்சாகம் அடைகிறார்கள் இது வினோதமாக தெரிந்தாலும் கூட யானையின் தோற்றம் அல்லது நடத்தையில் குழந்தைகளை ஈர்க்கக் கூடிய ஏதோ ஒரு தன்மை இயல்பாகவே இருக்கிறது. அதன் ஆகிருதியைக் கண்டு மிரட்சி அடைவதற்கு பதிலாக அதனை அளவில் பெரியதொரு விளையாட்டு பொம்மை என்பதாகவேக கருதி அதன் மேல் ஏறி விளையாட ஆசைப்படுகிறார்கள்.

தரைவாழ் விலங்குகளிலேயே மிகப் பெரியது யானைதான். சராசரியாக 6 ஆயிரம் கிலோ வரையிலும் எடையைக் கொண்டிருக்கும் அது கோவில் மண்டபங்களில் காதுகளை அசைத்தபடி அசட்டையாக நின்றுகொண்டு ஒரு வாழை பழத்திற்காக பக்தர்களை ஆசீர்வதிக்கும் . அதன் தும்பிக்கை தனித்தன்மை வாய்ந்தது அதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. அதைக்கொண்டு மெலிந்த ஒரு குண்டூசியை கூட அதனால் தவறவிடாமல் பொறுக்கி எடுத்துவிட இயலும். ஆனால் அதுவோ பாகனால் தெருவில் நடத்திவரப்படிகையில் அந்தத் துதிக்கையை நீட்டி கடைகடையாக சில்லறை வேண்டி யாசிக்கிறது. அபாரமான நினைவுத் திறன் உடையதாகக் கணிக்கப்படும் யானையை , ஒரு கண்ணாடி முன் நிற்க வைத்தால் , அதனால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியும். மனிதக் குரங்குகளைத் தவிர்த்து இத்தகைய தன்னுணர்ச்சி கொண்ட விலங்கு யானைதான் என்கிறார்கள் உயிரியலாளர்கள். 

அதனால்தானோ என்னவோ மனிதர்களால் எளிதில் பழக்கப்படுத்த கூடிய ஒன்றாக இது இருக்கிறது .தனது வலிமையை முழுமையாக உணர்ந்த ஆனால் அதை அநாவசியமாகப் பிற உயிர்களிடம் காட்டிடாத  ஒரு பெருந்தன்மை அதனிடம் இயல்பாகவே இருக்கிறது. ஒரு தலைவனுக்குரிய தகுதியாக அமைய வேண்டியது இத்தன்மையே ஆகும். இலகுவான சூழலில் எல்லோராலும் எளிதில் அணுகும்படியானவனாகவும் அதுவே , அசாதாரணமான தருணம் என்று  வரும்போது அஞ்சாது அதை எதிர்கொள்ளும் அளவு இறுகிய நெஞ்சத்தவனாகவும் அவன் இருக்கவேண்டும் . அவ்வையார் பின்வரும் புறநானூற்றுப் பாடலில் யானை என்கிற ஒற்றை படிமத்தின் வாயிலாக அதியமான் நெடுமான் அஞ்சியை அவ்வாறான வலிமையும் எளிமையும் கொண்ட ஒரு தலைவனாக நமக்கு காட்சிப்படுத்துகிறார்.

 

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழா அலின்

நீர்த்துறை படியும் பெருங்களிரு போல

இனியை , பெரும! எமக்கே; மற்றுஅதன்

துன்அருங் கடாஅம் போல

இன்னாய், பெரும!நின் ஒன்னா தோர்க்கே.

-        அவ்வையார்

புறம்-94

திணை- வாகை

துறை- அரச வாகை

 

ஊரின் கண் உள்ள சிறுவர்கள் கூடி , தனது வெண்மையான தந்தங்களைக் கழுவுவதற்கு ஏதுவாக நீர் துறையில் அமிழ்ந்திருக்கும் பெரிய யானையை போல எம்மனோர்க்கு நீ இனியவன் . ஆனால் , அதே யானை மதம்கொண்டு சினந்து எழுவதே போலும் எம் எதிரிகளுக்கு நீ இன்னாதவன் என்பதே இப்பாடலில் எளிய பொருள்

 சிங்கமாகவும் புலியாகவும் இருந்து அஞ்சி நடுங்கச் செய்வதில்லை ஒரு யானையைப் போல் வலிமை இருந்தும் சக உயிர்களிடத்தே மென்மையாக இருப்பதே மெய்யான வீரம் ஆகும் .

            +++

ஒரு கோடையில் , நண்பர்கள் சிலர் பர்கூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் அருகே , சிறிய கல் வீடு ஒன்றில் தங்கி இருந்தோம் . உப்பும் உறைப்பும் போதாது ,  நாங்களே சமைத்து உண்ட எளிமையான இரவு உணவிற்குப் பிறகு , முன் வாசல் திண்ணையில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டிருந்தோம். மின் வெளிச்சத்தின் எதிரீடு ஏதுமில்லாத வானத்தில் , எட்டிப் பிடித்தால் அள்ளிக் குவித்து விடலாம் போலக் கொட்டிக்கிடந்த நட்சத்திரங்களை வியப்போடு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில் , திடுமென  கூப்பிடு தூரத்தில் கூச்சல் எழுந்தது . தொடர்ந்து விட்டுவிட்டு சிறிய வெடிச் சத்தமும் சேர்ந்து வந்தது.

 அந்தக் கூச்சலோடு அத்திசையில் இருந்து அணைந்து எரியும் விளக்குகளின் வெளிச்சமும் எங்களை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டோம் 'யானை இறங்கியிருக்கும்' உற்று கவனித்த உள்ளூர் நண்பர் சொன்னார் .சில நிமிடங்களில் நாங்கள் இருந்த  இடத்திற்கு

எதிரே , கண் எட்டும் தொலைவில் இறக்கத்தில் இருந்த பாதையில், மேலும் கீழுமாக அசையும் விளக்குகளின் வெளிச்சத்தில், உலோகத்தை தட்டுவதால் எழும் கனத்த  ஒசைக்கு  நடுவே, ஓட்டமும் நடையுமாக விரையும் யானை ஒன்றைக் கண்டோம் .காட்டின் எல்லை வரை அதைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவார்கள் என்றார்  நண்பர். முன்பு அரிதாக நடக்கும் ஒன்றாக இருந்தது இப்பொழுது அடிக்கடி நிகழும் சம்பவமாகிவிட்டது . அதற்கு யானைகளைக் குறை சொல்ல முடியாது .ஒரு யானைக்கு உணவாக நாளொன்றுக்கு சராசரியாக 200 கிலோவுக்கும் அதிகமான பசுந்தழை தேவைப்படும். கூட்டமாகச் சென்று அவை உண்பதால் அழிந்து போகும் இடத்தை விட்டு பெயர்ந்து வேறு இடத்திற்கு  சென்று, செடிகள் வளர்ந்தபிறகு அவ்விடத்திற்கு அவை திரும்ப வரும் .அவ்வாறான இடப்பெயர்ச்சிக்கு உகந்ததாக அல்லாமல்  அடர்ந்த காடுகளின் பரப்பு சுருங்கி போனதாலும் அவற்றின் வலசை பாதைகள் மனிதர்களால் தடைசெய்யப் படுவதாலும் யானைகள் இவ்வாறு ஊருக்குள் திரும்பி விடுகின்றன என்றார். அவர் குரலில் , மனுஷங்க பிழைப்பே நிச்சயம் இல்லாத காலத்தில் , இதற்கெல்லாம் யார்தான் என்ன செய்துவிட முடியும் என்பதை போல வருத்தம் தொனித்தது .

 நாங்கள் சற்று நேரம் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை .அவரவர் எண்ணங்களில் ஆழ்ந்திருந்தோம். முன் இரவில் நட்சத்திரங்களின் மெல் ஒளியில் , ஒரு பெரிய கரிய நிழலைப் போல நகர்ந்து சென்ற அப் பேறுருவைப்  பார்த்தது , ஏதோ ஒரு கனவு போல தோன்றியது. வெகு காலம் முன்பாக படித்திருந்த கதை ஒன்று எனது நினைவில் எழுந்தது .

 ஒரிரண்டு நல்ல கதையோ கவிதைகளோ எழுதிவிட்டு , அதன் பிறகு காணாமல் போய்விடும் எத்தனையோ பேர் தமிழில் இருக்கிறார்கள். கோவில்பட்டியை சேர்ந்த கௌரிசங்கர் அவர்களில் ஒருவர் . முழுவதும் கறுப்புத் தாள்களில் வெண்ணிற எழுத்துகளால் அச்சிடப்பட்டு வந்த அவருடைய கவிதைத் தொகுதியான ' மழைவரும் வரையில் ' அது வெளியான காலத்தில் அதிகமும் கவனிக்கப்பட்டது. கூடி வராத நேசம் குறித்த இழப்புணர்வை கழிவிரக்கம் தொனிக்காததொரு விட்டேற்றியான குரலில் பேசுபவையாக அமைந்தவை அக்கவிதைகள் என்று நினைவு. அவரது சிறுகதைத் தொகுப்பும் வெளியாகிருந்தது. தலைப்பு கதையாக அமைந்த 'முந்நூறு யானைகள்' என்ற சிறுகதை மெர்ஸி என்கிற பதின்ம வயதுப்பெண்ணைப் பற்றியது .

 அவ்வயதிற்கே உரிய பேதமையும் விளையாட்டுத்தனமும் அதே சமயத்தில் , பார்க்கின்ற ஆண்களை எல்லாம் பேதலிக்கச் செய்கிற அழகும் நிரம்பியவள் அவள்.  எல்லா அழகிகளைப் போலவும் அவளைக் குறித்தும் உண்மையும் கற்பனையுமாக பல வதந்திகள் ஊரில் உலவுகிறது. அக்கதையில் மெர்ஸி ஒரு சந்தர்ப்பத்தில் தனக்கு வந்த கனவு பற்றி தன் சினேகிதி தனசீலியிடம் விவரிப்பாள். ' நேற்று இரவு என் வீட்டுத் தோட்டத்தில் முப்பதாயிரத்து தொள்ளாயிரத்து ஏழு  யானைகள் வந்து நின்றன. அவ்வளவையும்வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்? வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் இருநூறு முந்நூறு என்று கொடுத்து அனுப்பியதில் தோட்டம் காலியாகிவிட்டது' என சிரித்துக்கொண்டே சொல்கிறாள் கனவில்தான் என்றாலும் , யானைகளைத் தூக்கிக் கொடுக்க எவ்வளவு விசாலமான மனம் வேண்டியிருக்கும். அந்த மனமே பிறகு அவளது அத்தனை துயரத்திற்கும் காரணமாக எப்படி அமைந்துவிடுகிறது என்று அந்தக் கதை விவரித்து போகும் .

 பாம்பு துரத்துவது , பள்ளத்தில் விழுவது என நம்மில் பலருக்கும் வரும் பொதுவான கனவுகள் சில உண்டு. அவற்றில் ஒன்றுதான் அறிமுகமற்ற புதிரான ஒரு இடத்தில் வெளியேற வழி தெரியாமல் நாம் அகப்பட்டுக் கொண்டு தவிப்பது போல் வரும் கனவு. அறிமுகமற்ற ஒரு நகரத்திற்கோ, பணிக்கோ பந்தத்திற்கோ அல்லது பழக்கத்திற்கோ  நாம் ஆட்படும்போது ,  அறியத் துடிக்கும் ஆவலில் உள்நுழைந்து விடுவது எளிதாக இருக்கும்.  அகப்பட்டுக் கொண்டதாக ஒரு அச்ச உணர்வு எழும்போது பார்த்தால் , திரும்பும் வழி தெரியாது திகைத்து நிற்போம். போகிற வழியில்தான் திரும்ப வருகிறோம் என்றாலும் இரண்டும் ஒன்றல்ல அவை இரண்டு  வெவ்வேறு பயணங்களால் ஆனது .

 கல்யாண்ஜியின் பின்வரும் கவிதையிலும் ஒரு யானை அவ்வாறு ஒரு வாசல்வழி நுழைந்துவிட்டு வெளியேற வழி தெரியாமல் அகப்பட்டுக் கொள்கிறது. 

சொப்பன வாசல்

________________

 உங்களுக்குத் தெரியும்

எங்கள் வீட்டுத் தலவாசல்

சிறியதும் இல்லை, பெரியதும் இல்லை

சொப்பனத்தில் வந்த யானையை

வெளியே விரட்டுகிறோம் எல்லோரும்

' இவ்வளவு சின்னவாசல் வழியாக

எப்படிப் போவேன்? ' அழுகிறது.

' போகிற வாசலாக அல்ல,

வருகிற வாசலாக நினைத்துப்

போ ' என்கிறோம்

போய்விட்டது சிரித்துக்கொண்டே

        - கல்யாண்ஜி

    ( நொடி நேர அரை வட்டம்)

 

ஒரு தீற்றல் கூடுதலோ குறைவோ இன்றி துல்லியமாக வரையப்பெறும் ஒவியங்களை ஒத்தவை கல்யாண்ஜியின் பெரும்பாலான கவிதைகள் . இக் கவிதையும் அத்தகைய கச்சிதமான காட்சித்தன்மை கொண்டதே.ஒரு சொல்லையும் கூடுதல் குறைவென்று ஒதுக்கவியலாது.நிற்க இதிலும் ஒரு யானை வெளியேறும் வழி தெரியாமல் திகைத்து நிற்கிறது. நினைத்தால் வாசலென்ன வீட்டையே கூட அதனால் அசைத்து தகர்த்துவிட முடியுமாகயிருக்கும். ஆனால் அதுவோ வழி தெரியாமல் அழுகிறது . ஒரு குழந்தையைப் போல. தெரிந்த பிறகோ சமாதானமடைந்து சிரிக்கிறது . அதுவோ இன்னும் குழந்தையைப் போலிருக்கிறது. தன் உருவத்திற்கு சம்மந்தமில்லாத உள்ளம் கொண்ட உயிரி அது.அதனால்தான் போலும் 'இயற்கையின் உன்னதமான படைப்பு யானைதான் , தீதொன்றுமிலாத பேருரு அது ' என்று ஆங்கிலக் கவி ஜான் டன் விதந்து கூறுகிறான்.

 நிர்வாகவியலில் 'சட்டகத்திற்கு  வெளியே சிந்தித்தல்' என்றொரு கருதுகோள் உண்டு . சிக்கலான பிரச்சினைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்ட மரபான வழியாகவே தீர்வுகாண முயல்வதை விடவும் ,  முறை சாராத யோசனைகள் மூலம் சமயங்களில் மிக எளிதான தீர்வைக் காண முடியும் என்கிறது அது. போகிற வழியையே வருகிற வழியாகவும் எண்ணிக் கொள் என்று இக்கவிதையில் அத்தகையோர்  யோசனையைதான் கவிஞர் முன்வைக்கிறார். முதல் வாசிப்பிற்கு இது ஏதோ மொழி மாற்றம் என்று தோன்றலாம் . ஆனால் அது எண்ணம் சார்ந்த மாற்றமாகவும் பிறகு செயல் சார்ந்த மாற்றமாகவும் ஆகும்போது வழி கிடைத்து விடுகிறது .

 டினோசரை  நெருங்குவது எப்படி ? என்கிற கேள்விக்கு ,  அது நம்மை நெருங்க செய்வதுதான் என்கிறார் தனதொரு கவிதையில் தேவதச்சன். இது கேட்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் , அதற்கு நாம் ஒரு வனமே ஆகுமளவிற்குப் பொறுமையுடனும் நிபந்தனையற்றும்  காத்திருக்க வேண்டும் . டினோசரை நெருங்குவதற்கு மட்டுமல்ல ஒரு கவிதையை நெருங்குவதற்கும்  கூட.

Monday, 2 September 2019

கல் அழியும், சொல் அழியாது


இன்று விடுமுறை என்பதாலும், சந்தித்து நீண்ட நாளாகி விட்டதே என்பதாலும் நண்பரொருவரை பார்த்துவிட்டு வரலாம் எனப் புறப்பட்டுச் சென்றேன்.  வீட்டின் முன் ஒரு கார் நின்றிருந்தது வாசலில் செருப்புகள் கலைந்து கிடந்தன.  உள்ளே போகலாமா, திரும்பி விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் போது நண்பரே வெளியில் வந்துவிட்டார் ’ஏன் இங்கயே நிக்கிறிங்க உள்ளே வாங்க’ என்று அழைத்துப் போனார்.  கூடத்தில் ஏற்கனவே நான்குபேர் அமர்ந்திருந்தனர் ஐந்தாவதாக எனக்குமொரு இருக்கை போடப்பட்டது.  வந்திருந்தவர்கள் அரிமா சங்கத்தினர். நண்பரும் அதில் உறுப்பினர், மாவட்ட அளவிலான பொறுப்பில் இருந்தார்.  நகரத்தில் ஒரு இரத்த வங்கி உருவாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அதற்கான திட்டவரைவின் படி ஒரு பெருந்தொகை திரட்ட வேண்டியிருந்தது அதன் பொருட்டு நன்கொடை வேண்டி யார்யாரை அணுகலாம் என ஒரு பட்டியல் தயாரிப்பது குறித்தே அவர்கள் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர் நண்பர் ஒரு பெயரை முன்வைத்தார்.  ’சாந்தமூர்த்தி சார்கிட்ட முதல்ல போகலாம் அவர் எவ்வளவு கொடுக்கிறார்ன்னு பார்த்துகிட்டு, பிறகு மத்தவங்ககிட்ட கேட்கலாம்’. யாருக்கும் அதில் மாற்றுக் கருத்து இருக்கவில்லை அவர் நகரத்தின் பிரமுகர்களில் நாயகமானவர் அல்லது அப்படித் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்புகிறவர் என்றும் சொல்லலாம் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதி, லாரி போக்குவரத்து, நூற்பாலை என பல தொழில்கள் அவருக்கு. உபயதாரர் நோட்டீஸ் அடித்து விநியோகிக்கும் தெருமுனை பிள்ளையார்க் கோவில்விழாவிலிருந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்று நடத்தும் அரசுவிழாவரைக்கும் நன்கொடை திரட்ட, முதலில் அவர் வீட்டுப்படிதான் ஏறுவார்கள். மேடையில் தொடர்ந்தாற்போல மூன்று நிமிடத்திற்கு மேல் பேசமாட்டார் என்றாலும், நகரில் நடக்கும் விழாக்களில் பாதிக்கும் மேல் அவர்தான் தலைமை, முன்னிலை, வாழ்த்துரை.  ’கொஞ்சம் விளம்பரப் பிரியரோ’ என்று நண்பரைக் கேட்டேன். ’அப்படியும் சொல்ல முடியாது இவரைக் காட்டிலும் பணக்காரர்கள் நாலைந்துபேர் இதே ஊரில் இருக்கிறார்கள்.  அவர்கள் யாருக்கும் இவரைப் போல கொடுக்கிற மனசு இல்லை’ என்றார்.

ஆறுமாதம் கழித்து நடந்த அந்த இரத்த வங்கித் திறப்பு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெரியவர் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.  பிறகு நடந்த பிரத்தேயக விருந்தில் பெரியவருக்குப் பக்கத்தில் நண்பரும் அடுத்ததாக நானும் அமர்ந்திருந்தோம் ’ஐயா, நானும் இந்த ஊருக்கு வந்த நாளா நல்லதுகெட்டதுக்குன்னு நன்கொடை புத்தகத்தை தூக்கிகிட்டு அலைஞ்சிருக்கேன் உங்க தயவும் தாராளமும் யாருகிட்டயும் இல்லிங்க’ நண்பர் சொன்னதைக் கேட்டு பெரியவர் தன்மையாகச் சிரித்தார் ’தம்பி நான் பொறக்கப்போ இந்த வசதியோட பொறக்கல போறப்போ இதுலிருந்து ஒத்த ரூபாயக்கூட எடுத்துக்கிட்டும் போகப் போறதில்ல. உங்களை மாதிரி நாலுபேர் சேர்ந்து ஒரு நல்ல காரியம் செய்யும் போது ஏதோ நம்மால் முடிந்தது' என்று அமரிக்கையாக சொல்லவும் நண்பர் வெகுவாக நெகிழ்ந்துபோனார். அவர் விடைபெற்று கிளம்பும் வரை கூடவே இருந்த நண்பர், கார் வரையிலும் உடன் சென்றார். கதவைத் திறந்து காரில் ஏறப்போனவர், ஏதோ எண்ணியவராக நின்றார். நண்பரின் தோள் மீது கைவைத்தப்படி கேட்டார்,

’தம்பி ? சின்ன வயசுல நீங்க தெருவுல நடந்துபோனா உங்களைத் தெரிஞ்சவங்க என்ன அடையாளம் சொல்லி கூப்பிடுவாங்க?’

’எங்க அப்பா பஞ்சாயத்து யூனியன்ல வேலை பார்த்தாருங்க ஐயா! அதனால் ஒவர்சீயர் பையன்னு சொல்லுவாங்க’

’என்னை எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா?’

நண்பர் பதிலேதுவும் சொல்லாமல் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்

’சாராயக்காரர் பேரன்’

’எங்க தாத்தா எப்பவோ தனக்கு வேணுமின்னு காச்சினதை, குடிச்சது போக தெரிஞ்சவங்களுக்கும், உறவுக்காரங்களுக்கும் கொடுத்திருக்காரர். வேண்டாதவங்க யாரோ மொட்டக் கடுதாசி போட்டு, கோர்ட் கேஸ் வரைக்கும் போயி போலீஸ் ரெக்கார்டுல பேராயிடுச்சி’

சட்டை பையிலிருந்து கண்ணாடியைத் துடைத்து அணிந்து கொண்டவர் ஒரு நிமிடம் போல மௌனமாக இருந்து விட்டு தொடர்ந்தார்.  அதனால எங்கப்பாவுக்கு ரொம்ப நாள் கல்யாணம் தடங்கலாகிப் போய் கடைசியாதான் எங்கம்மாவைக் கட்டிக்கிட்டார் அந்த அவப்பேர் எங்கப்பா காலம் போயி என் காலத்துக்கும் விடாமத் தொடர்ந்து வந்துச்சு இவ்வளவு பெரிய ஆளாகி மாலை மரியாதைன்னு நான் சபையில் தலைநிமிந்து நிற்கும் போது, கூட்டத்துல மூலையிலிருந்து ஒருத்தன் பார்ப்பான், பார்வையில முள்ளோட ’உங்க தாத்தனை எனக்குத் தெரியாதான்னு?. அவன் கண்ணு கேட்கும், சிரிப்பு கேட்கும், கும்பிட்ட கை கேட்கும்.  என் தலை தானாத் தொங்கிப் போகும்.  அப்படி ஒரு நாள் குனிஞ்சு நின்னப்போ முடிவு பண்ணினேன்.  இந்த முள்ளு என் பசங்களையோ, பேரப் பிள்ளைகளையோ குத்திக் கிழிக்க விடக்கூடாதுன்னு அன்னையிலிருந்து எம் பேரை மாத்தி எழுதனனும்னு ஒரு வெறி. முன்னூறு ரூபாய்க்கு அடிக்கிற துண்டு நோட்டீஸ்ல இருந்து மூணு    லட்சம் பேரு படிக்கிற பத்திரிக்கை வரைக்கும் எல்லா இடத்திலயும் என் பேர் வரணும்ன்னு திட்டம் போட்டு வேலை செஞ்சேன் பள்ளிக்கூடம், விளையாட்டுப் போட்டி, கோவில் கும்பாபிஷேகம், அரசாங்க கமிட்டி எல்லாத்துலயும் உறுப்பினரா சேர்ந்தேன். பணம் செலவழிச்சேன், பதவி வாங்கினேன். இன்னிக்கு இந்த ஊர்ல குறைஞ்சது ஒரு ஆயிரம் கல்வெட்டிலயாவது என் பேர் இருக்கும்’ பெருமை பொங்க சிரித்தவரை நண்பரின் அருகில் நின்றவாறு வியப்புடன் நோக்கினேன்.

’என் பாட்டன் பெயரை  இந்த ஊரோட ஞாபகத்துலர்ந்து அழிச்சி, என் பெயரை காலத்துக்கும் கல்லுல நிறுத்திட்டேன்னுதான் நினைக்கிறேன்’ ஏறி உட்கார்ந்தவர் கையசைக்க வண்டி நகர்ந்தது. வெகுநேரம் வரைக்கும் அவருடைய சொற்களை நான் நினைவில் அசைப் போட்டபடியிருந்தேன்.  நம்மில் மிகப்பலரும் நமக்கு வாய்த்த வாழ்க்கையை, நமக்குத் தோன்றியபடியோ அல்லது வாய்ந்தபடியோ வாழ்ந்து முடிக்கிறோம்.  வெகு சிலர்தான் வரலாறு தம்மை எவ்விதமாக நினைவு வைத்திருக்க வேண்டும் என்று கவனத்தோடு தங்களுடைய வாழ்வை நேர்கொள்கிறார்கள். அவர்கள் தம் உடல் அழிந்தபிறகும் உலகில் தமது பெயர் நிலைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.  தங்களுடைய இந்த சிறிய வாழ்க்கையினூடாக, பல பெரிய காரியங்களை செய்து முடிக்க வேண்டும் என்று முயல்கிறார்கள். தமக்கான திசையைத் தெரிவு செய்து நடக்கும் அவர்கள், அதன் வழியாக தம் விதியை தாமே எழுதிக் கொண்டுவிடமுடியும் எனவும் நம்புகிறார்கள்.  அந்த நம்பிக்கைகள் பலவற்றையும் அடித்துக் கொண்டோடும் காலவெள்ளத்திற்குத் தப்பி வரலாற்றில் பிழைத்திருப்பவை இற்சில பெயர்களே.  அதில் ஒரு பெயராக சங்க இலக்கியத்தில் காணப்படுவது தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்கிற நீளமான பெயர். சிறுவனான பாண்டியன் நெடுஞ்செழியன் தனது அரசை அபகரிக்கும் நோக்கோடு குறுநில மன்னர்கள் சிலரோடு சேர்ந்து தன்னை தாக்கவரும் சேர, சோழ அரசர்களை எதிர்நின்று வெல்லாவிடில் எனக்கு இவையெல்லாம் நேரட்டும் என வெஞ்சினம் உரைப்பதாக அமைந்தது பின்வரும் புறநானூற்றுப் பாடல்

நதேகக் கனரே நாடுமீக் கூறுநர்
இளையன் இவன்னெ உடையக் கூறி
புடுமணி இரட்டும் பாவடிப் பணைத்தான்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
புடையமை மறவரும் உடையம் யாம் என்று

உறுகுப்பு அஞ்சாது உடல் சினங் செருக்கிக்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருங்சமம் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய
என்னிழல் வாழ்நர் செல்நிழல் காணாது

கோடியன் எம்  இறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழித் துhற்றும் கோலேன் ஆகே
ஒங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைகிய பார்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாதுவரைகஎன் நிலவரை
புரப்போர் புன்கண்கூர
இரப்போர்க்கு ஈயா இன்மையான் வரவே

பாடல் எண் .  72
பாடியவர்  .  தலையாலங்கானத்து செருவென்ற
                 பாண்டியன்  நெடுஞ்செழியன்

திணை  .  காஞ்சி
துறை . வஞ்சினக் காஞ்சி

இப்போரில் நான் தோற்றால் இத்தகைய பழிகளெல்லாம் எனக்கு வந்து சேரட்டும் எனப் பாண்டியன் ஒரு பட்டியலிடுகிறான் இப்பாடலில் அதன் முடிவாக அமைவது, மாங்குடிமருதனைத் தலைவராகக் கொண்ட புலவர்கள் என் நாட்டினைப் பற்றி பாடாது போகட்டும் என்கிற வரி. ஒரு அரசனின் கொடைகளும், வெற்றிகளாலும் அவனது கீர்த்தி எழுகிறது. ஆனால் ஒரு புலவன் பாடுவதாலேயே அது நிலைக்கிறது.  ஒரு செய்தியாகப் பின்வரும் தலைமுறைகளுக்கும் சென்று சேர்கிறது.  அதனாலேயே வாளுக்கும், வில்லுக்கும் அஞ்சாத அரசர்களும் கூட புலவனின் சொல்லுக்கு அஞ்சினர்.  ஒரு அரசனாக மாத்திரமன்றி ஒரு புலவனாகவும் இருந்ததால் தானோ என்னவோ சொல்லின் நீடித்த இருப்பு குறித்து நெடுஞ்செழியனால் உணரமுடிந்தது போலும்.

*

அன்று பேருந்துநிலையத்திற்கு வழக்கத்தைவிட முன்னதாகவே வந்துவிட்டேன்.  நான் செல்ல வேண்டிய பேருந்து வருவதற்கு இன்னும் நேரமிருந்ததால், சுற்றிலும் பார்வையை ஒடவிட்டேன்.  வழக்கமான பரபரப்பும், இரைச்சலும் சற்றே மட்டுப்பட்டிருப்பதை  கவனிக்க முடிந்தது.  கடைகளின் வரிசை முடிந்து, குடிநீர் தொட்டி மறித்து நிற்கும் கிழக்கு மூலையில் ஒரு போலீஸ் ஜீப் நின்றிருந்தது ஒரு அதிகாரியும், நான்கைந்து காவலர்களும் நின்றிருந்தனர்.  கையில் நீண்ட கழியுடன், பேருந்திற்கு காத்து நிற்பவர்களை உற்றுப் பார்த்தபடி இருந்தார்கள். சற்று தள்ளிப் பேருந்துகள் வெளியே செல்லும் பிரதான வாயிலருகே ஒதுங்கினாற்போல ஒரு வெள்ளை வேன் நின்றிருந்தது.  அதன் ஜன்னல்கள் கம்பிவலையிடப்பட்டிருக்க, காவல் என்ற எழுத்துக்கள் சிவப்புநிறத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது.  அசாதாரணமான ஏதோ ஒன்று நிகழவிருப்பதான அனுமானம் கூட்டத்தினருக்கு மேலிட்டிருக்க, காவலர்களுக்கு பின்புறமாக வெகுவாக தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.  காவலதிகாரி மணிக்கட்டை திருப்பி தன் கடிகாரத்தில்  நேரம் பார்த்தவர், தொப்பியை கழற்றி வியர்த்த தலையைத் துடைத்துக் கொண்டார்.  காவலர்கள் அவர் ஏதேனும் சொல்லக்கூடும் என்பதாக அவர் முகத்தையே நோக்கியவாறு அசிரத்தையாக நின்றிருந்தனர்.  அப்போது நான் நின்றிருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இடதுபுறம் திடீரென ஒரு சலசலப்பு எழுந்தது.  பேருந்து ஒன்றின் பின்புறமிருந்து சட்டென்று வெளிப்பட்ட ஐந்தாறுபேர் தம் கையில் சுருட்டிபிடித்திருந்த நாளிதழ்களை தரையில் வீசி எறியவும், அவர்களில் ஒருவன் அதில் ஒரு தீக்குச்சியை உரசி எரிந்தான்.  நொடியில் பற்றிய தீ திகுதிகுவென எரிய, இன்னொருவன் மேலும்சில கற்றை நாளிதழ்களை அத்தீயில் வீசும் முன், சுதாரித்து கொண்டு ஒடிவந்த காவலர்களில் ஒருவர் அதைப்பிடுங்கிக் கொண்டார்.  இன்னொரு காவலர் பக்கத்திலிருந்த டீக்கடையிலிருந்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து எரியும் தீயில் ஊற்றி அணைத்தார். இவையெல்லாம் ஒரிரு நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது பிறகு அக்குழுவினர் மீதமிருந்த நாளிதழ்களை வீசிவிட்டு கையை உயர்த்தி கோஷமிட்டனர் முன்தினம் அந்நாளிதழ் வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை முன்னிட்டே இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது என்பதை அவர்களுடைய  அந்த முழக்கங்களிலிருந்து  புரிந்து கொண்டேன் காவலர்கள் அவர்களை நடத்திச் சென்று வரிசையாக வேனில் ஏற்றினர்.  வேன் புறப்படும் வரையிலும் ஜன்னல் பக்கமிருந்து அவர்கள் முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் காலை அலுவலகத்தில் அந்நாளிதழை எடுத்துப் புரட்டினேன் முதல் பக்கத்திலேயே வலது ஓரத்தில் அந்நிகழ்வைக் குறித்து ’வன்முறைக் கும்பல் வெறியாட்டம் போலீஸ் மெத்தனம்’ என்று இரண்டு பத்தி செய்தி கட்டம் கட்டி வந்திருந்தது அன்றாட அரசியல் நிகழ்வுகளை கூட சாதிய மேலாண்மை நோக்குடன் திரித்து நோக்கி, குயுக்தியாக செய்திகளை வெளியிடுவதையே வாடிக்கையாகக் கொண்டது அந்நாளிதழ் வாசகர் கடிதம் என்ற போர்வையில், வெவ்வேறுப் போலிப் பெயர்களில் தன் சார்புக் கருத்துகளை பிரசுத்து மகிழ்வதும் அதன் வழக்கம்.  எனவே தீவிரமான மொழி, இன, சித்தாந்தப் பற்றுக்கொண்ட சில சிறுகுழுக்கள் அந்நாளிதழுக்கு எதிராக இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் அவ்வப்போது ஈடுபடுவது உண்டு. அரசிற்கோ, பெருநிறுவனங்களுக்கோ தமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக நிகழ்த்தப்படும் இதுபோன்ற மக்கள் திரள் ஆர்பாட்டங்கள் ஜனநாயகத்திற்கு வலு சேர்ப்பவை.  அவை பெரிய அளவில் வெற்றி பெறாது போனாலும் கூட, குறியீட்டு அளவில் முக்கியமானவையாக கருதப்படும்.  அதே சமயம் ஆளும் கட்சியோ அல்லது ஏதேனும் பெரு நிறுவனங்களோ தமது அதிகாரம் அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி மக்களின் கருத்து வெளியீட்டு உரிமையை தடுக்க முயற்சித்தால் அது ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறையாகவே நோக்கப்படும்.  ஒரு நிலப்பரப்பை, மக்கள் ஒட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கம் ஆட்சி செய்கிறது என்பதால் மட்டுமே அது ஜனநாயக நாடாகிவிடாது.  அங்கு எல்லாவிதமான கருத்து வெளியீட்டிற்கும் வழிவகைகள் இருந்தால் மட்டுமே அந்நாட்டில் மெய்யாகவே ஜனநாயகம் நிலவுவதாகக் கொள்ளமுடியும்.  கருத்துச் சுதந்திரம் என்பது நாம் விரும்பும் கருத்தை வெளியிடுவதற்கான உரிமை மட்டுமில்ல, நாம் வெறுக்கும் கருத்தை எதிர்கொள்வதற்கான சகிப்புத் தன்மையையும் உள்ளடக்கியதே ஆகும்.  கலிலியோ தொடங்கி அசாஞ்சே வரையிலும் தமது கருத்து வெளியீட்டிற்காக அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி அவதியுற்றவர்கள் பட்டியல் வெகு நீளமானது.

எல்லா அதிகாரமையமும், தனக்கு எதிரான கருத்தாக்கங்களை அடுக்குமுறை மூலமாகவே எதிர்கொள்ள முயலுகின்றன.  இதில் முடியாட்சி, மக்களாட்சி, சர்வாதிகார ஆட்சி, மதசார்பு ஆட்சி, மதசார்பற்ற ஆட்சி, ஏகாதிபத்திய ஆட்சி, கம்யூனிச ஆட்சி என்ற வேறுபாடு எதுவும் கிடையாது.  உண்மையில், எந்த அரசும் தமக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்கள், அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து மிகையாக அலட்டிக் கொள்வதில்லை. மாறாக தம் மக்களின் மூளையில் எளிதாகத் தொற்றிப் பரவும் கருத்தாக்கங்கள் குறித்தே பெரிதும் அஞ்சுகின்றன. அவை மருந்திற்கு கட்டுப்படாத, நுண்ணுயிரிகள் போன்றன. ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, இலட்சம் கோடியென பல்கிப் பெருகுபவை. அவை பயணிக்கும் திசையையும், வேகத்தையும் ஒற்றறிந்து தடுப்பது எந்த படையினருக்கும் அசாதாரணமான காரியம்.  ஆகவேதான், எல்லா காலத்திலும் ஆளுபவர்கள் ஏதோதோ காரணங்களை முன்னிட்டு, அச்சிடப்பட்ட புத்தகங்களை கண்டு அஞ்சி அவற்றை தடை செய்து வந்துள்ளனர். உண்மையான ஆயுதங்கள், ஏவுகணைகளோ, வெடிகுண்டுகளோ, துப்பாக்கிகளோ அல்ல புத்தகங்கள்தான். சக்கரங்கள் கண்டுபிடிப்பப்பட்டதற்கு சற்றும் குறையாத புரட்சிகரமான கண்டுபிடிப்பு அச்சுக்கலை.

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, பிரபல மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவத்தை வாசித்தேன்.  சுகுமாரன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருந்தார். அதில் உலகம் முழுவதிலும் பல்வேறு காலங்களிலும், மொழிகளிலும் தடைசெய்யப்பட்ட, எரியூட்டப்பட்ட புத்தகங்களின் நீண்ட வரிசையை அவற்றின் வரலாற்றுப் பின்புலத்தோடு விளக்கியிருந்தார்.  தனிமனிதர்களுக்கு கேளிக்கை இன்பம் நல்குவதற்காக உருவாக்கப்படும் பொழுது போக்கு சாதனமாகிய ஒரு நூல், எவ்வாறு மாற்றத்தை விளைவிக்கும் அரசியல் செயல்பாடாக மாற்றமடையக் கூடும் என்பதை அவ்வுரையில் சச்சிதானந்தன் தெளிவுபடக் கூறுகிறார்.  அழித்தொழிக்க எத்தனிக்கப்பட்ட புத்தகங்களின் நெடிய வரிசையொன்றை வரலாற்றின் தொல்பழங்காலம் தொட்டு எடுத்து முன்வைக்கும் சச்சிதானந்தனின் கண்களில், மிகச் சமீபத்தில், சில பத்தாண்டுகளுக்கு முன்னாக எரியூட்டப்பட்ட யாழ்நூலகச் சம்பவம் ஏன் தென்படவில்லை? என்பதாக, அக்கட்டுரையின் இறுதியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஒரு குறிப்பை எழுதியிருந்தார் சுகுமாரன். அதை சச்சிதானந்தனின் கவனக்குறைவு என்று குறையிரப்பதை விடவும், அச்சம்பவத்தை ஒரு வரலாற்றுக் குற்றமாக, கலாச்சார அழித்தொழிப்பாக உலகத்தின் மனசாட்சி முன் நிலைநிறுத்த முடியாமல் போன நம்  இயலாமையை நொந்து கொள்வதே சாலவும் பொருந்தும்.  ஏறத்தாழ இலட்சத்திற்குமதிகமான புத்தகங்கள் அப்போது எரியூட்டப்பட்டது.  எரிந்தது வெறும் காகிதங்களும், மிஞ்சியது கரும் சாம்பலும் மட்டுமில்லை, ஒரு கலாச்சாரத்தின் நினைவுச் சேகரம் முழுவதையும் வெந்தணலில் இட்டு அழித்த கொடூரம் அது.   மொழிப் பற்றும், இனஉணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனின் நினைவிலும் ஒரு கொடுங்கனவாய் பதிந்து போன துயர நிகழ்வு அது.  ஒரு மனிதத் தொகையின் நினைவினின்றும் அதன் பண்பாட்டு, கலாச்சாரப் பதிவுகளை அழித்து விடுவதன் வாயிலாக, அவர்களை வெறும் எண்ணிக்கைகளாக மாற்றிவிட முடியும்.  பிறகு அவர்களை வெகு எளிதாக வேறு எந்த தொகையுடனும் கூட்டவோ, கழிக்கவோ செய்யலாம்.  பெரு வணிக நிறுவனங்களும் பன்னாட்டு நிதியங்களும் உலகளாவிய அவற்றின் வலை பின்னல்களும் அந்நிலையை நோக்கியே நம்மை நகர்ந்ததுகின்றன.  இதற்கு மாறாக மொழி தனது நினைவுச் சேகரங்கள் வழியாக நம்மை தொடர்ந்து பண்பாட்டுடனும், வரலாற்றுடனும் பிணைத்து வைக்க முயலுகிறது.  அவ்வகையில், யாழ்நூலக எரிப்புச் சம்பவத்தை மையமாகக் கொண்டு சு.வில்வரத்தினம் எழுதிய கவிதை, மிக முக்கியமானதொரு பண்பாட்டு ஆவணமும் ஆகும்.

தன் தகுதிக்குரிய இடத்தையும், புகழையும் பெறாமலேயே மறைந்து போன துரதிர்ஷ்டசாலியான தமிழ் எழுத்தாளர்களில் வில்வரத்தினமும் ஒருவர்.  சில வருடங்களுக்கு முன்னர் விடியல் பதிப்பகம் வெளியிட்ட அவரது மொத்த கவிதை தொகுப்பை தவிர, அவருடைய பிற நூல்கள் எதுவும் இப்போது அச்சில் இருப்பதாகத் தெரியவில்லை. இக்கவிதையின் தனிச்சிறப்பு இதில் தொனிக்கும் உணர்ச்சித் தீவிரம்தான் காய்ந்த சருகில் பற்றும் தீ போல இக்கவிதையில் சொற்களை உண்டு செறித்து மேலெழும் உணர்வைக் காணலாம்

சங்கப் பலகையிலே
சரிக்கட்டி வைத்த தொட்டில்
தொட்டிலிலே கண் வளர்ந்திருந்தவை
குழலும்தான், யாழும்தான், முழவும்தான்,
மனித முயல்வின் திறன் முழுதும்தான்.
தொட்டிலுக்குக் காவலாய்
ஆயகலைகளின் தாய்
மடியிலே மழலையென வீணை
வீணையை மெலிதாய் மீட்டியதென்ன
மேவும் மாலைப் பொழுதும் சாய
பிறை வெண் குருத்தைச் சப்பியபடி
பிளிறியெழும் கரிய இருள்
இருளின் அடர்வு
ஊதுபத்தி அவியும் சுடரின்
புகை, குமைச்சல்,
துர்வாடையின் அடைவு
துட்டாத்மாக்களின் அடைவு
துட்டாத்மாக்களினதேதான்
உள்ளக் கமலங்களை ஒங்கி மிதித்தபடி
கொள்ளிக் கண் பரிகலங்கள்
கலை வளரும் தொட்டிலுக்குத்
தீ மூட்டிவிட்டு
கோட்டையின் கபாடங்களுக்குள் மறைந்துகொள்ள
தீ மூண்டெரிக்கிறது.

எரிகின்ற தீயிடை குழலும்தான், யாழும்தான்
முழவும் தான், மனித முயல்வின்
திறன் முழுதும்தான்
பிள்ளைத் தமிழின் பிடிசாம்பரள்ளிப் போய்
மாவலியில் கரைப்பமென
வாடி போட்டிருந்தவரின் வஞ்ச மனத்தகத்தே
போலும் தீ மூண்டெரிகிறது
தீயின் வீச்சம் திசைகளைச் சுட்டது
வீசு மீட்டியிருந்த தாயின்
நாத மணித்தளிர் விரல்களைச்
சுட்ட போதங்கு
மாசில் வீணை நரம்புகள் கேவின,
குழலும் குழல்வழிப் பல்லியமும் தேம்பின,
முழவின் ஏங்கின மனிதமுயல்வின் திறனெலாம்
தாயவள்,
தமிழ்தம் உணத் தந்த கலைத்தெய்வதம்,
பூண்டிருந்த வெள்ளைப் பணியெல்லாம் புகைபடர
ஆய கலைகளெல்லாம் அவனைச் சூழ நின்று
பாலுக் கிரந்தழுத பரிபாடலை நான்
எப்படிப் பாடுவேன்?
பாடத்தான் வேண்டும் ?
காற்றிலேறி, கனைகடலை, நெருப்பாற்றை
மலைமுகடுகளைக் கடந்து
செல் எனச் செல்லுமோர் பாடலை
கபாடபுரங்களை காவுகொண்ட பின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்
உரமெல்லாம் சேரப் பாடத்தான் வேண்டும்
ஏடு தொடங்கி வைத்து என்னம்மை
மண்ணிலே தீட்டித் தீட்டி எழுதுவித்த
விரல் முனையைத் தீயிலே தோய்த்து
திசைகளின் சுவரெலாம் எழுதத்தான் வேண்டும்
எழுகின்ற யுகத்தினோர் பாடலை.

தமிழ் புதுக்கவிதைகளின் செம்பாகமும் வேரற்ற நீர்த் தாவரம் போன்றவை.  தம் மொழியின் சாரத்தை உள் வாங்கிப் பூக்கும் தெம்பற்று அந்நிய தத்துவம், அரைகுறை கோட்பாடு என அங்குமிங்குமாய் அல்லாடிக் கொண்டிருப்பனவே அவற்றுள்ளும் மிகுதி.  வில்வரத்தினத்தினத்தின் கவிதைகள் இத்தன்மைக்கு நேரெதிராக அமைந்தவை.  அவருடைய சிறிய கவிதை ஒன்றின் எளியவரிகூட ஒரு தொன்மையான மரபின் வாரிசு அவர் என்பதை அழுத்தமாக நினைவுறுத்தும்.  இக்கவிதையை எனக்குப் பரிந்துரைத்த நண்பர் ’தமிழ்தம் உணத் தந்த கலைத் தெய்வதம்’ என்று ஒருவரால் எழுத முடிந்திருக்கிறதே இதற்குமேல் வேறென்ன வேண்டியிருக்கிறது என உருகிப் போய் கேட்டார்.  தமிழ், அமுதம் என்ற இரு சொற்களும் முழங்கி ’தமிழ்தம்' என ஆட்சி பெறுகையில் மேலெழும் உணர்வெழுச்சியே நண்பரின் தழுதழுப்பிற்கு காரணமாயிருந்தது. மரபுச்செழுமை, வரலாற்றுப் பெருமிதம், அறச்சீற்றம், ஆற்றாமை கண்ணீர், கழிவிரக்கம், உளக்கொதிப்பு, உத்வேகம் என மாறி மாறி மேலிடும் உணர்வுகளால் வரையப்பட்ட இக்கவிதையை வாசித்து முடிக்கையில், சொல் ஏதுமற்று மயானம் கலையும் உறவின் துயரமாய் நம் நெஞ்சைக் கவ்வும் வேதனையை உணர்கிறோம்.

 வரலாற்றினை ஊன்றிக் கற்பவர்கள் அதன் ஒரு அம்சத்தை, அதனுடைய மீள நிகழும் தன்மையைக் கவனிக்கத் தவறமாட்டார்கள்.  ஏறக்குறைய ஒரே தன்மையிலான நிகழ்வுகள், வெவ்வேறு காலங்களில், வேறுவேறு இடங்களில், வேறு பல கதாப்பாத்திரங்களோடு திரும்ப திரும்ப நிகழ்ந்திருப்பதை ஒருவர் அவதானிக்க முடியும்.  இங்கு பாண்டியன் நெடுஞ்செழியனின் சொற்களிலும், வில்வரத்தினத்தினுடைய வரிகளிலும் வெளிப்படுவது ஒரே வகையிலான உணர்வுதான்.  வலியோரின் சூழ்ச்சிக்கும், அடக்குமுறைக்கும், அநீதிக்கும் எதிராக நிற்க நேரிடுகையில் எளியபொருவனிடத்தே எழும் கொதிப்பும், ஆற்றாமையும், வெஞ்சினமும் தான் இவ்வற்றுள் தொனிக்கிறது.  கட்டுவித்த சில கோவில்களையும் வெட்டுவித்த சில ஏரிகளையும் தவிர, சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எச்சமென்று இன்று எதுவும் மிஞ்சியிருக்கவில்லை.  ஈழத்தில் எரிக்கப்பட்ட புத்தகங்களுக்கு பதிலாக இன்று வரையிலும் ஏழாயிரம் பக்கங்கள் எழுதிச் சேர்க்கப்பட்டுவிட்டன.  காலம் கழிகிறது.  கல் அழிகிறது.  மொழியின் நினைவில் சொல் மாத்திரம் நின்று எரிகிறது. 

நன்றி
தக்கை, கபாடபுரம்