Tuesday 25 August 2020

மாமதயானை

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவை முன்னிட்டு , ஜெயமோகனும் நண்பர்கள் சிலரும் திருப்பூர் அருகில் உள்ள ஒரு சிறிய பள்ளிக்குச் சென்றிருந்தோம் . செவித்திறன் இழந்த , வாய் பேசவியலாத குழந்தைகள் நூற்றுக்கும் அதிகமானோர் பயிலும் சிறப்பு பள்ளி அது .'குக்கூ' சிவராஜ் அப்பொழுது அங்கிருந்தார் அவருடைய முன்னீட்டில் 'யானை டாக்டர் 'சிறுகதையை அக்குழந்தைகள் வாசித்திருந்தனர். அந்த அனுபவத்தை தங்கள் கற்பனையின் துணை கொண்டு கோட்டோவியங்களாக வரைந்து வண்ணம் தீட்டி இருந்தனர். ஒரு வகுப்பறை முழுவதிலும் அவர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சித்திரங்களைக் கண்டதும் நாங்கள் நெகிழ்ந்து போனோம் .சிறிதும் பெரிதுமான அளவுகளில் கறுப்பு மட்டுமல்லாது சிவப்பு ,பச்சை ,நீலம் என எல்லாவிதமான நிறங்களிலும் மிளிர்ந்தன யானைகள் . அவை எல்லாவற்றிலும் தென்பட்டதொரு ஒற்றுமை , அவை அனைத்துமே ஏகதேசமாக குழந்தமையின் சாயலை கொண்டிருந்தன என்பதுவே அல்லது அச்சித்திரங்களின் எளிமையினால் பார்த்த எனக்கு அவ்வாறு தோன்றியிருக்கலாம். 

விழா அரங்கில் அக்குழந்தைகளின் முன் சிவராஜ் 'யானை டாக்டர் 'எழுதியவர் என்று ஜெயமோகனை அறிமுகப்படுத்தியபோது பலமாக கரவொலி எழுப்பிய அக்குழந்தைகளின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியும் உற்சாகமும் அளவில்லாதது . தன் எழுத்துக்காக எவ்வளவோ வாசக எதிர்வினைகளை ஜெயமோகன் கண்டிருப்பார் , அவை அனைத்தையும் காட்டிலும் இக்குழந்தைகளின் நன்றி பெருக்கு நிச்சயம் தனியான ஒன்றுதான். ஒருவேளை ஜெயமோகனின் வேறு ஒரு கதையை படித்து இருந்தால் , அவர்கள் இவ்வளவு தூரம் ஈர்க்கப்பட்டிருப்பார்களா என்பது ஐயமே ?  யானைதான் அக்குழந்தைகளின் குதுகுலத்திற்கு முதன்மையான காரணம் என்றும் தோன்றியது. பொதுவாகவே தம்மைக் காட்டிலும் அளவில் பெரியதான உருவம் எதைக் கண்டாலும்  குழந்தைகள் முதலில் அடையக்கூடிய உணர்வு திகைப்பு அல்லது அச்சம் என்பதாகவே இருக்கும் . அதற்கு நேர்மாறாக , ஒரு யானையைக் காணும் போது அவர்கள் உற்சாகம் அடைகிறார்கள் இது வினோதமாக தெரிந்தாலும் கூட யானையின் தோற்றம் அல்லது நடத்தையில் குழந்தைகளை ஈர்க்கக் கூடிய ஏதோ ஒரு தன்மை இயல்பாகவே இருக்கிறது. அதன் ஆகிருதியைக் கண்டு மிரட்சி அடைவதற்கு பதிலாக அதனை அளவில் பெரியதொரு விளையாட்டு பொம்மை என்பதாகவேக கருதி அதன் மேல் ஏறி விளையாட ஆசைப்படுகிறார்கள்.

தரைவாழ் விலங்குகளிலேயே மிகப் பெரியது யானைதான். சராசரியாக 6 ஆயிரம் கிலோ வரையிலும் எடையைக் கொண்டிருக்கும் அது கோவில் மண்டபங்களில் காதுகளை அசைத்தபடி அசட்டையாக நின்றுகொண்டு ஒரு வாழை பழத்திற்காக பக்தர்களை ஆசீர்வதிக்கும் . அதன் தும்பிக்கை தனித்தன்மை வாய்ந்தது அதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. அதைக்கொண்டு மெலிந்த ஒரு குண்டூசியை கூட அதனால் தவறவிடாமல் பொறுக்கி எடுத்துவிட இயலும். ஆனால் அதுவோ பாகனால் தெருவில் நடத்திவரப்படிகையில் அந்தத் துதிக்கையை நீட்டி கடைகடையாக சில்லறை வேண்டி யாசிக்கிறது. அபாரமான நினைவுத் திறன் உடையதாகக் கணிக்கப்படும் யானையை , ஒரு கண்ணாடி முன் நிற்க வைத்தால் , அதனால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியும். மனிதக் குரங்குகளைத் தவிர்த்து இத்தகைய தன்னுணர்ச்சி கொண்ட விலங்கு யானைதான் என்கிறார்கள் உயிரியலாளர்கள். 

அதனால்தானோ என்னவோ மனிதர்களால் எளிதில் பழக்கப்படுத்த கூடிய ஒன்றாக இது இருக்கிறது .தனது வலிமையை முழுமையாக உணர்ந்த ஆனால் அதை அநாவசியமாகப் பிற உயிர்களிடம் காட்டிடாத  ஒரு பெருந்தன்மை அதனிடம் இயல்பாகவே இருக்கிறது. ஒரு தலைவனுக்குரிய தகுதியாக அமைய வேண்டியது இத்தன்மையே ஆகும். இலகுவான சூழலில் எல்லோராலும் எளிதில் அணுகும்படியானவனாகவும் அதுவே , அசாதாரணமான தருணம் என்று  வரும்போது அஞ்சாது அதை எதிர்கொள்ளும் அளவு இறுகிய நெஞ்சத்தவனாகவும் அவன் இருக்கவேண்டும் . அவ்வையார் பின்வரும் புறநானூற்றுப் பாடலில் யானை என்கிற ஒற்றை படிமத்தின் வாயிலாக அதியமான் நெடுமான் அஞ்சியை அவ்வாறான வலிமையும் எளிமையும் கொண்ட ஒரு தலைவனாக நமக்கு காட்சிப்படுத்துகிறார்.

 

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழா அலின்

நீர்த்துறை படியும் பெருங்களிரு போல

இனியை , பெரும! எமக்கே; மற்றுஅதன்

துன்அருங் கடாஅம் போல

இன்னாய், பெரும!நின் ஒன்னா தோர்க்கே.

-        அவ்வையார்

புறம்-94

திணை- வாகை

துறை- அரச வாகை

 

ஊரின் கண் உள்ள சிறுவர்கள் கூடி , தனது வெண்மையான தந்தங்களைக் கழுவுவதற்கு ஏதுவாக நீர் துறையில் அமிழ்ந்திருக்கும் பெரிய யானையை போல எம்மனோர்க்கு நீ இனியவன் . ஆனால் , அதே யானை மதம்கொண்டு சினந்து எழுவதே போலும் எம் எதிரிகளுக்கு நீ இன்னாதவன் என்பதே இப்பாடலில் எளிய பொருள்

 சிங்கமாகவும் புலியாகவும் இருந்து அஞ்சி நடுங்கச் செய்வதில்லை ஒரு யானையைப் போல் வலிமை இருந்தும் சக உயிர்களிடத்தே மென்மையாக இருப்பதே மெய்யான வீரம் ஆகும் .

            +++

ஒரு கோடையில் , நண்பர்கள் சிலர் பர்கூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் அருகே , சிறிய கல் வீடு ஒன்றில் தங்கி இருந்தோம் . உப்பும் உறைப்பும் போதாது ,  நாங்களே சமைத்து உண்ட எளிமையான இரவு உணவிற்குப் பிறகு , முன் வாசல் திண்ணையில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டிருந்தோம். மின் வெளிச்சத்தின் எதிரீடு ஏதுமில்லாத வானத்தில் , எட்டிப் பிடித்தால் அள்ளிக் குவித்து விடலாம் போலக் கொட்டிக்கிடந்த நட்சத்திரங்களை வியப்போடு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில் , திடுமென  கூப்பிடு தூரத்தில் கூச்சல் எழுந்தது . தொடர்ந்து விட்டுவிட்டு சிறிய வெடிச் சத்தமும் சேர்ந்து வந்தது.

 அந்தக் கூச்சலோடு அத்திசையில் இருந்து அணைந்து எரியும் விளக்குகளின் வெளிச்சமும் எங்களை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டோம் 'யானை இறங்கியிருக்கும்' உற்று கவனித்த உள்ளூர் நண்பர் சொன்னார் .சில நிமிடங்களில் நாங்கள் இருந்த  இடத்திற்கு

எதிரே , கண் எட்டும் தொலைவில் இறக்கத்தில் இருந்த பாதையில், மேலும் கீழுமாக அசையும் விளக்குகளின் வெளிச்சத்தில், உலோகத்தை தட்டுவதால் எழும் கனத்த  ஒசைக்கு  நடுவே, ஓட்டமும் நடையுமாக விரையும் யானை ஒன்றைக் கண்டோம் .காட்டின் எல்லை வரை அதைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவார்கள் என்றார்  நண்பர். முன்பு அரிதாக நடக்கும் ஒன்றாக இருந்தது இப்பொழுது அடிக்கடி நிகழும் சம்பவமாகிவிட்டது . அதற்கு யானைகளைக் குறை சொல்ல முடியாது .ஒரு யானைக்கு உணவாக நாளொன்றுக்கு சராசரியாக 200 கிலோவுக்கும் அதிகமான பசுந்தழை தேவைப்படும். கூட்டமாகச் சென்று அவை உண்பதால் அழிந்து போகும் இடத்தை விட்டு பெயர்ந்து வேறு இடத்திற்கு  சென்று, செடிகள் வளர்ந்தபிறகு அவ்விடத்திற்கு அவை திரும்ப வரும் .அவ்வாறான இடப்பெயர்ச்சிக்கு உகந்ததாக அல்லாமல்  அடர்ந்த காடுகளின் பரப்பு சுருங்கி போனதாலும் அவற்றின் வலசை பாதைகள் மனிதர்களால் தடைசெய்யப் படுவதாலும் யானைகள் இவ்வாறு ஊருக்குள் திரும்பி விடுகின்றன என்றார். அவர் குரலில் , மனுஷங்க பிழைப்பே நிச்சயம் இல்லாத காலத்தில் , இதற்கெல்லாம் யார்தான் என்ன செய்துவிட முடியும் என்பதை போல வருத்தம் தொனித்தது .

 நாங்கள் சற்று நேரம் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை .அவரவர் எண்ணங்களில் ஆழ்ந்திருந்தோம். முன் இரவில் நட்சத்திரங்களின் மெல் ஒளியில் , ஒரு பெரிய கரிய நிழலைப் போல நகர்ந்து சென்ற அப் பேறுருவைப்  பார்த்தது , ஏதோ ஒரு கனவு போல தோன்றியது. வெகு காலம் முன்பாக படித்திருந்த கதை ஒன்று எனது நினைவில் எழுந்தது .

 ஒரிரண்டு நல்ல கதையோ கவிதைகளோ எழுதிவிட்டு , அதன் பிறகு காணாமல் போய்விடும் எத்தனையோ பேர் தமிழில் இருக்கிறார்கள். கோவில்பட்டியை சேர்ந்த கௌரிசங்கர் அவர்களில் ஒருவர் . முழுவதும் கறுப்புத் தாள்களில் வெண்ணிற எழுத்துகளால் அச்சிடப்பட்டு வந்த அவருடைய கவிதைத் தொகுதியான ' மழைவரும் வரையில் ' அது வெளியான காலத்தில் அதிகமும் கவனிக்கப்பட்டது. கூடி வராத நேசம் குறித்த இழப்புணர்வை கழிவிரக்கம் தொனிக்காததொரு விட்டேற்றியான குரலில் பேசுபவையாக அமைந்தவை அக்கவிதைகள் என்று நினைவு. அவரது சிறுகதைத் தொகுப்பும் வெளியாகிருந்தது. தலைப்பு கதையாக அமைந்த 'முந்நூறு யானைகள்' என்ற சிறுகதை மெர்ஸி என்கிற பதின்ம வயதுப்பெண்ணைப் பற்றியது .

 அவ்வயதிற்கே உரிய பேதமையும் விளையாட்டுத்தனமும் அதே சமயத்தில் , பார்க்கின்ற ஆண்களை எல்லாம் பேதலிக்கச் செய்கிற அழகும் நிரம்பியவள் அவள்.  எல்லா அழகிகளைப் போலவும் அவளைக் குறித்தும் உண்மையும் கற்பனையுமாக பல வதந்திகள் ஊரில் உலவுகிறது. அக்கதையில் மெர்ஸி ஒரு சந்தர்ப்பத்தில் தனக்கு வந்த கனவு பற்றி தன் சினேகிதி தனசீலியிடம் விவரிப்பாள். ' நேற்று இரவு என் வீட்டுத் தோட்டத்தில் முப்பதாயிரத்து தொள்ளாயிரத்து ஏழு  யானைகள் வந்து நின்றன. அவ்வளவையும்வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்? வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் இருநூறு முந்நூறு என்று கொடுத்து அனுப்பியதில் தோட்டம் காலியாகிவிட்டது' என சிரித்துக்கொண்டே சொல்கிறாள் கனவில்தான் என்றாலும் , யானைகளைத் தூக்கிக் கொடுக்க எவ்வளவு விசாலமான மனம் வேண்டியிருக்கும். அந்த மனமே பிறகு அவளது அத்தனை துயரத்திற்கும் காரணமாக எப்படி அமைந்துவிடுகிறது என்று அந்தக் கதை விவரித்து போகும் .

 பாம்பு துரத்துவது , பள்ளத்தில் விழுவது என நம்மில் பலருக்கும் வரும் பொதுவான கனவுகள் சில உண்டு. அவற்றில் ஒன்றுதான் அறிமுகமற்ற புதிரான ஒரு இடத்தில் வெளியேற வழி தெரியாமல் நாம் அகப்பட்டுக் கொண்டு தவிப்பது போல் வரும் கனவு. அறிமுகமற்ற ஒரு நகரத்திற்கோ, பணிக்கோ பந்தத்திற்கோ அல்லது பழக்கத்திற்கோ  நாம் ஆட்படும்போது ,  அறியத் துடிக்கும் ஆவலில் உள்நுழைந்து விடுவது எளிதாக இருக்கும்.  அகப்பட்டுக் கொண்டதாக ஒரு அச்ச உணர்வு எழும்போது பார்த்தால் , திரும்பும் வழி தெரியாது திகைத்து நிற்போம். போகிற வழியில்தான் திரும்ப வருகிறோம் என்றாலும் இரண்டும் ஒன்றல்ல அவை இரண்டு  வெவ்வேறு பயணங்களால் ஆனது .

 கல்யாண்ஜியின் பின்வரும் கவிதையிலும் ஒரு யானை அவ்வாறு ஒரு வாசல்வழி நுழைந்துவிட்டு வெளியேற வழி தெரியாமல் அகப்பட்டுக் கொள்கிறது. 

சொப்பன வாசல்

________________

 உங்களுக்குத் தெரியும்

எங்கள் வீட்டுத் தலவாசல்

சிறியதும் இல்லை, பெரியதும் இல்லை

சொப்பனத்தில் வந்த யானையை

வெளியே விரட்டுகிறோம் எல்லோரும்

' இவ்வளவு சின்னவாசல் வழியாக

எப்படிப் போவேன்? ' அழுகிறது.

' போகிற வாசலாக அல்ல,

வருகிற வாசலாக நினைத்துப்

போ ' என்கிறோம்

போய்விட்டது சிரித்துக்கொண்டே

        - கல்யாண்ஜி

    ( நொடி நேர அரை வட்டம்)

 

ஒரு தீற்றல் கூடுதலோ குறைவோ இன்றி துல்லியமாக வரையப்பெறும் ஒவியங்களை ஒத்தவை கல்யாண்ஜியின் பெரும்பாலான கவிதைகள் . இக் கவிதையும் அத்தகைய கச்சிதமான காட்சித்தன்மை கொண்டதே.ஒரு சொல்லையும் கூடுதல் குறைவென்று ஒதுக்கவியலாது.நிற்க இதிலும் ஒரு யானை வெளியேறும் வழி தெரியாமல் திகைத்து நிற்கிறது. நினைத்தால் வாசலென்ன வீட்டையே கூட அதனால் அசைத்து தகர்த்துவிட முடியுமாகயிருக்கும். ஆனால் அதுவோ வழி தெரியாமல் அழுகிறது . ஒரு குழந்தையைப் போல. தெரிந்த பிறகோ சமாதானமடைந்து சிரிக்கிறது . அதுவோ இன்னும் குழந்தையைப் போலிருக்கிறது. தன் உருவத்திற்கு சம்மந்தமில்லாத உள்ளம் கொண்ட உயிரி அது.அதனால்தான் போலும் 'இயற்கையின் உன்னதமான படைப்பு யானைதான் , தீதொன்றுமிலாத பேருரு அது ' என்று ஆங்கிலக் கவி ஜான் டன் விதந்து கூறுகிறான்.

 நிர்வாகவியலில் 'சட்டகத்திற்கு  வெளியே சிந்தித்தல்' என்றொரு கருதுகோள் உண்டு . சிக்கலான பிரச்சினைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்ட மரபான வழியாகவே தீர்வுகாண முயல்வதை விடவும் ,  முறை சாராத யோசனைகள் மூலம் சமயங்களில் மிக எளிதான தீர்வைக் காண முடியும் என்கிறது அது. போகிற வழியையே வருகிற வழியாகவும் எண்ணிக் கொள் என்று இக்கவிதையில் அத்தகையோர்  யோசனையைதான் கவிஞர் முன்வைக்கிறார். முதல் வாசிப்பிற்கு இது ஏதோ மொழி மாற்றம் என்று தோன்றலாம் . ஆனால் அது எண்ணம் சார்ந்த மாற்றமாகவும் பிறகு செயல் சார்ந்த மாற்றமாகவும் ஆகும்போது வழி கிடைத்து விடுகிறது .

 டினோசரை  நெருங்குவது எப்படி ? என்கிற கேள்விக்கு ,  அது நம்மை நெருங்க செய்வதுதான் என்கிறார் தனதொரு கவிதையில் தேவதச்சன். இது கேட்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் , அதற்கு நாம் ஒரு வனமே ஆகுமளவிற்குப் பொறுமையுடனும் நிபந்தனையற்றும்  காத்திருக்க வேண்டும் . டினோசரை நெருங்குவதற்கு மட்டுமல்ல ஒரு கவிதையை நெருங்குவதற்கும்  கூட.

No comments:

Post a Comment